1150 x 80 px

 

மரணத்தை நோக்கிய பயணம்

அன்றுதான் கடலை முழுமையாகப் பார்க்கின்றார்கள் போலும்... அப்படியொரு ஆச்சரியப் பார்வை... கடற்கரையை அண்மித்திருந்த ஜப்பாருக்கும் இது விதிவிலக்கல்ல....

'நான் அன்றுதான் கடலை முழுமையாகப் பார்த்தேன். அது எல்லையில்லாமல் விரிந்து கிடக்கிறது" என்றார். இந்நிலையில், படகோட்டி படகிலுள்ளோரை நோட்டமிட்டு ஒவ்வொருவரையும் எண்ணி மனக்கணக்கு போட்டபடி படகில் ஏற்றினார். படகும் நகரத் தொடங்கியது. விழிநீர் சிந்தியபடியே விடியலைத்தேடி ஆயிரமாயிரம் கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டும், சிலர் கனத்த இதயத்துடன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டும், தமது குழந்தைகள், உறவுகள், உடமைகளை சரிபார்த்தபடியும் இருக்கவே படகு நகர்ந்து நடுக்கடலை அண்மித்துக்கொண்டிருந்தவேளை, வானிலையில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. மேகங்கள், நட்சத்திரங்களை மறைக்கத் தொடங்கின. மையங்கொண்ட புயல் தனது அசுரவேகத்தைக் காட்ட, அலைகள் சீறிப்பாய்ந்ததால் படகில் தண்ணீர் புகுவதை உணர முடிந்தது. உப்பு நீரின் மணம் வீசியது. ஏதோ அசம்பாவிதம் அரங்கேறப்போகின்றது என்பதை படகிலுள்ளோர் உணர்ந்திருந்தனர். படகிலிருந்த குழந்தைகளுக்கு தலைச் சுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுக்கத் தொடங்கினர்.

படகோட்டியிடம் யாரோ ஒருவர், 'இன்னும் நாம் நிலத்துக்குப் போக எவ்வளவு தூரமுள்ளது?"- என்று கேட்கிறார். அதற்கு படகோட்டியோ 'எனக்குத் தெரியாது" - என்று ஏமாற்றத்துடன் பதிலளிக்கிறார். படகிலிருந்தோர் நம்பிக்கையை இழந்திருந்தனர். அனைவரும் 'யா அல்லாஹ்...." - என்று கண்ணீர் வழிய கையேந்தி இறைவனிடம் மன்றாடத் தொடங்கினர். இதில் ஜப்பாரோ அழ ஆரம்பித்த தன் மனைவியை, 'ஒன்றும் ஆகாது" -என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அலைகளின் தாக்கம் வீரியமடைந்தது. படகிலிருந்த அனைவரும் தண்ணீர்.. தண்ணீர்.. என்று அலறினர். ஜப்பாரை நோக்கி 'ஏன் இதனைச் செய்தீர்கள்" - என்று மனைவி கோபமாகக் கேட்டாள். அவரிடம் பதில் இல்லை.... 'அவர்கள் நம்மைத் தாக்கினார்கள், நமது நிலத்துக்கு தீ வைத்தார்கள். ஆனால், இங்கு நிலைமை அதைவிட மோசமாக உள்ளது. நாம் இறக்கப் போகிறாம்" என்றாள். படகோட்டியோ, பயண உணவுப் பொதிகளை வெளியே போடுமாறு அலருகிறார். அந்நேரம் பசியா? உயிரா? என்பதை நிர்ணயிக்கும் நேரமாக மாறியது.

ஜப்பாரும் தன்னிடமிருந்த பயணப் பொதி, உணவு, குடிதண்ணீர் போத்தலையும் கடலில் வீசினார். இதன்போது ஜப்பாரின் மூத்த மகன் முஹம்மது தண்ணீர் கேட்கவே அவனைப் பொறுமையாக இருக்குமாறு சொல்கிறார். சிறிதுநேரம் கழித்து படகின் இன்ஜின் பழுதடைந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. அலைகள் படகை நாலா பக்கமும் தாக்கத் தொடங்கின. ஒரு பெரிய அலை மேலெழும்பி படகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஜப்பாரின் மார்பில் சாய்ந்திருந்த அவரது குழந்தைகள் அவரைப் பிரிந்தனர். 'அப்பா... அப்பா.. என்னைக் காப்பாற்றுங்கள்..." என்ற அபயக் குரலுடன் அலைகளுக்கு நடுவே ஒரு கை மேலெழும்பி தன்னைக் காப்பாற்ற யாரையோ அழைக்கிறது. அந்த அபயக்குரல் ஜப்பாரின் மூத்த மகனின் கடைசி வார்த்தைகள்... சிறிதுநேரம் கழித்து ஜப்பார் கண் விழித்தபோது அங்கிருந்தவர்களிடம், 'நான் எங்கு இருக்கிறேன்"- என்று கேட்கிறார். அவர்கள் பங்களாதேஷ் என்கிறார்கள். அன்று முழுவதும் அவரது குழந்தைகளை கடற்கரையெங்கும் தேடுகிறார். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன. அழுது புலம்பி இறைவனையும் நிந்திக்கிறார். இருந்தும் இறந்த குழந்தைகள் உயிரெழவில்லை. விரக்தியில் விம்மி அழுதவராக இப்போது பங்களாதேஷ் அகதிமுகாமொன்றில் தஞ்சமடைந்துள்ளார் ஜப்பார்.

'எங்கு பார்த்தாலும் என் குழந்தைகள்போன்று எனக்குத் தெரிகின்றதே. நான் எனது மூத்த மகனை தினமும் காண்கிறேன். அவன் என் முன்னால் வந்து அமர்ந்து கொள்கிறான். இப்போதும்கூட..." என்கிறார் ஜப்பார். கடந்த செப்டம்பர் மாதம் மியன்மாரிலிருந்து பங்களாதேஷ{க்கு தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் படகு கவிழ்ந்து தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை இழந்து இன்று திராணியற்ற தனிமரமாக ~அகதி| என்ற முத்திரையுடன் பங்களாதேஷிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான முகாமில் அநாதரவாக நிற்கிறார் ஜப்பார். இது வெறும் சொற்சுவைக்காகவும் பொருட்சுவைக்காகவும் சித்திரிக்கப்பட்ட கதையல்ல. மியன்மாரில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்து வாழ வழிதேடி பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா முஸ்லிமான ஜப்பாரின் நிஜக் கதை.

subani 2.jpg

பங்களாதேஷ்சிற்கு கடல் வழியாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களின் படகுகள் விபத்துக்குள்ளாவதும், அதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்துகளில் தங்களது சொந்தங்களை இழந்தவர்கள் பங்களாதேஷ் அகதிகள் முகாம்களில் ஒவ்வொரு நாளையும் உயிரற்ற நாட்களாக நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் இந்த அவலம்? - என்ற கேள்வி எழுகின்றதல்லவா? உங்கள் புதிருக்கான பதிலுக்கு, இன்னும் சில நிமிடங்களில் விடை கிடைத்துவிடும். பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் ~இரும்புத் திரை நாடு| என்றழைக்கப்படுகிறது. சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராகப் போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்தப் பாடுபட்டார். இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயற்பாடுகளை விவரிக்கும் விதமாகவே ~இரும்புத் திரை நாடு| என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது. பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ஆம் ஆண்டு மியான்மார் என்று மாற்றியமைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும் அழைக்கப்படுகின்றது. சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் ஆட்சிமொழியாக பர்மிய மொழி இருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளோடு மேலும் சில வட்டார மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. இவர்களுள் ரோஹிஞ்சா மொழியைப் பேசுகின்றவர்களே இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள். ராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ - ஆரிய இனக்குழுவாகும். ரோஹிங்யா மக்கள் ராக்கைன் மாநிலத்தின் பூர்வகுடிகள் என ரோஹிங்யா மக்களும், இவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறியவர்கள் என சில ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். மியன்மாரின் வடக்கேயுள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியன்மாரில் 13 இலட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மனித உரிமைக்காக ~மியன்மார் ரோஹிங்யா இரட்சணிய சேனை| என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் மீது தீரா பகைகொண்ட அசின் விராது தேரரின் தலைமையிலான 969 இயக்கத்தினரால் (969 Movement) கட்டவிழ்கப்பட்ட பொய்ப் பிரசாரத்தின் பிரதிபலிப்பே இன்று ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறையாகும். இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மியன்மார் அரசும் ரோஹிங்கியாக்களைக் கண்டுகொள்ளாதுள்ளது.

969 இயக்கம்| என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் இஸ்லாமிய பரம்பலை எதிர்க்க அசின் விராது தேரரின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும். மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாக இருப்பது இவரும், இவருடைய 969 இயக்கமுமே. மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார். இவருடைய தூண்டுதலில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகளுக்குத் தீயிட்டுக் கொழுத்தியும், ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்பட்டு ம் வருகின்றனர். இந்த இராணுவ வன்முறையில் 471 ரோஹிங்கியா முஸ்லிம் கிராமங்களில் 176 கிராமங்கள் சுடுகாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனாலேயே 969 இயக்கத்தை வழிநடத்தும் விராது தேரரை மியன்மாரின் ~பின்லேடன் என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் எண்ணி லடங்கா முஸ்லிம்கள் இதுவரை கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்களின் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டநிலையில் உண்ண உணவின்றி, உறங்க வாழிட மின்றி உருக்குலைந்தவர்களாய் உயிர்வாழ வழிதேடி அண்டை நாடுகளை நோக்கி காடு, மலை, கடல் தாண்டி படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு தமது உயிரைப் பணயமாக வைத்து ஆபத்தான மர - இறப்பர் படகுகள் மூலம் விடியலைத் தேடி கடல்கடந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைவோரில் பலர் கடலுக்கு இரையாகும் பல சம்பவங்களை நாம் அன்றாட செய்திகள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. தாய்நாட்டிலிருந்து அகதிகள் என்ற முத்திரையுடன் அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்தாலோ அங்கும் கதவடைப்பும், விரட்டியடிப்பும் தொடர்கின்றது. அண்மையில்கூட இலங்கையில் தஞ்சமடைந்திருந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது அதுமட்டுமன்றி, பங்களாதேஷ் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா பெண்கள் மீது வன்கொடுமைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்ததோடு, ஆண்களுக்கு வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு துன்புறுத்தப்பட்டமை செய்திகள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.

அன்பையும் அஹிம்சையையும் போதித்த புத்தரின் பெருமை கூறும் பௌத்த மதத்தில் இத்தகையதொரு கடும் போக்குவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுவது எவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும்? மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெறும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும். எனவே, ஒடுக்கப்படும், அடக்கியாளப்படும், அடித்துவிரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இதற்காக மனித நேயம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து பன்நாடுகளும், ஐ.நா. உள்ளிட்ட உயரிய சபைகளும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக் வேண்டும்.

கே.சுபானி
- நன்றி சுடர்ஒளி

Top