மோடியும் பொய்களும்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இந்நாட்டில் முதற்தடவையாக நடாத்தப்படும் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இங்கு வருகை தந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததும், சர்வதேச வெசாக் தின வைபவங்களில் கலந்து கொண்டதும் முக்கிய விடயங்களாகும். இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு எதிர்ப்புக்கள் தோன்றியதாக அறிய முடிந்தது.

இந்தியாவில் இந்து தீவிரவாத கட்சியைச் சேர்ந்த மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக் கூடாது என்றே எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நாட்டு பௌத்தர்கள் இந்துக்களுக்கு தொல்லைகளை வழங்குவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டு பௌத்தர்களின் பிரதான வைபவத்தில் கலந்து கொள்வது தொடர்பில் அவர்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். எவ்வாறாயினும் இவ்வாறான எதிர்ப்புக்களை துளியளவும் கணக்கில் எடுக்காது இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கையின் சில தீவிரவாத குழுக்களும் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. சிலர் மோடி வரும் தினத்தில் கறுப்பு கொடிகளை பறக்க விட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மோடி வருவது சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களுக்கு என்பதால் அத்தினத்தில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

பௌத்த சமூகத்தின் முக்கியஸ்தர்களுள் அனேகமானோர் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும் தீவிரவாத சிறு குழுக்கள் அவ்வாறான விடயத்தைச் செய்வதற்கு முயற்சித்தன. இதனால் நாடும் மக்களும் அபகீர்த்திக்கு உள்ளானாலும் அரசாங்கத்தை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே இவ்வாறான தீவிரவாதக் குழுக்களின் தேவையாக உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. அவர்களின் நோக்கம் எவ்வாறிருந்தாலும் பௌத்தர்களின் புனித தினத்தினை அசுத்தப்படுத்துவதற்கும் கூட அவர்கள் இதன் மூலம் முயற்சிப்பதைக் காண முடிகின்றது.

அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் அனைத்து அயல் நாடுகளுடனும் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணித்த ஒரு தலைவராகவே இந்திய பிரதமர் மோடி காணப்படுகின்றார். இந்தியாவினுள்ளேயே எழுந்த எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது அவர் தனது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு வலயத்தின் அனைத்து அரச தலைவர்களுக்கு அழைப்பை விடுத்ததும் தனது நல்லெண்ணத்தைக் வெளிக்காட்டுவதற்கேயாகும்.

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தி ருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். தன்னுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டுத் தலைவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்ததோடு புதுதில்லியில் மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது. இந்த வரவேற்பு அயல் நாடான இலங்கையின் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டதே தவிர மஹிந்த ராஜபக்ஷ என்ற அரசியல் வாதிக்காக வழங்கப்பட்டதல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். அன்றும் மோடியின் தேவையாக இருந்தது இலங்கை மக்களோடு நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயமேயாகும்.

இந்திய பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் கடந்த வருடம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அந்தப் பயணத்தின் போது இந்நாட்டின் பெரும்பான்மை பௌத்த மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் வகையில் அவர் ஸ்ரீமகாபோதியில் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதாவது அவருக்கு ஏதேனும் ஒன்று தேவை என்பதாகும். அது வேறொன்றுமல்ல. இந்நாட்டு மக்களின் நல்லுற வேயாகும். இந்தச் செய்தி இலங்கையர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் நரேந்திர மோடி தெற்காசி யாவுக்கே பரிசொன்றை வழங்குவதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டார். அது அவரால் விண்வெளியில் செலுத்தப்பட்ட தெற்காசியா தொடர்பாடல் செயற்கைக் கோளாகும். அதன் வசதிகளை அனுபவிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெற்காசிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளும் அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வந்துள்ளன.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே இவ்வாறு முன்வந்த நாடுகளாகும். செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி வைத்தார். இந்த செயற்கைக் கோள் மூலமாக மோடி அயல் நாடுகளுக்கு வழங்கியது ஒரே செய்தியையேயாகும். அது அனைத்து நாடுகளுக்கும் நல்லெண்ணம் தேவை என்பதாகும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் ஒரு பிரச்சினையானது இந்திய மீனவர்கள் எமது நாட்டு கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகும்.

இந்நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் எமது நாட்டின் வடக்கு கிழக்கில் கடற்றொழில் நடவடிக்கைகள் அனேகமாக வரையறுக்கப்பட்டிருந்த போது இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லையினை அவர்களுடையது என பாவித்தார்கள். எனினும் தற்போது எமது நாட்டு கடற்றொழில் துறை மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் வருகை தருவது பிரச்சினையானதேயாகும்.

இலங்கையினால் அவ்வாறு வரும் கடற்றொழில் படகுகளைக் கைது செய்வது தொடர்பில் தமிழ்நாட்டு தமிழ் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். இந்தியாவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத மீனவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே அவர்களது தேவையாக உள்ளது.

இதற்காக அவர்கள் பிரதமர் மோடிக்கு வழங்கும் அழுத்தங்கள் குறைவானதல்ல. அவ்வாறிருந்தும் இலங்கையின் உரிமைக்கு எதிராக அதிகாரத்தைப் பாவிப்பதற்கு இந்திய பிரதமர் மோடி தயாராக இல்லை. தமிழ்நாட்டின் தீவிரவாத தமிழ் தலைவர்கள் இது விடயத்தில் கோபத்திலேயே உள்ளனர். எனினும் இலங்கையின் நல்லுறவு தனக்கு மிக முக்கியம் என்பதை மோடி காட்டியுள்ளார்.

அண்மையில் மற்றொரு முக்கியமான அறிக்கையினை மோடி வெளியிட்டார். இந்தியா பொருளாதார சக்திமிக்க நாடாக அபிவிருத்தி அடைவதாகவும், அந்த அபிவிருத்தியை அயல் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிக்கையாகும். விஷேடமாக இலங்கையுடன் அபிவிருத்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மோடி விரிவான நோக்கைக் கொண்ட தலைவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவரது நோக்கம் இந்தியாவின் நலனே என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறிருந்தும் அவருக்கு அயல் நாடுகளும் முக்கியமானதாகும். ஒருபுறத்தில் அது வெற்றிகரமான பொருளாதார அபிவிருத்திக்காகவேயாகும். அது அபிவிருத்தியை துரிதப்படுத்தும். மறுபுறத்தில் வலயத்தின் சக்தி மற்றும் பெரும் சக்தியாக எழுந்து நிற்பதற்கு முயற்சிக்கும் நாட்டிற்கு அயல் நாடுகளினது சிறந்த பங்களிப்புத் தேவையாகும்.

இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கலாம். அதாவது பூகோள அரசியல் தேவையாகும். விஷேடமாக சீனா இந்த வலயத்தில் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதை ஈடு செய்வதற்கு மோடிக்கும் தேவையாக உள்ளது என்பது அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. இதற்காக மோடிக்கு இலங்கையின் நல்லுறவு தேவையாகும்.

எமது நாடு தொடர்பில் செயற்படும் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அச்சுறுத்தல், மிரட்ட ல்கள் அல்லது வேறு அழுத்தங்களை உபயோகப்படுத்தியுள்ளதாக அறிய முடியவில்லை. இலங்கையில் சீனாவின் அழுத்தங்கள் இந்தியாவுக்கு பிரச்சினையாக அமையும் என்பது அனேக அரசியல்வாதிகள் கூறும் விடயமாகும்.

அவ்வாறிருந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இலங்கை சீனாவின் கீழான காலனியாக ஆகிக் கொண்டிருந்த நிலையினைக் காட்டிய போதும் இந்திய பிரதமர் மோடி பொறுமையான நிலையினையே கடைபிடித்தார். இலங்கைக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என அவர் ஒரு போதும் சிந்திக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சீனாவுடன் இணைந்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தைச் செய்வதற்கு முயற்சித்த போதும் மோடி பெரிதாக குழப்பமடைந்து போகவில்லை. இவ்விடயம் தொடர்பில் இருந்த எதிர்ப்பை இந்திய அரசாங்கத்தினால் இந்தியாவின் ஊடகங்களில் தெரிவிக்கப்படவில்லை. எனிறாலும் இராஜதந்திர செயற்பாடுகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா சிந்தித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதன் மூலம் இந்நாட்டுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவது இந்தியாவின் வியூகமாக உள்ளது. இதற்காக வடக்கில் வீடமைப்பு திட்டங்கள், புகையிரத வீதி அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்களுக்கு உதவி வழங்கியதைப் போன்று கடன்கள் மற்றும் உதவிகளையும் வழங்கியதை யாவரும் அறிந்த விடயமாகும்.

இலங்கைக்கும் இந்தியாவின் நல்லுறவு மற்றும் உதவிகள் தேவை என்பது தெளிவான விடயமாகும். இந்நாட்டின் அபிவிருத்திக்காக அனேகமான விடயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அடுத்தவருக்கு கடன் செலுத்த வேண்டியுள்ள நாட்டில் அதற்கான நிதிகள் இல்லை. பாரிய வேலைத்திட்டங்கள் மற்றும் வர்த்தகங்களைச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் தொடர்புகளும் எம்மிடமில்லை.

இதற்காக இந்தியாவில் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்குச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது அவ்வாறான வேலைத்திட்டங்களை இணைந்து செய்வதற்கேயாகும். சாம்பூர் அனல் மின் நிலையம், கெரவலபிட்டிய இயற்கை எரிவாயு நிலையம், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கித் தொகுதி போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக இரு நாடுகளுக்கிடையில் கலப்பு வர்த்தகத்தை ஆரம்பிப்பதே அந்த ஒப்பந்தத்தின் நோக்கமாக உள்ளது.

இவற்றை எம்மால் தனியாகச் செய்ய முடியாத காரணத்தினாலேயே இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் இவைகள் பாரிய காட்டிக் கொடுப்புக்கள் என்றும், எமது நாட்டு வளங்கள் விற்கப்படுவதாகவுமே எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் கூற முற்படுகின்றனர்.

எதிர்க்கட்சி இன்னும் ஏராளமான பொய்களை இதனோடு இணைத்துவிட்டிருக்கின்றனர். மோடி இம்முறை இலங்கைக்கு வருகை தந்தது வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கேயாகும். அத்துடன், இந்தியாவினால் வழங்கப்பட்ட வைத்தியசாலையினைத் திறந்து வைப்பதற்கேயாகும். எனினும் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கியினைப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவே அவர் இலங்கைக்கு வருகிறார் என்றே எதிர்க்கட்சியினர் கூற முற்படுகின்றனர்.

திருகோணமலை எண்ணெய் தாங்கியின் அபிவிருத்தியினை எமது எண்ணெய் கூட்டுத்தாபனமே செய்ய வேண்டும் எனக் கூறும் தரப்பினரும் உள்ளனர். எழுபது வருடங்களாக முடியாத காரணத்தினாலேயே அவை அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தது. எமது நாட்டுச் சந்தைக்கு வரும் எண்ணெயினைக் களஞ்சியப்படுத்துவதற்கு முத்துராஜவெல மற்றும் கொலன்னாவையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் தாராளமாகப் போதுமானதாகும். திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கியினைப் பயன்படுத்துவதற்கு எம்மால் சர்வதேச சந்தைக்குச் செல்ல வேண்டியேற்படும்.

அதற்கு பாரிய சந்தை தேவையாகும். அதற்குத் தேவையான மூலதனம், அறிவு நுட்பங்கள், உபாய மார்க்கங்கள் எம்மிடமில்லை. இந்தியாவும், இலங்கையும் இணைந்து இதனை அபிவிருத்தி செய்யப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது இதன் காரணத்தினாலேயாகும். இந்த அபிவிருத்தி வியூகங்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சியின் நிலை கேள்விக் குறியாகி விடும் என்பதை அறிந்த காரணத்தினாலேயே இதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போட முனைகின்றனர்.

தொடர்ந்தும் எதிர்க்கட்சியின் யுக்தியாக இருப்பது அரசாங்கத்தினால் எவ்வாறான அபிவிருத்திப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை பூச்சாண்டியாகக் காட்டுவதேயாகும். சில சந்தர்ப்பங்களில் சீனாவையும், சில சந்தர்ப்பங்களில் இந்தியாவையும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் மேற்குலக நாடுகளையும் பூச்சாண்டிகளாகக் காட்டி அதற்கெதிரான வீரர்கள் தாமே எனக் காட்டுவதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சியின் இந்தச் செயற்பாடுகளின் அப்பாவித் தனத்தைக் காட்டும் நல்லதொரு நிகழ்வானது இந்தியாவின் உதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலவச அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும் சேவைக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பேயாகும்.

இது இந்நாட்டு மக்களின் தகவல்களைச் சேகரிக்கும் புலனாய்வுச் சேவை என்றே அவர்கள் அன்று கூறினார்கள். எவ்வாறாயினும் அரசாங்கம் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வந்தது அந்த இந்தியாவினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியாக இருந்தது விதியின் விளையாட்டாகும்.

இவ்வாறு பூச்சாண்டி காட்டுவது எல்லா நேரமும் வெற்றியளிக்காது என்பதை எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் விடயங்களைப் புரிந்து கொள்ளும் போது எதிர்க்கட்சி இன்னும் இன்னும் மதிப்பிழந்து போவதைத் தவிற வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

சீ.ஜே. அமரதுங்க
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top