‛செல்பி' மோகத்திற்கு பலிகடா ஆகும் இந்தியர்கள்

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் மக்கள், அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளவும், தங்களது அசாத்திய திறமைகளை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் நோக்கிலும், அபாயகரமான இடங்களில் ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுப்பது, அவர்களது மரணத்திற்குக் காரணமாகிறது.

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, செல்பி எடுக்கும்போது ஏற்பட்ட மரணங்களின் அடிப்படையில் சர்வதேச அளவில் இந்தியா 76 மரணங்களோடு முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா -76
பாகிஸ்தான்- 9
அமெரிக்கா- 8
ரஷ்யா- 6
பிலிப்பைன்ஸ்- 4
சீனா- 4
ஸ்பெயின்- 3
இந்தோனேஷியா, போர்ச்சுகல், பெரு, துருக்கி- 2

2014 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில், செல்பி எடுக்கும்போது 127 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 68 வீதமானோர் 24 வயதிற்கு உட்பட்டவர்கள், மேலும் இவர்களில் 75.5 வீதமானோர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிக அளவாக, 2015 மார்ச் மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மங்குரூர் ஏரியில் படகு பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் குரூப் செல்பி எடுக்கையில் நேர்ந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
2016 ஜூன் மாதம், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கங்கை நதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது குரூப் செல்பி எடுக்க முற்பட்டு 7 பேர் பலியாயினர்.

இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது தற்போது எல்லா தரப்பு மக்களையும் சமூக வலைதள மோகம் ஆட்கொண்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், மக்கள் தங்கள் அன்றாட நிகழ்வுகளை பங்கிடுவதில் பெருமளவு ஆர்வம் கொள்கின்றனர். தங்கள் வீட்டில் நிகழும் விழாக்கள், தாங்கள் சென்றுவந்த சுற்றுலாக்கள் உள்ளிட்டவைகளின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதற்கு கிடைக்கும் வரவேற்பால் மகிழ்ச்சி அடைகின்றனர். புதிய இடங்களில், தன்னை மட்டும் நிலைநிறுத்தும்பொருட்டு எடுத்துக்கொள்ளும் செல்பியும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

2015 ஆம் ஆண்டில் மட்டும் கூகுள் போட்டோஸ் என்ற தளத்தில் 24 பில்லியன் செல்பிக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நவநாகரீக உலகில், ஒருவர் தன் வாழ்நாளில் சராசரியாக 25,700 செல்பிக்கள் எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Top