1150 x 80 px

 

அமெரிக்காவின் சொர்க்கபுரி லாஸ் வேகாஸ்

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரம் அந்நாட்டின் சொர்க்கபுரியாக விளங்குகிறது. தூங்கா நகரமான அங்கு 24 மணி நேரமும் கேளிக்கை விருந்துகள், கண்கவர் நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், சூதாட்ட கிளப்புகள் என்று மனதை மயக்கும்.அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரம் அந்நாட்டின் சொர்க்கபுரியாக விளங்குகிறது. தூங்கா நகரமான அங்கு 24 மணி நேரமும் கேளிக்கை விருந்துகள், கண்கவர் நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், சூதாட்ட கிளப்புகள் என்று மனதை மயக்கும்.

ஒரு இரவில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் கை மாறும். சூதாடுபவர்களுக்கு கிரெடிட் கார்டு மாதிரி ஒரு கார்டு தரப்படும். அதில் வாடிக்கையாளர்கள் விளையாடும் பணத்துக்கு ஏற்றபடி சலுகைகள் உண்டு. நூறு டாலர் விளையாடினால் அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் இலவச அறை, ஆயிரம் டாலர் விளையாடினால் லிமோசின் (Limousine) எனும் சொகுசு கார் ஓட்டுநருடன் தரப்படும். பத்தாயிரம் டாலர்கள் மற்றும் அதற்கு மேல் என்றால், தங்களது சொந்த ஊரிலிருந்து லாஸ் வேகாஸ் வருவதற்கு தனி ஹெலிகாப்டர் அல்லது சிறிய விமானம் வழங்கப்படும்.

சூதாடுபவர்கள் அனைவருக்கும் விரும்பிய மது வகைகளை உடனுக்குடன் ஊற்றிக் கொடுக்க அழகிய இளம் பெண்கள், விளையாடி களைப்பாகும் போது உடலை அமுக்கிவிட மசாஜ் அழகிகள், கேளிக்கை நடனங்கள், கண்கவர் இசை நிகழ்ச்சிகள் என்று அங்குள்ள சூதாட்ட விடுதிகள் ஜெகஜோதியாக இருக்கும். 1 டாலர் போட்டு விளையாடும் மெஷின்கள் முதல் ஆயிரக்கணக்கில் பணம் புழங்கும் பிளாக் ஜாக் ஆட்டம் வரை பல்வேறு சங்கதிகள் உண்டு. சராசரியாக ஒவ்வொரு சூதாடியும் பத்து மணி நேரம் இங்கு விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், தங்கள் ஆண்டு விழா மற்றும் பொருட்கள் அறிமுக விழாக்களையும் இங்கு நடத்தும். அப்பொழுது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆகவே உலகின் அனைத்து நாட்டு மக்களும் இங்கு வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அனைத்து நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும்.

சூதாட்ட விடுதியில்தான் தங்கும் இடங்களே அமைந்துள்ளன. அறையை விட்டு வெளியே வந்தால் சூதாட்ட மெஷின்கள்தான் கண்ணில்படும். சூதாட்டத்தின் வாசனை அறியாதவர்கள்கூட இங்கே வந்து மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போக முடியும். பல்வேறு கண்கவர் மாளிகைகளை கொண்ட சொர்க்கபுரியாகவும் லாஸ் வேகாஸ் அமைந்துள்ளது.

உலக அதிசயங்கள்

பாரிஸ் நகரின் ஈபிள் டவர், எகிப்து பிரமிடுகள், தாஜ்மகால், எம்பயர் ஸ்டேட் பில்டிங் ஆகிய உலக அதிசயங்கள் தத்ரூபமாக கண் முன்பு காட்சி தரும். லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் (strip) எனும் மகிழ்ச்சியின் சங்கமத்தில்தான் உலகப் புகழ்பெற்ற கேஸினோக்கள் அமைந்துள்ளன. பெல்லாகியோ, லக்ஸர், எம்.ஜி.எம். கிராண்ட், ஸ்டிராடோஸ்பியர், மிராக், வெனிஷியன் சீசர்ஸ் பேலஸ் ஆகிய புகழ்பெற்ற கேஸினோக்கள் இடையே அமைந்துள்ளது மண்டாலே பே கன்வென்ஷன் செக்டர்.

இரண்டு மில்லியன் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அரங்குகள், மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட கடற்கரை, சுரா மற்றும் திமிங்கலம் உலா வரும் பகுதியில் கண்ணாடி அன்டர்கிரவுண்ட் டனல் எனப்படும் சுரங்கப்பாதையில் சென்று கண்டுகளிப்பது போன்ற பல்வேறு கேளிக்கைகள் இங்கு உண்டு. இது எம்.ஜி.எம். ரிசார்ட் எனும் நிறுவனத்துக்கு சொந்தமானது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் இதுவும் ஒன்று. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு லாஸ் வேகாஸ் வருவதும் உண்டு. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர்ஸ் இங்கே மிகவும் பிரபலம்.

தற்காப்புக்காக அமெரிக்க குடிமகன்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்கிறது. கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்கா தொன்மையாகவே வேட்டையாடுபவர்களை கொண்ட நாடு. செவ்விந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே ஆதிகால அமெரிக்கர்கள் ஆயுதங்களை ஏந்தினர். ஆயுதங்கள் மாறி துப்பாக்கியாக உருவெடுத்தது. அமெரிக்காவில் பல ஆயிரம் வகையான துப்பாக்கிகள் சுமார் 45 சதவீத அமெரிக்கர்களின் வீடுகளை அலங்கரிக்கின்றன.

துப்பாக்கிகளை விற்பதற்கு என்றே அதிநவீன கடைகள் உண்டு. தங்கள் டிரைவர் லைசன்ஸை காட்டி ஏ.கே.47 கூட வாங்கலாம். சில மாகாணங்கள் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் யார் வேண்டுமானாலும் எந்தவிதமான துப்பாக்கிகளையும் வாங்க முடியும். சில மாகாணங்கள் துப்பாக்கி லைசென்ஸ் முறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளன. அமெரிக்காவில் பத்தாண்டுகளில் சுமார் பத்து லட்சம் மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு பலியாகி உள்ளனர். ஒவ்வொரு முறையும் துப்பாக்கி குண்டுகளுக்கு அப்பாவி மக்கள் பலியாகும்போது, துப்பாக்கிகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை என்ற கோஷம் எழுந்து அடங்கும்.

துப்பாக்கி கட்டுப்பாடு கோஷம்

நேஷனல் ரைபிள் அசோசியேஷன் (NRA) எனும் ஆயுத வியாபாரிகள் சங்கம் அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு முறையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி உரிமத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கத் தொடங்கியதும் இந்த அமைப்பு எம்.பி.க்ககளை லாபி செய்து ஆஃப் செய்துவிடும். இதற்காக கோடிக்கணக்கான டாலர்களை செலவு செய்யும்.

2001-ம் ஆண்டு உலக வர்த்தக மைய கட்டிடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக செயல்களுக்கு பிறகு ஆயுத ஒழிப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. தீவிரவாதிகளின் கைகளில் அமெரிக்காவில் விற்கப்படும் ஆயுதங்களே கிடைப்பது பற்றி பொது விவாதங்கள் நடைபெற்றன. நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க்கும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முயற்சி எடுத்தார். இவருக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆதரவை தெரிவித்தார். ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்களுக்கு அனைத்து சுதந்திரமும் உண்டு. அதை நசுக்குகிறார்கள் என்று இவர்கள் மீது வலதுசாரியினர் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில்தான் லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்தப் படுகொலையை நிகழ்த்திய ஸ்டீபனுக்கு இதுவரை எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை என்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இல்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் ஸ்டீபன் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்றும் இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்தான் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தி இந்து

Top