1150 x 80 px

 

தொண்ட-மானை மதிப்போம் : ஊழல்வாதி-களை மிதிப்போம்

நேர்கண்டவர் : பா.நிரோஸ்

”அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானை நாங்கள் மதிக்கிறோம். எனது அம்மா, அப்பா என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் அவர். அதற்காக அவரின் பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க இடமளிக்க முடியாது. அவர்களுக்கு எதிராக எப்.சி.ஐ.டிக்கு விரைவில் செல்ல உள்ளோம்"

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ”சுடர்ஒளிக்கு” வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு

முற்போக்குக் கூட்டணியின் சாதனைகள் என்ன?

ப:- அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, எனது தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன புரிந்துணர்வுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஆரம்பித்தபொழுது, இது தேர்தலுக்கான கூட்டணியென பலரும் விமர்சித்தனர். ஆனால், இன்று விமர்சித்தவர்களே வியக்கும் வகையில் வட-கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டணிக்கான சிறந்த தலைமைத்துவத்தினை அமைச்சர் மனோகணேசன் வழங்க, நானும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவரோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றNhம். எதையெல்லாம் செய்வதாகக் கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் வாக்கு கேட்டார்களே. இன்று. அதையெல்லாவற்றையுமே சாத்தியமாக்கியுள்ளோம். பல வருடகாலமாக பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இழந்திருந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்று மீண்டும் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, மாத்தறை, களுத்துறை,காலி, குருநாகல் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கும் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு வருகின்றன.

கணியுரிமை, வீட்டுரிமையற்று வாழ்ந்த பெருந்தோட்ட மக்களுக்கும் இலங்கை நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கும் 7 பேர்ச் தூய உரித்துடனான காணியினைப் பெற்றுக் கொடுத்து வருகின்றNhம். இரண்டாக இருந்த அம்பகமுவை, நுவரெலியா ஆகிய பிரதேச சபைகள் ஆறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வருடகாலமாக பெருந்தோட்ட மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க தடையாகவிருந்த பிரதேச சபை சட்டம் திருத்தப்பட்டிருக்கின்றது.

மலையகத்திற்கான அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டு வருகின்றது. பிரதேச செயலகங்களும் வெகுவிரைவில் அதிகரிக்கப்படவிருக்கின்றன. இவையனைத்துமே இத்தனை வருடங்களாக பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. இவை தனியாக பிரிந்து நின்று செயற்பட்டிருந்தால் சாத்தியமாகியிருக்க வாய்ப்பில்லை கூட்டணியினாலேயே சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

சிறந்த செயலாற்றுகைக்கான விருது தங்களின் அமைச்சுக்கு கிடைத்திருக்கிறதே?

ப:-பெருந்தோட்ட மக்களுக்கு பணிகள் செய்ய அமையப்பெற்ற அமைச்சுக்களில் சிறந்த செயலாற்றுகைக்கான விருது மலையக வரலாற்றில் முதன்முறையாக எனது அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பேன் என்று வாக்குறுதியளித்ததன் விளைவாகவே மக்கள் எனக்கான அதிகாரத்தினை வழங்கினர். மக்களுக்கு நான் வழங்கிய வாக்குறுதியினை சரிவர செய்தமைக்கான கிடைத்த விருதே இந்த விருது. எதிர்காலத்தில் இந்த அமைச்சிற்கு யார் வந்தாலும், நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அமைச்சில் நாங்கள் எதனையும் கொள்ளையடிக்கவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்றதுபோல் ஊழல் இல்லாமல் மக்களுக்கான பணத்தினை மக்களுக்கே சென்றடையச் செய்வதில் மகிழ்ச்சி.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?

ப:-பிளவுபடாத இலங்கைக்குள் சகல இனங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான வழியேற்படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். சிலர் தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்காக புதிய அரசியலமைப்பினை இனவாத நோக்கோடு அணுகுகின்றனர். இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் இனக்கலவரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளினால் ஒரு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையே காரணமாகும். அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் நாட்டில் ஏற்படாத வகையில் அதற்கான வழியை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஹட்டனில் முழுமையடையாமல் போடப்பட்டிருக்கும் காபட் பாதை பொது மக்களுக்காகவா? அல்லது மோடிக்காகவா?

ப:-ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை வரையிலான வீதியினை அபிவிருத்தி செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமும் உரிய அமைச்சிடமும் கோரிக்கையினை நாம் முன்வைத்தமைக்கு அமைவாக, ஹட்டன், பொகவந்தலாவை பாதைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. பாரத பிரதமர் மோடி வருகையின் நிமித்தம் வீதியின் ஒரு பகுதி சீர் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மலையகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்க, தொண்டமான் பெயர் நீக்கம் இப்போது அவசியமா?

ப:- இந்தப் பெயர் நீக்கம் இப்போது எங்களுக்கு தேவையானது அல்ல. வருகின்ற உள்ராட்சி மன்றத் தேர்தலில், அவர்களுக்கு தேவையானது தேர்தல் நாடகத்தினை அரங்கேற்றவே பெயர்மாற்ற விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் மக்களுக்கு தெளிவடைவது அவசியம். அதேபோல மக்களிடம் தெளிவினை கொண்டு செல்வதும் ஊடகத்தின் பொறுப்பு.
தொண்டமானின் பெயர் நீக்கம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தங்களின் பிழைப்புவாத அரசியலை நடத்தி வருபவர்கள், இதனை வேறு விதமாக திசை திருப்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானை நாங்கள் மதிக்கிறNhம். எனது அம்மா, அப்பா என நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்ட தலைவர் அவர். அதற்காக அவரின் பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க இடமளிக்க முடியாது. அவர்களுக்கு எதிராக எப்.சி.ஐ.டிக்கு விரைவில் செல்ல உள்ளோம்.
இவர்களின் திறனற்ற நிர்வகிப்பினால் இன்று எனக்கெதிராக விமர்சனம் முன்வைக்கப்படும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையம், இறம்பொடை கலாசார நிலையம், நோர்வூட் விளையாட்டு மைதானம் மற்றும் பிரஜாசக்தி என்பன எமது மலையக சமூகத்திடமிருந்து கைநழுவி செல்லவிருந்ததை எனது அமைச்சுக்கு கீழாக கொண்டுவந்து ஆரம்ப காலங்களில் இயங்கிய பெயர்களிலேயே இன்று சரியாக நிர்வகித்து வருகின்றேன்.

”100 நாள்” வேலைத்திட்டத்தின்பொழுது கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு கீழாக இந்த நிறுவனம் இருந்த காலகட்டத்தில் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையம் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கும், றம்பொட கலாசார நிலையம் உயர் கல்வி அமைச்சுக்கும் நிர்வகிக்க வழங்கப்படவிருந்தது.

அவ்வாறானதொரு நிலையேற்பட்டிருந்தால் இன்று இரண்டு நிலையங்களுமே செயலிழந்திருக்கக்கூடும். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் சட்டக்கோவையில் சரத்து 7 மன்றத்தின் குறிக்கோள்கள் உப பிரிவில், நான்கு நிறுவனங்களும் ஏதேனும் அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுதலாகாது என குறிப்பிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான நிர்வாகத்தில் முழுக்க முழுக்க அரசியல்மயப்பட்டதாக கட்சி காரியாலயமாக பிரஜாசக்தி நிலையங்கள் போன்றன இயங்கி வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. பிரஜாசக்தியின் மனிதவளங்கள் இன்றும்கூட அரசியல் சார்ந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

நோர்வூட் மைதானம் பாவனைக்குதவாமல் பூட்டி வைத்திருந்ததை மறக்க முடியாது. சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னர் அவர் பெயரில் மன்றம் ஆரம்பித்து அதனை முறையற்ற வகையில் நிர்வகித்து அரச நிதியை மோசடியில் செய்திருக்கிறார்கள். மலையக மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், மலையக சமூகத்தில் இருந்து கை நழுவி செல்லவிருந்த நிறுவனங்களை எனது அமைச்சுக்குக் கீழ் கொண்டு வந்து இன்று முறையாக நடத்தி வருகின்றேன்.

பிரஜாசக்தி ஊழியர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே..?

ப:- பிரஜாசக்தி ஊழியர்கள் எவரும் பழிவாங்கப்படவில்லை. சிலரின் அரசியல் பகடைக்காய்களாக பிரஜாசக்தி ஊழியர்கள் மாறியிருக்கின்றார்கள். ஒருவேளை பிரஜாசக்தி என்னால் ஆரம்பிக்கப்பட்டு இன்று அவர்களின் கைக்கு சென்றிருந்தால் பழிவாங்கல் நடந்திருக்கும். ஆனால், இன்று அவர்கள் சுயாதீனமாக செயலாற்றுகின்றார்கள். பழிவாங்க வேண்டிய தேவை எனக்கேற்பட்டிருப்பின் ~100 நாள்| வேலைத்திட்டத்தில் பிரஜாசக்தி நிலையங்கள் நெனசல நிலையங்களாக மாற்றப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருமே அதற்கு தலையசைத்தனர். நானும் அதற்கு தலையசைத்திருந்தால் இன்று பிரஜாசக்தி ஊழியர்களின் வாழ்வாதாரம் என்னவாயிருக்கும்? அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கும். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு எனது அமைச்சு கீழ் வந்ததன்பின் அவர்களை நேரடியாக எனது அமைச்சின் நிரந்தர அரச ஊழியர்களாக மாற்றி கட்டமைத்துள்ளேன்.

என் பொறுப்பில் இல்லாத 2015 செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இருந்த சம்பள நிலுவை தொகையினையும் வழங்கியிருந்தேன். ஆனால், முன்னைய காலப்பகுதியில் இவர்கள் நிரந்தர ஊழியர்களாக அல்லாமல் மன்றத்தின் ஊழியர்களாக நியமனம் வழங்கி அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்.

பிரஜாசக்தி ஊழியர்கள் எவருமே எனக்கு அரசியல் செய்யத் தேவையில்லை. அவர்களின் பணியினை செய்தாலே போதும். அதைவிடுத்து உள்ளக வெளியக அரசியல் செய்தால் அவர்கள் ஆசனத்தில் நீக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது.

உள்ராட்சி மன்றத் தேர்தலை தமிழ் முற்போக்கு கூட்டணி எவ்வாறு கையாளப்போகிறது?

ப:-உள்ராட்சி தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றது. பேச்சுகள் முடிந்த பின்னரே அது தொடர்பில் முழுமையாக கூற முடியும். எங்களுக்கு சாதகமான முறையில் பேச்சுகள் முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே, நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவோம். இல்லாது போனால் தனித்தே களத்தில் இறங்குவோம்.

உள்ராட்சி மன்றத் தேர்தலில் 25 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு தோட்டத் தொழிலாளர்களை போய்ச்சேருமா?

ப:- பெண்களுக்கு 25 சதவீதம் மட்டுமல்ல, அதனை தாண்டியும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இன்று மலையகத்தை சேர்ந்த ஆளுமையுள்ள பெண்கள் சமூக சிந்தனையுடன் செயலாற்றி வருகின்றார்கள். அவர்களும் அரசியலில் பங்குதாரர்களாக வேண்டும். உள்ராட்சி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எமது தொழிற்சங்கத் தலைவிகள் பலரும் அவர்களுக்கான களத்தை தருமாறு கோரியுள்ளனர். அதுதொடர்பில் நிச்சயமாக கவனம் செலுத்துவோம். கண்டிப்பாக எதிர்வரும் உள்ராட்சி மன்றத் தேர்தலில் எனது கட்சியில் அதிகமான பெண் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள்.

வடக்கில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையக வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக பிரசாரம் செய்யப்படுகிறதே உண்மையா?

ப:-நீங்கள் சொல்வது உண்மைதான். பிரசாரம் செய்யப்படுகிறதே தவிர, உண்மையில் கட்டப்படவில்லை. இன்று மலையகத்தில் 160,000 நிர்மாணிப்பதற்கான தேவையுள்ளது. எனவே, நாங்கள் புதிய நவீன உத்திகளையும் கையாளவேண்டிய தேவையுள்ளது. அதற்காக மக்கள் ஏற்காத திட்டங்களை முன்வைக்க மாட்டோம். மக்கள் மத்தியில் எதை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துவதென தலைகால் புரியாத சிலர், இன்று எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிப்பதற்காகவே மக்கள் மத்தியில் முகம் காட்டுகின்றார்கள். பொருத்துவீடுகள் என்கின்றார்கள். வழங்கப்படும் காணி உரித்து முறையானதல்ல என்கின்றார்கள். இன்று மலையகத்தில் கட்டப்படுகின்ற வீடுகள் இதுவரை காலமும் புழக்கத்தில் இருந்துவந்த முறைமையே. வழங்கப்படுகின்ற காணி உரித்தும் முறையாக காணி அமைச்சினால் வழங்கப்படுகின்ற (சின்னக்கர ஒப்பு) உரித்து. இன்று பரவலாக எல்லா மாவட்டங்களிலும் எல்லாப் பிரதேசங்களிலும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டப்படவில்லை என்று காட்டுகின்ற ஒரு தனியார் நிறுவன ஊடகம் கட்டிய வீடுகளை ஒருநாளும் மக்களிடம் காட்டியதில்லை.

2 ஆயிரம் மில்லியனில் 25 ஆயிரம் வீடுகள் சாத்தியமா?

ப:-எங்களது இலக்கு 25 ஆயிரம் வீடுகள் அல்ல.ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளே. இந்திய அரசு இதுவரை 14 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க எமக்கு உதவி செய்திருக்கிறது. எமது அமைச்சினாலும் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளை ஒரே வருடத்தில் அடைய முடியாது. இத்தனை வருடகாலமாக இருந்த கனவை நனவாக்கியுள்ளோம்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதை நான் அவதானித்து வருகின்றேன். எமது மக்களுக்கு அவர்களை மீறி எவரும் எதுவும் செய்து விடக்கூடாது என்ற எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது.

பொகவந்தலாவில் மேற்கொள்ளப்படும் மாணிக்கக்கல் அகழ்வினால் சுற்றுச்சுழல் பாதிப்புக்கள் ஏற்படுகிறதே...

ப:-பொகவந்தலாவையில் இடம்பெற்றுவரும் மாணிக்கக்கல் அகழ்வு குறித்த பெருந்தோட்ட கம்பனி மாணிக்கக்கல் அதிகார சபை ஆகியன இணைந்து அனுமதியளித்து இடம்பெறுவதாகும்.
இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற மாணிக்கக்கல் அகழ்வு மக்களை பாதிக்காதவகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் இடம்பெற வேண்டுமென்பதை நாம் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றோம்.

அடிக்கல் அதிகமாகவும் திறப்பு விழாக்கள் குறைவாகவும் இருக்கிறதே..?

ப:-அடிக்கல் அதிகமாகவும் திறப்புவிழாக்கள் குறைவாகவும் இருப்பதற்கு காரணம் அடிக்கல் நடப்படுவது ஒரே காலப்பகுதியாகவும் மக்களுக்கு கையளிப்பது வெவ்வேறு காலப்பகுதியாகவும் காணப்படுகின்றது. அதேபோல அடிக்கல் நடுவதை மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செல்லும் ஒருசில ஊடகங்கள் மக்களுக்கு கையளிக்கப்படும் நிகழ்வுகளை காட்ட முனைவதில்லை. இந்த வீடமைப்புத் திட்டம் மாத்திரமல்ல. எல்லா அபிவிருத்தித் திட்டங்களுமே அவ்வாறான நிலையில்தான் உள்ளன. இன்று தங்களுடைய அலைவரிசையின் வீச்சிக்காக மக்களின் இல்லாமைகளை, எதிர் விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே அதிகமாகவிருக்கின்றது. ஆனால், அடிக்கல் நடப்படுகின்ற அதேநேரம் அடிக்கல் நடப்படாமலும் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வருடத்தில் மாத்திரம் 2550வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வருட இறுதியில் அதில் அநேகமானவை மக்களுக்கு கையளிக்கப்படும்.

- நன்றி சுடர் ஒளி (பா.நிரோஸ்)

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top