1150 x 80 px

 

சாப்பு சட்டம் சாபமா சதிவலையா

‘நிம்மதி என்ன விலை’ என்று கேட்டும் அளவுக்கு இன்றைய வணிக உலகின் போட்டியான தொழிற்சந்தையில் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய நாட்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் எந்த தொழிற்பிரிவையும் எடுத்துக்கொண்டால் “போட்டி” என்ற அச்சாணியில்தான் நிறுவன இயந்திரங்கள் சுழல்கின்றன.

இன்றைய இளம் தலைமுறையை வதைக்கும் பிரச்சினைகளில், பிரதானமானது, மனஅழுத்தம். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் பதற்றமான வேலைத்தள சூழல் காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மன அழுத்தம் “ஒரு நோய்” என் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை என்றே சொல்லலாம். 'தொடர்ச்சியான மன அழுத்தமானது, ஒரு கட்டத்தில் மன இறுக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்' என்பதே வைத்தியர்களின் அச்சம்கொள்ள வைக்கும் அறிவுரை.

மன அழுத்தம் ஏற்படுவதன் பின்னணியில், அழுத்தமான ஓர் ஏமாற்றமோ, வலியோ, கவலையோ இருக்கக்கூடும் என்பதும் கால ஓட்டத்தில் இந்த மன அழுத்தம் தானாகவே சரியாகி சொல்லப்படும் கருத்து. ஆனால், சில நேரங்களில் மனம் இறுக்கமாக இருப்பதற்கு இதுதான் காரணம் என துல்லியமாக சொல்லிவிடமுடியாது.

சம்பந்தமே இல்லாமல், பழைய விடயங்களை ஆராய்ந்து, அதுவா இதுவா என்று காரணத்தைத் தேடி குழம்புவார்கள். சந்திக்கும் ஒவ்வொரு சூழலும், மேலும் மனதை இறுக்கமாக்கும். இதுதான் மன இறுக்கத்தின் அறிகுறிகள் என்கின்றனர் வைத்தியர்கள்.

இன்றைய வாழ்க்கைமுறை மிகவும் பரபரப்பாக இருக்கிறது. காரணமே இல்லாமல் பதற்றம் மனதைச் சூழ்ந்து கொள்கிறது. அதனால் பெரும்பாலானோர் மன இறுக்கத்துக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்துக்குக் காரணம் தெரியும். மன இறுக்கத்துக்குக் காரணத்தைக் கண்டறிய முடியாது

“மன இறுக்கத்துக்கு ஆளானோர் பலநாள்களுக்கு அந்தப் பிரச்சினையோடு போராடுவர். அன்றாடச் செயல்களை ஈடுபாடின்றி, மேலோட்டமாகச் செய்வார்கள். பலர் சூழ இருந்தாலும், தனிமையை உணர்வர். யாரோடும் சகஜமாகப் பேச முடியாது.

தன்னம்பிக்கை குறைந்துவிடும். வெறுப்பு அதிகரிக்கும். சட்டென்று கோபமடைவார்கள். அதே வேகத்தில் மனமுடைந்து போய்விடுவார்கள். தூக்கமின்மை அல்லது அதிக நேரம் தூங்குவது, உடல் எடை குறைவது, யோசிக்காமல் அல்லது கவனக்குறைவாக இருப்பது, முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவது போன்றவையும் மன இறுக்கத்தின் அறிகுறிகள்” என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

அலுவலக வேலைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இவ்வாறான மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் பரவலாக காணப்படும் நிலையில், அதற்கு உரிய தீர்வை அந்நிறுவனங்களோ அரசாங்கமோ “பலனளிக்கும்” விதத்தில் எடுத்துள்ளனவா என்பது இன்றும் கேள்விக்குறியே.

உலகளாவிய ரீதியில் வயது வந்தவர்கள் மன அழுத்தம் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று அமெரிக்க மனோதத்துவ சங்கம் வெளியிட்டுள்ள பல அறிக்கைகள் சுட்டிக்காட்டகின்றன.

75 சதவீதமானவர்கள் (வயதுவந்தவர்கள்) கடந்த மாதத்தில் மிதமான உயர்தர மன அழுத்தத்தை அனுபவித்துள்ளதுடன், அமெரிக்க உளவியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 80 சதவீதமானவர்கள் வேலையில் மன அழுத்தத்தை உணர்கிறார்கள் என்றும், உலகில் முக்கிய பொருளாதார நகஙைங்களில் 10 தொழிலாளர்களில் 6 பேர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில் (86%) பணியிட அழுத்தம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியர்களில் வயது 91% தங்கள் வாழ்வில் குறைந்தபட்சம் ஒரு முக்கியமான பகுதியில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். கிட்டத்தட்ட 50% தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி பற்றி மிகவும் வலியுறுத்தப்படுகிறார்கள் என்று லைஃப்லைன் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் மனநல சுகாதார பிரிவின் புள்ளி விவரங்களின்படி, இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களில் 5இல் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என, சுகாதார அமைச்சர், ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மனநல சிகிச்சையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வேலையின்மை மற்றும் போட்டியிடும் வாழ்க்கை முறை மற்றும் பணியிடத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வீட்டில் உள்ள சூழ்நிலைகள் காரணமாக மனநல மன அழுத்தம் மற்றும் மனநல குறைபாடுகள் அதிகரித்துள்ளது என்பதையைம் அவர் ஏற்றுக்கொண்டிருந்ததார்.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.. இதுவொரு மன இறுக்கம் தொடர்பான கட்டுரை அல்ல. ஆனால் இந்த கட்டுரையில் அடித்தளத்துக்கு இது தேவையானதாக காணப்படுகின்றன.

இலங்கையில் 2018ஆம் ஆண்டுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட முன்மொழிவில் சாப்பு மற்றும் அலுவலக சட்டத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் சற்று சிந்தித்து பார்ப்பது காலத்தில் தேவையான காணப்படுகின்றது.

நாளொன்றுக்கு 8 மணித்தியால வேலை என்பதை மாற்றி வாரத்துக்கு 40 மணித்தியாலங்கள் என்ற ரீதியில் இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகின்றது.

நேற்று முன்தினம்(28) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட அமைச்சுக்கள் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது இது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி முன்வைத்திருந்தார்.

“வாரமொன்றுக்கு 40 மணித்தியால வேலைநேரம் என்ற முறையின் அடிப்படையில் சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதற்கென, முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பாரதூரமானது” என்று அவர் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

“அத்துடன், இதன்ஊடாக பெண்களை இரவுநேரக் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அப்படியாயின், அதற்கான சமூக பாதுகாப்பு, இலங்கையில் இருக்கிறதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், நவீன பாட்டாளிகளுக்கு புதிய அடிமை விலங்கை மாட்டியதோடு, ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் உள்ளாக்கியது.

24 மணித்தியாலங்களும் சுழலும் பெரும் ஆலைச் சக்கரங்களோடு தொழிலாளிகளை போட்டியிட வைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளிகள் சக்கையாய் பிழியப்பட்டனர். 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் கூட உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

“சிலர் 12க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுள்ள 5 பையன்களை சாப்பாட்டு இடைவேளையும் நள்ளிரவில் உறக்கத்துக்காக ஒரு மணி நேரமும் தவிர, இடைவேளை எதுவும் விடாமல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை மாலை 4 மணி வரை வேலை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கம்பளிக் கந்தல்களைப் பிரித்துப் பிய்க்கும் வேலை நடக்கும் இடத்தில், தூசியும்-பிசிறும் காற்றில் அடர்ந்திருக்கும்; வயது வந்த தொழிலாளியும் கூட நுரையீரலைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டியிருக்கும். “புழுதிப் பொந்து” என்று அழைக்கப்படும் பொந்து போன்ற இந்த இடத்தில் இப்படி 30 மணி நேரம் இந்தக் குழந்தைகள் ஓயாமல் உழைக்க வேண்டியிருந்தது” இது முதலாளித்துவ சமூகம் எவ்வாறு தொழிலாளிகளை - குழந்தைகளை சுரண்டியது என்பதை காரல் மார்க்ஸ் தனது “மூலதன” புத்தகத்தில் முதலாவது பாகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

1889 ஜூலை 14 அன்று பெரிசில் சோசலிஷ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம்” கூடியபோது, 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டு காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானித்திருந்ததும், 1890 மே 1 ஆம் திகதி சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டதும், இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது என்பதும் “8 மணித்தியால பணிநேரம்” உருவாகியதன் வரலாறு.

இது இவ்வாறு இருக்க இலங்கையில் சாப்பு மற்றும் அலுவலக சட்டங்களில் திருத்தத்தை கொண்டு வருவது ஊழியர்களை இயந்திரமயமாக்கி விடுவதற்காக என்ற கேள்வி எழாமல் இல்லை. அதுவும் 40 மணித்தியாலங்கள் கட்டாய வேலை என்பதில் பெண்களுக்கு இரவு நேர பணி என்பது கட்டாயமானதாக மாற்றப்படுவதாக இருந்தால் அது பாரியளவில் தாக்கத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தும் என்பது கண்கூடு.

வாரமொன்றுக்கு 40 மணித்தியால பணிநேரம் என்ற பொதியை வழங்கினால் பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரியக் கூடிய வகையிலும் சிறுவர்களை வேலைகளில் ஈடுபடுத்தக் கூடிய வகையிலும் சாப்பு மற்றும் அலுவலக சட்டம் நிச்சயம் திருத்தம் செய்யப்படும்.

தற்போது பொதுவாக காலை 8:30 மணிக்கு பணிக்குச் சென்று மாலை 4:30 மணிக்கு வீடு திரும்பும் முறை காணப்படுவதுடன், சில பணிகளின் தன்மையை பொருத்து அதில் மாற்றங்கள் காணப்படுகின்றன. எனினும் பொதுவாக பகல் நேர வேலையே அடிப்படையாக காணப்படுகின்றது.

பொதுவாக பகல் முழுவதும் உளைத்து களைத்திருக்கும் ஊழியர்கள் தங்கள் வாழ்ககையை அனுபவிக்க காணப்படும் ஒரு சந்தர்ப்பமான இரவு பொழுதும் புதிய சட்டத்திருத்தத்தில் இல்லாம் போய்விடும்.

புதிய திருத்தத்தின் ஊடாக , கணவன் ஒரு நேரத்திலும் மனைவி இன்னுமொரு நேரத்திலும் பணிக்குச் செல்லும் நிலை ஏற்படும். அத்துடன், இரவோ அல்லது பகலோ பணிபுரிய முடியுமென்ற நிலை காணப்படும்.இதன் ஊடாக நீண்ட பகல் பொழுதை சேமிக்க கூடியதாக இருந்தாலும் அது எம்மை போன்ற கலாசார வாழ்ககை முறையை கொண்ட நாட்டில் எவ்வாறு சாத்தியம் என்று தெரியவில்லை.

எப்படியாவது 40 மணித்தியாலங்கள் பணிபுரிய வேண்டும் என்று இந்த முறை அமைந்தாலும், போட்டிமிக்க சமூகத்தில் சம்பாதிப்பதற்கு மாத்திரம் மக்களை பழக்கப்படுத்தும் நிலை ஏற்படுத்தப்படுவதுடன், அதிகரிக்கும் வாழ்ககை செலவுக்கு அமைய மக்கள் அதிக நேரம் உழைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

இவ்வாறான வேலை முறைமைகள் ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்றன. அதனை நாமும் பின்பற்றுவதில் என்ன தவறு என்று நீங்கள் கேடட்கலாம் ஆனால், அங்கு குடும்ப வாழ்க்கை என்பது வெற்றியளிக்காத ஒன்று என்பதையும் அது எமது கலாசாரத்துக்கு ஒத்துவருமா என்பதையும் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

அத்துடன், முக்கியமான விடயமாக பெண்களுக்காக இரவு நேர கடமை குறித்து ஐரோப்பிய நாடுகளுமன் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, “சமூக பாதுகாப்பு” குறித்த கேள்வியும் எழாமல் இல்லை.

இந்த முறைமையானது தலைநகரை பொருத்த வரையில் ஜீரணிக்கக்கூடிய விடயம் என்றாலும், ஏனைய பிரதேசங்களில் அதற்கான பாதுகாப்பு என்ன நிலையில் உள்ளது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பட்டப் பகலிலேயே அரங்கேற்றப்படும் பெண்கள் மீதான வன்முறை, வன்புணர்வு, கொலை, கடத்தல் போன்ற சம்பவங்கள் இரவு நேரத்தில் இன்னும் எத்துணை இலேசாக அரங்கேற்றப்படும் என்பதையும் தூர நோக்கோடு கொஞ்சம் சிந்தித்து பார்கவேண்டும்.

அத்துடன், இரவு நேரங்களில் வெளியிடங்களில் அதிக வெளிச்சத்தில் தங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஹார்வர்ட்டில் உள்ள பொது சுகாதார பாடசாலையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த வெளிச்சத்தில் வாழும் பெண்கள் மார்பக புற்றுய்நோய் தாக்குதலுக்கு உள்ளாவது குறைவு எனவும் அந்த ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக, இரவு நேர பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக, இரவு நேர பணிகளில் ஈடுபடும் பெண்கள், அதிகப்படியான செயற்கை வெளிச்சத்தை உணர்கின்றனர். இதனால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அதனைத்தவிர, இரவு கடமைகளில் பெண்களை ஈடுபடுத்தும் போது, அவர் “பாலியல் ரீதியான பழிவாங்கல்” போன்றவற்றுக்கும் இலக்காகும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதை மறுக்க முடியாது. அத்துடன், ஊழியர்களின் உழைப்பை அதிகளவில் சுரண்டக்கூடிய நிலை ஏற்படும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எவ்வாறாவது 40 மணித்தியாலங்கள் வேலை செய்தால் மாத்திரம் போதும் என்ற நிலை ஏற்படும்போது, அது தவறான ஒரு வாழ்க்கை முறைக்கு இட்டு செல்லும் என்பதுடன், ஊழியர்களின் உழைப்பை சட்டரீதியாக சுரண்டும் சதிவலையோ என்று கூட எண்ணதோன்றுகின்றது.

ஊழியர்களுக்காக பாதுகாப்பு, வசதிகள் உழைப்பு சுரண்டல் இல்லை என்பவை உள்ளிட்டவற்றுக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை சாப்பு சட்டமா சாபம்தானோ என்று நினைக்க தோன்றுகின்றது.

ஜே.ஏ.ஜோர்ஜ்
நன்றி : சுடர் ஒளி

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top