முன்னுதாரணமிக்க அரசியல் தலைவர் ரத்னசிறி விக்கிரமநாயக்க

இலங்கையில் மூன்று தடவைகள் பிரதமர் பதவியை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதியான ரைகம் கோரளைய பிறப்பிடமாகக் கொண்ட ரட்னசிறி விக்கிரமநாயக்க தனது 83 வது வயதில் காலமானார். உண்மையிலேயே அவரது இழப்பு இலங்கையின் அரசியல் வரலாற்றில் சின்னதொரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுத்துரைக்கவியலாது களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றப் பிரவேசம் செய்த ரட்ணசிரி விக்கிரமநாயக்க அரசியலில் தனது தாய்நாட்டுக்காக அளப்பரிய சேவை புரிந்த கீர்த்திமிகு அரசியல்வாதியாகவே நோக்க முடிகிறது.

2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஏப்ரல் மாதம் வரையில் இடையிடையே மூன்று தடவைகள் அவர் நாட்டின் பிரதமராக பதவி வகித்திருக்கின்றார். இறுதியாக அவர் மரணிக்கும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராகவும் செயற்பட்டு வந்தார். நீண்டகாலமாக கட்சியின் உப தலைவர் பதவியையும் அன்னார் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஹொரனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டி முதற் தடவையாக பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தார். அன்று முதல் படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக பதவிகளை வகித்து 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பிரதமராக நியமனம் பெற்றார். இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும், சபை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் பதவிகளையும் வகித்ததோடு சிறந்ததொரு இராஜதந்திரியாகவும் அவர் திகழ்ந்தார்.

ரைகம் கோரளையில் மில்லேவ கிராமத்தில் பிறந்த ரட்ணசிரி விக்கிரமநாயக்க கிராமிய சூழலில் வளர்ந்தமையால் கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் நன்கு புரிந்து, அறிந்து செயற்பட்டு வந்தார். தனது பள்ளிப்பருவம் முதலே தனது கிராமத்தின் அபிவிருத்தி முன்னேற்றத்துக்காக கிராமிய நண்பர்களுடன் இணைந்து பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகித்து இயங்கினார்.

1933 மே மாதம் 5 ஆம் திகதி பிறந்த விக்கிரமநாயக்க தனது ஆரம்பிக்கவில்லை. மில்லேவ கனிஷ்ட வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டு அங்கிருந்து பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம், கொழும்பு ஆனந்தாக் கல்லூரி என்பவற்றில் உயர் கல்வியை கற்றார் கல்வியில் உயரவேண்மென்ற ஆசையும் பாரிஸ்டராகவேண்டுமென்ற எண்ணமும் அவரில் குடிகொண்டிருந்தது அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றிக்கொள்ளும் பொருட்டு இங்கிலாந்து சென்று ‘லிங்கன் இன்’ சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து சிறப்புச் சித்தி பெற்றுத் திரும்பினார். சட்ட வல்லூனராக நாடு திரும்பிய ரட்ணசிரி விக்கிரமநாயக்க 1960ல் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்தார்.

ஹொரனை தொகுதியில் சமசமாஜக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய அவர் தனது முதலாவது அரசில் பிரவேசித்தினூடாக பாராளுமன்றம் வரக்கூடிய அளவுக்கு தொகுதி மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்தார். அன்று முதல் தனது அத்திம காலம்வரை ஹொரணைத் தொகுதி மக்களுடனும், ரைகம் மக்களுடனுமே அவர் இரண்டரக் கலந்து நின்றார்.

1962ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட அவர் 1965 தேர்தலில் மீண்டும் ஹொரணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். 1970ல் பிரதி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 1975ல் பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சராகவும் 1976ல் நீதியமைச்சராகவும் பதவி வகித்தார். 1978 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனையடுத்து 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியில் பிரதமராக நியமிக்கப்பட்டார். அப்பதவி 2001 டிசம்பர் 9 வரையில் நீடித்தது. 2001 டிசம்பர் 18ம் திகதி நடந்த தேர்தலில் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி தோல்வியுற்றதையடுத்து 2002 ஜனவரி 31 ஆம் திகதி வரை எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தார்.

மீண்டும் 2005 நவம்பர் 19ம் திகதி முதல் 2010 வரை மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பிரதமராக பதவி வகித்துள்ளார். அரசியல்வாதிகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை உதாரணம் காட்டக்கூடிய வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். கிராமத்தில் பிறந்த மகன் நாடாளுமன்றம் பிரதமராக வாழ்ந்து காட்டி விட்டு தனது தொகுதி மக்களுக்கு புகழைத் தேடிக்கொடுத்து மறைந்துள்ளார். அன்னாரது வாழ்க்கையிலிருந்து எமது அரசியல்வாதிகள் நிறையவே கற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்

55 வருட அரசியல் பணியில் அப்பழுக்கற்ற ஒரு மனிதராக, யாராலும் குறைகாணமுடியாத ஒரு அரசியல்வாதியாக வாழ்ந்து காட்டிச் சென்ற ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் சில செயற்பாடுகள் குறித்தும் பேச்சுகள் குறித்தும் ஊடகங்கள் அவரை இனவாதியாக சித்தரிக்க முற்பட்டபோதிலும் உண்மையிலேயே அவர் இனவாதியாக ஒருபோதும் செயற்படவில்லை என்பதை ஹொரணை தொகுதி தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் மூலம் காணக்கூடியதாக இருக்கின்றது.

நேர்மை மிக்க அரசியல் தலைவராகவே அவர் காணப்பட்டார். அவரது பேச்சுத்தொனி வித்தியாசமாகக் காணப்பட்டபோதிலும் அதில் ஆழ்ந்த இரக்க சுபாவமும் குடிகொண்டிருப்பதை மக்கள் நன்கறிவார்கள்.

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த அந்த மகா புருஷனுக்கு எமது இறுதி அஞ்சலியை இதனூடாக சமர்ப்பிக்கின்றோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top