1150 x 80 px

 

நல்லாட்சி அரசும் தமிழர்களை ஏமாற்றிவிட்டது!

நல்லாட்சி அரசாங்கம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கம் வழங்கப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வானது சமஷ்டி அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு மாநிலமாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கை நாடானது மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதும் அடிப்படையாக இருக்கின்றது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தயாரிப்பதாக கூறியுள்ள புதிய அரசியல் அமைப்பானது சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையாது என்றும், ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு அமைய முடியும் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் ஒற்றை மாநிலமாக இணைக்கப்பட மாட்டாது என்றும், பௌத்த மதமே இலங்கையின் முதன்மை மதமாக இருக்கும் என்றும் நல்லாட்சி அரசின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் திட்டவட்டமாகக் கூறிவருகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்கள் எதிர் பார்த்த அரசியல் தீர்வை இந்த அரசாங்கமும் வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பிரதமர் தலைமையிலான வழி நடத்தல் குழுக் கூட்டங்களில் அங்கத்துவம் வகிக்கும் 26 உறுப்பினர்களில் ஒற்றை எண்ணிலேயே உறுப்பினர்கள் கலந்து கொள்வதானது புதிய அரசியல் திருத்தம் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகின்றன என்று ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதற்கிடையே மாகாண சபைகளின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யும் விஷட அபிவிருத்தி ஆலோசனை வரைபை அரசாங்கம் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்திருந்த நிலையில், வடக்கு மாகாணசபை உட்பட தென் பகுதியிலும் மத்தி, சப்ரகமுவ, தென் மாகாணசபைகளும் நிராகரித்துவிட்டன.

பெரும்பாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணசபை முறைமையை அமுல்படுத்துவதையே அசராங்கம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைக் குறைக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சந்தேகிக்கலாம்.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாணசபைக்கான 36 அதிகாரங்களில் முக்கியமானவற்றை நீக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதை எதிர்த்து அப்போது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்த ஈ.பி.டி.பி ஆளும் அரசாங்கத்திலுள்ள 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்று மகிந்த ராஜபக்சவின் அந்த முயற்சியை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதை தடுத்து நிறுத்தியதையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

அதன் பின்னரே சமுர்த்தி திட்டத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் முன்கொண்டு வந்தனர். அந்தத் திட்டத்தை பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச கொண்டு வந்த போது அதனூடாகவும் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் சமுர்த்தித் திட்டமானது மாகாண சபைகளின் அதிகாரத்தை பாதிக்காத வகையில் சீராக முன்னெடுக்கப்பட்டதால், அதனால் பல்லாயிரம் குடும்பங்கள் நன்மையடைந்து வருகின்றன. பலருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது. இப்போது சமுர்த்தித் திட்டமானது வெற்றிகரமான சமூக மேம்பாட்டுச் செயற்பாடாக செயற்படுகின்றது.

வடக்கு மாகாண சபையானது மத்திய அரசுக்கு சவாலான நிர்வாகமாக இருப்பதால், ஏதோ ஒருவகையில் வட மாகாணத்தில் மத்திய அரசின் கையும் ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக ஆளுனர் ஊடாக சில காரியங்களை மத்திய அரசாங்கம் அணுக முற்பட்டது. அதற்கும் கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்ததால் தற்போது வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விஷேட ஜனாதிபதி அலுவலகம் ஒன்றை அமைக்கப்போவதாகவும், அங்கு பொது மக்கள் ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முடியும் என்றும், ஜனாதிபதிக்கு தமது தேவைகள், பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளையும் கையளிக்க முடியும் என்றும் அரசாங்கம் தற்போது அறிவித்திருக்கின்றது.

வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத போது வட மாகாணத்திற்கு மட்டும் ஜனாதிபதியின் அலுவலகம் ஆளுனர் மாளிகையில் அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? தமிழ் மக்கள் மீது ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அக்கறையா? அல்லது சர்வ தேச சமூகத்திற்கு அப்படி ஒரு படத்தை ஜனாதிபதி காட்டுவதற்கு முற்படுகின்றாரா? என்பதை ஆராய வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்காமல், விஷேடமான அலுவலகத்தை அமைப்பதாலோ, ஜனாதிபதி அடிக்கடி வட மாகாணத்திற்கு விஜயம் செய்வதாலோ தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது.

கடந்த கால அரசாங்கங்கள் யுத்தத்தை நடத்திய அரசுகள் என்பதால் அவ் அரசாங்கங்களின் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினமாக இருந்திருக்கலாம். எந்த வகையிலும் யுத்தத்துடன் தொடர்பு இல்லாத நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காமல், தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முற்படாமல், தமிழ் மக்களின் கோரிக்கைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்காமல் இருக்குமாக இருந்தால், தென் இலங்கை அதிகார வர்க்கத்தினருக்கு தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே இது உணர்த்துகின்றது.

தமிழர்கள் மூன்று தசாப்தத்திற்கும் மேலாக நடத்திய உரிமைப்போராட்டமானது, எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதற்கோ, விஷேட அலுவலகங்களில் கோரிக்கைகளை வழங்குவதற்கோ, அல்ல என்பதை தென் இலங்கை அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் அடிப்படைப் பிரச்சினை, நாளாந்தப் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினைகள் என மூன்று விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதைப் புரிந்து கொள்ள விரும்பாமலும், புரிந்து கொள்ள முயற்சிக்காமலும், தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்று தென் இலங்கை அரசியல் தலைமைகளும், இனவாதிகளும் விசமத் தனமாகக் கேட்பார்களாக இருந்தால், அது தமிழ் மக்களை சீண்டிப்பார்ப்பதற்கு ஒப்பாகவே அமையும்.

– ஈழத்துக் கதிரவன் -

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top