1150 x 80 px

 

அமெரிக்காவில் 60 பேரை கொன்றவர் பற்றி தோழி மரினோ விளக்கம்

‘‘எனது நண்பர் மிகவும் அமைதியானவர். அன்பானவர். அவர் இப்படிப்பட்ட தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது’’ என்று அமெரிக்காவில் 60 பேரை சுட்டுக் கொன்ற ஸ்டீபன் பட்டாக் பற்றி அவருடைய தோழி மரினோ டென்லே கூறினார். அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட மக்கள் மீது ஸ்டீபன் பட்டாக் என்ற 64 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டனர். 489 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்தார். இந்த கொடூரச் செயலை அவர் எதற்காக செய்தார் என்பது பற்றி அமெரிக்க போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பட்டாக்கின் 62 வயது தோழி மரிலோ டன்லே. இவர் தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர் அமெரிக்கா திரும்பினார். பட்டாக் பற்றி போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் மரினோ கூறியதாவது: பட்டாக் மிகவும் நல்லவர். மிகவும் அமைதியானவர். அன்பானவர். அவர் இப்படிப்பட்ட தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரை நான் மிகவும் நேசித்தேன். எனது எதிர்காலத்தையும் அவருடன் கழிக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அவர் இப்படி செய்வார் என நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த தாக்குதல் பற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை. அவரிடம் இப்படிப்பட்ட திட்டம் இருப்பது பற்றியும் எனக்கு தெரியாது. இதுபோன்ற பயங்கரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என்பதை முன்கூட்டியே அறிவதற்கான சந்தேகமோ, நடவடிக்கையோ அவரிடம் காணப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் சென்று எனது குடும்பத்தை பார்த்து விட்டு வருவதற்கு மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட் வாங்கி இருப்பதாக 2 வாரங்களுக்கு முன் பட்டாக் என்னிடம் கூறினார். நான் பிலிப்பைன்ஸ் சென்ற பிறகு, நான் அங்கு ஒரு வீடு வாங்குவதற்காக பணம் அனுப்பி வைத்தார். அப்போது, எனது உறவை துண்டித்து கொள்வதற்காகத்தான் அவர் இப்படி செய்கிறார் என நினைத்து மிகவும் கவலைப்பட்டேன்.
அவர் இப்படிப்பட்ட தீங்கை செய்வார் என நினைத்து பார்க்கவில்லை. இவ்வாறு மரிலோ கூறியுள்ளார்.

பட்டாக் நடத்திய தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள போதிலும், அந்த அமைப்புக்கும் பட்டாக்கிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அமெரிக்க போலீசார் உறுதியாக கூறியுள்ளனர். அதே நேரம், இதுபோன்ற கொடூரமான தாக்குதலை அவர் நடத்துவதற்கான காரணம் என்ன? இதற்கான திட்டத்தை அவர் எப்படி தீட்டினார்? என்பது போன்ற கேள்விகள் போலீசாரை குழப்பியுள்ளன.

இசைக்கச்சேரி நடந்த இடத்துக்கு எதிரே உள்ள ஓட்டலின் 32வது மாடியில் இருந்து அவர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார். அந்த ஓட்டலில் உள்ள 3 இடங்களில் இருந்து 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு ஆயுதங்கள் பட்டாக்கிற்கு எப்படி கிடைத்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மொத்தமாக 10 நிமிடங்கள் மட்டுமே அவர் தாக்குதல் நடத்தி இருக்கிறார். அதற்குள் இவ்வளவு பெரிய உயிர்ச்சேதமும், காயங்களும் ஏற்பட்டுள்ளன. எனவே, பட்டாக்குடன் இணைந்து வேறு யாராவது கூட்டாளிகளும் தாக்குதல் நடத்தி இருக்கலாம் அல்லது அவருக்கு உதவியாக இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடத்திய அறையில் அவர் கடந்த மாதம் 28 ஆம் திகதியில் இருந்தே தங்கி இருந்துள்ளார்.

லாஸ் வேகாசில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் அங்கு சென்றார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், துப்பாக்கிச்சூடு நடந்தபோது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முயன்றவர்களை சந்தித்து பாராட்டினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘ஞாயிற்றுக்கிழமை நடந்த கொலை, அமெரிக்காவின் இதயத்தில் துயரத்தை நிரப்பியுள்ளது. துயரத்தில் இருக்கும் உண்மையான நாடு அமெரிக்காதான். நம்மை அச்சுறுத்தும் எந்த தீய சக்திகளாலும் நம்மை தடுக்க முடியாது. நமது அன்பும், அரவணைப்பும், தைரியமும்தான் நம்மை கட்டுப்படுத்த முடியும். வரப் போகும் மாதங்களில், இந்த பயங்கர சம்பவத்துடன் நாம் போராட வேண்டியிருக்கும். ஆனால், இந்த துயரத்தில் இருந்து நாம் மீண்டு வருவோம். அந்த வலியை நாம் இணைந்து தாங்குவோம். நாம் அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்று சேர்ந்து, இதிலிருந்து மீண்டு வருவோம்’’ என்றார்.

Top