1150 x 80 px

 

குட்டி அரசும்; மலையகத்தின் கனவும்

மலையகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான களம் எப்போதுமில்லாதவாறு இம்முறை சூடுபிடித்துள்ளது. மலையகத் தமிழர்களின் இரண்டு பெரும் அரசியல் சக்திகளாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் சமகாலத்தில் திகழ்கின்றன. கடந்த அரசின் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கை ஓங்கியிருந்தது போன்று, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசுக்கு வழங்கிய ஆதரவால் சமகால அரசின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவெடுத்துள்ளது.

புதிய தேர்தல் முறைமை, நுவரெலியா மாவட்டத்தில் மலையகத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களை மையப்படுத்தி நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளமை, மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சின் வீடமைப்புத் திட்டங்கள் போன்ற மூன்று முக்கிய காரணிகளால் இம்முறை தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள் வலுப்பெற்றுள்ளன. வீடமைப்புத் திட்டங்களைத் தாண்டிய பாரிய அபிவிருத்திகள் பெரும் எடுப்புடன் முன்னெடுக்காதபோதிலும், அரசியல் ரீதியாக மலையகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் சில சீர்திருத்தங்களால் மக்களின் கவனம் தேர்தலை நோக்கித் திரும்பியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவும் தொழிலாளர் அல்லாதவர்களாகவும் வாழும் மலையக மக்களுக்கு இலங்கையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது கடந்த காலத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் சென்றடைந்திருக்கவில்லை. ஆனால், இன்று சுகாதார சேவை முதல் ஏனைய சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துவருவதை நிராகரித்துவிடமுடியாது. மலைநாட்டு அமைச்சின் கீழ் பல முன்னேற்றகரமான அபிவிருத்தித் திட்டங்கள் மலையகத்தை நோக்கி நகர்ந்துள்ளமைக்கு பாரிய வரவேற்புள்ளது.

முக்கியமாக தோட்டப்புறங்களாக காணப்படும் லயன் குடியிருப்புகளை உடைத்து, மலைநாட்டு அமைச்சால் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் தோட்டப்புறங்கள் கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, மலையக சமூகத்திற்கு ஒரு முகவரியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமக்கென ஒரு முகவரி வேண்டுமென்பது மலையக சமூகத்தின் இரண்டு நூற்றாண்டுகாலக் கனவாகும்.

இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது கல்வியிலும் மலையக சமூகம் பெரும் பின்னடைவிலேயே பல தசாப்தங்களாக இருந்துவருகிறது. அதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன. ஆனால், சுகாதார சேவையில் இன்னமும் பாரிய மாற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. இன்னமும் தோட்ட நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கைக்கு உட்படாத தோட்டப்புற வைத்தியசாலைகளே அதிகளவில் உள்ளன. அதனை தற்போதைய மலையகத் தலைமைகள் நாடாளுமன்றில் அடிக்கடி சுட்டிக்காட்டியவண்ணமே உள்ளனர்.

அரசின் அபிவிருத்தித் திட்டங்களில் திட்டமிட்டு மலையகச் சமூகம் இதுவரைகாலமும் புறக்கணிக்கப்பட்டு வந்தமைக்கு முக்கிய காரணம் அந்தச் சமூகத்தின் அடிமட்ட அரசியலை முன்னெடுப்பதற்கான உரிமைகளும் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்காமையேயாகும். நுவரெலியா மாவட்டத்திலேயே மலையகத் தமிழர்கள் பெரும்பான்மையாக (54 சதவீதம்) வாழ்கின்றனர்.

நான்கு இலட்சத்துக்கும் அதிகமாக இங்கு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றபோதிலும், தேசிய அரசியலில் இவர்களின் பங்களிப்பு என்பது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மையப்படுத்தியே நீண்டகாலம் இருந்துள்ளது. குறிப்பிட்ட சில பிரதேச சபைகளில் மாத்திரம் தமது அடிமட்ட அரசியலை முன்னெடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்துவந்தனர். பல தசாப்தகால தமது அரசியல் பிரதிநிதித்துவக் கனவில் இன்று 50 வீதத்தையாவது உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளமை உண்மையில் மிகப் பெரிய வெற்றியாகும்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழக்கூடிய 99 சதவீதமான மக்கள் இந்தியாவிலிருந்து தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலைசெய்வதற்காக பிரித்தானியரால் அழைத்துவரப்பட்டவர்கள். அவர்களை அழைத்துவந்த பிரித்தானியர், அவர்களின் தொழில் நிர்வாக முறைமைக்கு கீழாகவே அந்த சமூகத்தின் நிர்வாகத்தையும் பேணிவந்தனர். 1817 முதல் 1972ஆம் ஆண்டுகள் வரையான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்கு கீழேயே இவர்கள் நிர்வகிக்கப்பட்டனர்.

1949ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தின்கீழ் குடியுரிமை பறிக்கப்பட்டமையும், 1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டமை என்பன மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீது இலங்கையை ஆண்ட அரசுகளால் பதியப்பட்ட கரும் புள்ளிகளாகவும், ஆறாத வடுக்களாகவும் உள்ளன.

1972ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து முற்றாக விடுபட்டு குடியரசான பின்னர் கொண்டுவரப்பட்ட தேசிய காணி சீர்திருத்தக் கொள்கைகள், தனியார் வசமிருந்த காணிகள் அரசுடைமையாக்கப்பட்டன. அதன்பின்னர் அரச பெருந்தோட்டயாக்கம், பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய அரச நிறுவனங்களின் கீழ் தோட்ட நிர்வாகங்கள் கொண்டு வரப்பட்டபோதிலும், 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை ஆட்சிமுறை உருவாக்கப்படும்வரை அரச நிர்வாகத்துக்குப் பதிலாக தோட்ட நிர்வாகமே மலையகத்தில் நிலவியது.

மாகாணசபை உருவாக்கத்தோடு 1949ஆம்ஆண்டு பறிக்கப்பட்டிருந்த வாக்குரிமை மீளக் கிடைக்கப்பெற்றதால் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஓரளவு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது. 1990களின் பின்னர் உள்ளூராட்சி சபைகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், உள்ளூராட்சி சபைகள் மூலம் இந்திய வம்சாவளி மக்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தடையாக 15ஆம் இலக்க உள்ளூராட்சி சபை சட்டம் காணப்பட்டமையால் இன்றளவும் உள்ளூராட்சி சபைகள் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கமுடியாத நிலைமை காணப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் இலங்கையில் "கம்சபா' எனப்படும் கிராமிய சபை முறைமையே நீண்டகாலமாக இருந்துவந்தது. இந்திய வம்சாவளி மக்கள் வாக்குரிமையற்றவர்களாக காணப்பட்டதால் பிரதேச சபை சட்டங்கள் உருவாக்கப்பட்டபோதே தோட்டப்புறங்கள் குறித்த சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், தோட்டங்களை தோட்டங்களின் நிர்வாகமே கையாளவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளபோதிலும், இன்னமும் சட்டம் திருத்தப்படாதுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தச் சட்டம் திருத்தப்படவேண்டும் என்பது முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறான சூழலுக்கு மத்தியில்தான் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தேர்தலை சந்திக்கிறது மலையக சமூகம்.

ஹட்டன் டிக்கோயா நகர சபை, வலப்பனை பிரதேச சபை, ஹங்குரன்கெத்த பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, மஸ்கெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை, கொத்மலை பிரதேச சபை எனப் பத்து உள்ளூராட்சி சபைகள் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்றன. நோர்வூட், மஸ்கெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டவையாகும். இந்த நான்கு சபைகளிலும் மலையகத் தமிழர்கள்தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் பிரதேச சபைகளில் "சேவல்' சின்னத்திலும், தமிழ் முற்போக்குக் கூட்டணி "யானை' சின்னத்திலும் போட்டியிடுகின்றன.

7 மாவட்டங்களில் போட்டியிடும் த.மு.கூட்டணி "யானை' சின்னத்தில் ஐ.தே.கவுடன் கூட்டணியாகவும் "ஏணி' சின்னத்தில் தனித்தும் போட்டியிடுகின்றது. கொழும்பு மாநகர சபையில் தனித்தே முற்போக்குக் கூட்டணி போட்டியிடுகிறது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் சு.கவுடன் கூட்டாகவும் தனித்தும் இ.தொ.கா. போட்டியிடுகிறது.

கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களிலும் த.மு.கூட்டணியும், இ.தொ.காவும் போட்டியிடுவதுடன், வன்னியில் இ.தொ.கா. தனித்தும், ஊவாவில் "வெற்றிலை' சின்னத்திலும் போட்டியிடுகிறது. கொழும்பு மாநகர சபையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரனை மேயர் வேட்பாளராக களமிறக்கி "சேவல்' சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிடுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 40 வீதம் த.மு.கூட்டணியும், 60 வீதம் ஐ.தே.கவும் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வேட்பாளர் தெரிவை மேற்கொண்டுள்ளன. வேட்பாளர்களில் 25 வீத பெண் வேட்பாளர்களை முற்போக்குக் கூட்டணி களமிறக்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

களமிறக்கப்பட்டுள்ள 132 பேரில் 34 பேர் பெண் வேட்பாளர்களாக உள்ளதுடன், ஐ.தே.க. கூட்டணியில் தமக்குக் கிடைத்துள்ள 40 வீதமான வேட்பாளர்களில் கூட்டணியின் கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி 57 சதவீதமான வேட்பாளர்களையும், மலையக மக்கள் முன்னணி 40 வீதமான வேட்பாளர்களைப் பகிர்ந்துகொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக சொல்லொணா துயரங்களை அனுபவித்துவரும் இந்தச் சமூகம், உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியில் ஓரளவுக்கேனும் பங்கொடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இம்முறை உருவாக்கப்பட்டுள்ள புதிய உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் ஓரளவுக்கேனும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கமுடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பல தசாப்தகாலமாக நாம் எதிர்கொள்ளும் சமூக, அடிப்படை, பொருளாதார, அரசியல் ரீதியான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, சிந்தித்து வாக்களித்து பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாகவுள்ளோம்.

சு.நிஷாந்தன்
நன்றி - சுடர்ஒளி

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top