1150 x 80 px

 

வலி சுமந்த வழி

"தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். வாழ்க்கையை சூழ்ந்துகொண்டுள்ள துன்பமேகங்கள் எம்மைவிட்டு அகன்று, இன்பமாக வாழ்வதற்குரிய ஒரு வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையையே மேற்படி சொற்பதம் எடுத்துரைக்கின்றது. ஆனால், பல வருடங்கள் கடந்தும், பல தை மாதங்கள் பிறந்தும் வழி பிறக்காத மக்கள் வாழும் தோட்டமொன்றை ( பெரட்டாசி தோட்டம்) கடந்தவாரம் பார்த்திருந்தோம்.

பாதை எமது அடையாளம், அதுவே நமது வாõழ்வியலின் வெளிப்பாடு ஒரு இனத்தின் வளர்ச்சியை பாதையைக் கொண்டே அளவிட்டுவிடலாம். அதனால்தான் என்னவோ மலையகத்தில் எத்தனையோ பாதைகள் புரனமைக்கப்படாமல் உள்ளதோ என்னவோ! அப்படிப்பட்ட ஒரு பின்தங்கிய வாழ்க்கை முறைக்கு பெரட்டாசி தோட்டத்தின் பாதையும் மிகப்பெரிய சான் றாகவுள்ளது.

இப்படி அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள மேற்படி தோட்டத்துக்குச் செல்லும் வழி வலிகளை சுமந்துகொண்டே இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டிலும் தை பிறக்கவுள்ளது. ஆனால், அம் மக்களுக்குரிய வழி......?

கொழும்பிலிருந்து சென்றதால் வந்த நித்திரையைக் கூட அந்தப் பாதையில் பயணிப்பதால் மறந்துபோனோம். குண்டும் குழியுமான அந்தப் பாதையில் பயணிப்பது எவ்வளவு அபாயகரமானது என்பது அதில் பயணிப்பவர்களுக்கு மாத்திரமே புரியும்.
வார்த்தைகளால் விபரிக்க முடியாத அந்தப் பய உணர்வு பாதைகளின் திருப்பத்தில் செல்லும்போது என்னைத் தொற்றிக்கொண்டது.

வளைவுகளில் சாரதியின் கவனம் சற்றே சிதறினாலும் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் விழக்கூடிய அபாயம். அவ்வாறு விழுந்து இறந்துபோனவர்களின் இடங்களையும் அங்கிருந்த நண்பர் ஒருவர் எங்களிடம் காட்டினார்.
இலங்கையில் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு கட்டு நாயக்க நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைகள் என மூன்று நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர்த்து பெருந்தெருக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், மலையகத்தில் காணப்படும் வீதிகள் இன்னும் முறையாக அபிவிருத்தி செய்யப்படாமலிருப்பது கவலையளிக்கிறது.

மலையகத்தில் கடந்த காலங்களை விட, தற்போது அதிகளவான அபிவிருத்திகள் கிடைக்கப்பெற்றுக்கொண்டிருகின்றபோதிலும், சில முக்கிய வீதிகள் தற்போதுவரையில் அபிவிருத்திசெய்யப்படாமலேயே இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

அவ்வாறான ஒரு வீதியினால் புஸல்லாவை பெரட்டாசி தோட்டமக்கள் இன்றுவரை படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

புஸல்லாவை நகரிலிருந்து பெரட்டாசி தோட்டத்திற்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது நபர் ஒருவருக்கு 150 ரூபா செலவிட வேண்டும். சென்று வருவதனால் நபர் ஒருவருக்கு குறைந்தது 300 ரூபா வரையில் செலவுசெய்ய வேண்டியுள்ளது.

IMG_20171217_162820.jpg

ஒரு குடும்பம் ஏதாவது ஒருதேவைக்காக நகரிற்குச் சென்று வருவதானால் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரட்டாசி தோட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையே உள்ளது. ஆரம்பத்தில் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் அங்கு இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

அப்போது நடத்துநர் தனது விருப்பப்படி பஸ் கட்டணங்களைத் தீர்மானித்து அதிக கட்டணங்களை வசூலித்ததாக பஸ்ஸில் எனக்கருகில் பயணித்தவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கால்நூற்றாண்டாக கண்டுகொள்ளப்படாத இந்தப் பாதையை சீரமைக்கக் கோரி மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டங்கள் எல்லாம் ""செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது''.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்தப் பாதை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்குகொண்டு சென்று அதனைப் புனரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனால், புஸல்லாவை நகரில் இருந்து பழைய தோட்டம் வரையில் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம்வரை பாதை மாத்திரமே கார்பட் இடப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தினால் இந்தப் பாதைப் புனரமைப்புப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.

குறித்த பாதையை பிரதான போக்குவரத்தை நம்பியே, டெல்ட்டா தோட்டம், வீடன் தோட்டம், காச்சமலை தோட்டம், கட்டுகித்துல தோட்டம், ஏழாங்கட்டை தோட்டம், அயரி தோட்டம், மோரியல் தோட்டம், ஸ்டோர் லயம் தோட்டம், பூச்சிகொட தோட்டம், பெரட்டாசி தோட்டம் மற்றும் ரஸ்புக் தோட்டம் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள்.

சுமார் 25 கிலோமீற்றர் தூரம் உள்ள இந்தப் பாதையானது அரசியல் காரணங்களாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளாலும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இப்பகுதி மக்கள் ஏதேனும் அவசர மருத்துவ தேவைகளுக்காக புஸல்லாவ வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. 25 கிலோமீற்றர் தூரம் உள்ள வைத்தியசாலைக்கு அதுவும் இந்தக் குண்டும் குழியுமான பாதையில் நோயாளர்களைச் சுமந்து செல்வது எவ்வளவு சவாலான காரியம் என நினைத்துப் பாருங்கள்.

குறித்த பாதையில் 5 தடவைகள் பஸ் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாடுகாயமடைந்துமுள்ளனர். நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போதே உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியிருப்பதை அங்கு நாங்கள் சந்தித்த ஒவ்வொரு மக்களும் எங்களுக்கு நினைவு படுத்திச்சென்றனர்.

குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாய்க்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் அந்தத் தோட்டமக்களைப் பெரிதும் பாதித்திருப்பதை உணரமுடிந்தது.

சாதாரண காய்ச்சல், தலைவலிகளுக்கு கூட பல தடவைகள் வைத்திய சோதனை செய்துகொள்வோருக்கு மத்தியில், இருதய வலிகூட ஏற்பட்டாலும் வைத்தியசாலைக்கு செல்லமுடியாமல் தவிக்கும் மக்களும் மலையகத்தில் வாழ்கின்றார்கள்.
சாதாரண போக்குவரத்து கூட, அந்த மக்களுக்குரிய வகையில் கிடைப்பதில்லை.

காலை 8.45இற்கு முதலாவது பஸ் புஸல்லாவையை நோக்கிச் செல்கிறது. பாதையின் அல்லோலகல்லோலத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட பஸ்சேவையே ஈடுபடுத்தப்பட்டுள்ளது. காலையில் முதல் பஸ் சேவை 8.45 மணிக்கே ஆரம்பிப்பதால் நகர்ப்புறங்களில் இருந்து குறித்த தோட்டப் பகுதிகளுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செல்லும் ஆசிரியர்கள் காலை 9.30 மணிக்குப் பின்னரே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.

இதனால் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவேண்டிய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே ஆரம்பிக்கப்படுகின்றன. இதே நிலைமைதான் மாணவர்களுக்கும். உரியநேரத்தில் அவர்களும் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளது.

இதனால் அங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சி பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இந்தப் பகுதிகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் அரச உத்தியோகத்தர்களும் தங்களது சேவையை முன்னெடுப்பதில் பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.குறிப்பாக, இப்பகுதிகளில் சேவை செய்யும் கிராம உத்தியோகத்தர்களும் மக்களுக்கு தங்களது முழுமையான சேவையை வழங்க முடியாதுள்ளதாக கவலைகொள்கின்றனர்.

மக்களின் மேலதிக வருமானத்திற்காக மரக்கறித் தோட்டங்களையே நம்பியுள்ளனர். ஆனால், இந்தப் பாதையின் அவல நிலைமையினால் இதனையும் முறையாக சந்தைக்கு கொண்டுசெல்ல முடியாதுள்ளது.

பாதையை சீரமைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து செய்து வரும் மக்கள், எங்களது பாதையை நாங்களே சீரமைத்துக்கொள்கின்றோம் எனத் தெரிவித்து, அண்மையில் சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இப்பாதை அபிவிருத்தி தொடர்பில் கொத்மலைப் பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், முத்து சிவலிங்கம், பாதையை புனரமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் "சுடர் ஒளி'க்கு தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் இப்பாதை அபிவிருத்தி தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதிக சிரத்தையுடன் செயற்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்தப் பாதையை முழுமையாகப் புனரமைக்க முடியாது போயுள்ளதாகவும் வருத்தத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாதை தொடர்பில் மலையகத்தலைவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றில் குரல்கொடுத்து வந்திருந்தாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்க எவரும் முன்வரவில்லை எனவும் அப்
பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பா.நிரோஸ்
- நன்றி சுடர்ஒளி

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top