1150 x 80 px

 

சோதனைகளை சாதனைகளாக்கிய நம்மகத்து சிவாஜி

""கலை'' என்பது மனிதனின் பிறப்போடு பிறந்தது."ஒருமையில் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைப்பு' என்பது வள்ளுவன் மொழி. ஒருவன் கற்ற கல்வியே அவனுடைய ஏழு பிறவிக்கும் பலன் சேர்க்கும்போது, ஒருவருடைய கலை அவரின் புகழை பிறவிகள் தாண்டியும் கொண்டு சேர்க்கும் அல்லவா! எல்லோராலும் கலைஞனாகிவிட முடியாது. தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதன் மூலமாகவே கலை ஒருவனுக்கு வாய்க்கப் பெறுகின்றது.

"இறைக்கின்ற கிணறு ஊறும்' என்பது போல கலை பயிலப்பயில ஒருவரை வந்தடைகிறது. மண்ணுலகில் எத்தனையோ கலைஞர்கள் பிறக்கின்றார்கள். பின்னர் மறைகின்றார்கள். ஆனால், இந்தக் கலைஞர்கள் மாத்திரம் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள். உதாரணமாக பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனை வைத்துக்கொள்வோம். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், இன்றும் கூட அவர் நடித்த திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது, எல்லோரும் அவரை மீட்டிப்பார்க்கின்றோம். சிவாஜிகணேசன் மாத்திரமல்ல, நிறைய கலைஞர்களை அப்படித் தான் நினைவு கூர்கின்றோம்.

இலங்கையின் கலை வளர்ச்சியை பார்த்தால் அது பல நூற்றாண்டுக்களை கொண்ட பகுதியாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்பகாலக் கலைஞர்கள் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியது. ஆனால், அத்தகைய துறை இன்று வீழ்ச்சியுற்ற நிலையிலேயே இருக்கின்றது. காரணம், இன்று ஈழத்தில் பெயர் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு கலைகள் வளர்ச்சி பெறவில்லை.

கலை வளர்த்தவர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். வருபவர்களோ, வருகிறார்கள் போய்விடுகிறார்கள் அவ்வளவு தான். அந்த மாதிரியான ஒரு தருணத்தில் தான் தென்னிந்தியத் திரைப்படமான "பைலட் பிரேம்நாத்' படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரு நடிகரை நான் தேடிப்பிடித்தேன். ஒரு பொப்பிசைப் பாடகர் மேடை, திரைப்பட நடிகராகிய கதையைத்தான் இன்று பார்க்கவிருக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல, நமது நாட்டின் மூத்த கலைஞர் ஜி.ஜே.ராஜ்.

கேள்வி : ஒரு மலையகத்து கலைஞன் என்ற வகையில் மண்வாசம் வீசும் உங்களுடைய ஊர் மற்றும் இளமைக்காலத்தைப் பற்றி கூறமுடியுமா?

பதில் : நான் பொகவந்தலாவையில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மூன்று சகோதரிகள். நான் கல்வி பயின்றது ஹொலிரோசரி பாடசாலையில். சிறு வயதில் எனக்கு அதிகமாக கூச்ச சுபாவம் இருக்கும். அந்தக் குணத்தினால் ஆர்வம் இருந்தும் கூட, சில பாடசாலை நிகழ்வுகளில் நான் பங்குபற்றுவதில்லை. வகுப்பறைகளில் பின் இருக்கையிலேயே அதிகமாக அமர்ந்திருப்பேன். யாருடனும் பேச விரும்புவதும் இல்லை. அவ்வாறான ஒரு தருணத்தில் நான் தரம் 5 இல் படித்துக்கொண்டிருந்தேன்.
எங்களுடைய வகுப்பாசிரியராக ஆசிர்வாதம் என்பவர் இருந்தார். அவர் பொதுவாக பாடசாலை இலக்கிய நிகழ்வுகளை அவரே முன்னின்று நடத்துவார். அதே போன்று பாடசாலையில் கற்கும் மாணவர்களை தெரிவு செய்வதும் அவரே. ஒரு நாள் அவருடைய தேடலில் நான் மாட்டிக்கொண்டேன். பாடசாலை நிகழ்வுகள் மாத்திரமன்றி, வகுப்பறையிலேயே எதற்கும் முன்வராமல் பின்னிற்கும் மாணவன் நான் என்பதை அறிந்துகொண்ட அவர், என்னை ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்தார். ஆனால், நான் அந்த நிகழ்வில் பாடவில்லை.வெட்கப்பட்டுக்கொண்டு மறைவாகவே இருந்துகொண்டேன். அதைப் பார்த்த அவருக்கு சரியான கவலை ஏற்பட்டது.அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது அவர் என்னை பிடித்து பிரம்பால் அடித்த அடி இன்றும் கூட நினைத்தால் வலிக்கும் நிகழ்வாக இருக்கிறது. அந்த அடி தான் இன்று கலைத்துறையில் நான் சாதிப்பதற்கு உந்துதலாக அமைந்திருக்கிறது.

தொடர்ந்து வகுப்புகள் உயர்த்தப்பட்டேன். ஆனால், எனக்குள் ஒரு கலையார்வம் இருப்பதை உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. தரம் 8 இல் படிக்கும் போது மாவட்ட ரீதியிலான நாடகப்போட்டிகள் பாடசாலை ரீதியாக நடைபெற்றன. "யாழ் நூல் அரங்கேற்றம்' என்ற நாடகத்தில் நக்கீரனாக நடிப்பதற்கு மாணவர் தெரிவுகள் நடைபெற்றன. அதில் அனைத்து மாணவர்களையும் பின்னுக்கு தள்ளி என்னுடைய குரல் வளத்தால் நான் தெரிவுசெய்யப்பட்டேன். அந்த நாடகம் எனக்கு பெரிய புகழை பெற்றுத்தந்தது. அந்தக்குரல் தான் இன்று என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது. பாடசாலை நாடகங்களில் நடிக்கத்தொடங்கிய அதேவேளை, நான் வெளி மேடைகளிலும் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினேன். சிறு வயதிலே நடிக்கத்தொடங்கியதன் பின்னணி தான் இன்று 54 வருடங்களை திரைத்துறையில் கடக்க காரணமாக இருக்கின்றது.

கேள்வி : பாடசாலைக் காலத்தில் மேடை நடிகராக அறிமுகமாகிய நீங்கள், முதலாவது கலைத்துறை பிரவேசத்தில் எப்போது இணைந்து கொண்டீர்கள்?

பதில் : "மரியசூசை' என்ற என்னுடைய மாமா சிறந்த இசையமைப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய தம்பியும்தான் கலைமேடையில் என்னை ஏற்றிவைத்தவர்கள். "தேவமாதாவின் அற்புதங்கள்' என்ற நாடகத்தில் பிச்சைக்காரனாகவும், பாதிரியாராகவும் இரண்டு வேடமிட்டு நடித்திருந்தேன். அந்த நாடகத்தில் என்னுடைய முழுத்தி றமையையும் நான் புரிந்துகொண்டேன். அது தான் என்னுடைய முதல் கலைப்பிரவேசம்

கேள்வி : மலையகத்திலிருந்து நடிப்பதற்காக கொழும்புக்கு வந்துவிட்டு செல்வீர்களா?

பதில் : மலையகத்தில் நான் இருக்கும்போது வணத்து என்றொரு நண்பர் எனக்கு இருந்தார். நான் அவருடன் சேர்ந்துகொண்டு என்னுடைய ஊரில் இருக்கும் சேர்ச்சில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவேன். என்னை வளர்த்த பெருமை ஹொலிரோசரி சேர்ச்சையும் சாரும். அதைத்தவிர, என்னுடைய பிரதேசத்தில் "எமனுக்கு வேலை
நீக்கம் செய்யப்படல்' என்ற வில்லுப்பாட்டை 38 தடவைக்கும் மேலாக அரங்கேற்றியிருந்தேன் நான். அந்த நிகழ்ச்சி அந்தப்பகுதி மக்களிடையே எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதற்குப் பின் வேலைநிமித்தமாக மாத்தளைக்கு மாற்றம் பெற்றேன். அங்கு மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன், நமசிவாயம் போன்ற ஒரு கலைஞர் குழு இருந்தது. அச்சமயத்தில் நான் மாத்தளை தமிழ்மன்றத்தின் உபதலைவராக இருந்தேன். அந்தக்காலகட்டத்தில் ஐக்கிய தோட்டத்தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பினூடாக என்னை கலாசார செயலகப்பிரிவின் செயலாளராக தெரிவு செய்தார்கள். அதில் ஒரு பெரிய கௌரவம் இருக்கிறது. என்னவென்றால், இலங்கையில் முதலாவது மலையக இலக்கிய விழாவை நடத்தியவன் நான் தான் என்ற பெருமையே அது. அக்காலப்பகுதியில் அரசியல் உட்பூசல்கள் அதிகமாக காணப்பட்டன. அந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டு மலையக இலக்கியவிழாவில் "இரு துருவங்கள்'என்ற நாடகத்தை நானே இயக்கி நடித்திருந்தேன். ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக அந்த நாடகம் மேடையேற்றப்படவில்லை. அதே போன்று சாதாரண தரம் கற்கும்போது "ஏழு வீரர்கள்'என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அதிலும் நடித்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்தப் படம் திரைக்கு வரவில்லை. அதற்கு பிறகு கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன். கொழும்பில் கனி, ஜீவா போன்றோர் நண்பர்களாக அறிமுகமானார்கள். எனக்கு நாடகம் போலவே பொப்பிசைப் பாடல்கள் பாடுவதிலும் அலாதியான விருப்பம் இருந்தது. என்னிடம் அவர்கள் இருவரும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக கூறினார்கள். அந்த நிகழ்ச்சியில் கொழும்பு ரோயல் கல்லூரியில் "யாதோங்கி பாரத்' என்ற பெயரில் அரங்கேற்றப்பட்டது. அதில் நான் முதல் முதலாக பாடல் ஒன்றை பாடினேன்.அந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், இலங்கையின் சிறந்த பாடகர்களுடன் நானும் அறிமுகமானேன். அதன் காரணமாக எனக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியுடன் கொழும்பில் என்னை நிலைநிறுத்திக்கொண்டேன்.

கேள்வி : போல் ராஜ் ஆகிய நீங்கள் ஜி.ஜே.ராஜ் ஆக மாறிய கதையை கூறமுடியுமா?

பதில் : இயக்குநர் கே.செல்வராஜன் என்னுடைய 50ஆவது மேடை நிகழ்ச்சியின் போது என்னுடைய பெயருக்கு ஒரு அழகான விளக்கத்தை கொடுத்திருந்தார். கொழும்பின் தலைநகரில் ஒரு இசை நிகழ்ச்சியை முதன்முதலில் ஆரம்பிக்கும்போது அந்த நிகழ்ச்சியை ஜி.ஜே என்டர்டெயின்மென்ஸ் நிறுவனமே செய்வதற்கு முன்வரும். அந்தத் தருணத்தில் ஏ.ஈ. மனோகரன் பொப்பிசைத் துறையில் சிறப்புற்று திகழ்ந்தார்.அவருடன் நானும் சேர்ந்துகொண்டு பொப்பிசை பாடிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் தான் அவர் என்னுடைய பெயரை ஜி.ஜே.ராஜ் என மாற்றவேண்டும் என கூறியிருந்தார். ஆகவே, என்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜி.ஜே என்டர்டெயின்மென்ட்ஸ் முன்னின்று நடத்தியதால் என்னுடைய பெயரை ஜி.ஜே.ராஜ் என மாற்றிக்கொண்டேன்.

கேள்வி : பொப்பிசை ஜாம்பவான்கள் அதிகமாக இருந்த அக்காலப்பகுதியில், பொப்பிசைத்துறையில் பிரவேசிக்க எப்படி சந்தர்ப்பம் கிடைத்தன?

பதில் அந்த நேரத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் "அரங்கேற்றம்' என்ற நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அப்போது பாடுவதற்கு ஆர்வம் உள்ள சிலரை அந்த நிகழ்ச்சியில் பங்குபெற வைப்பதற்காக நான் அழைத்து சென்றேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தவர் ஏ.மகேந்திரன். எல்லோரும் பாடல்களை பாடிவிட்டார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சி முடிவதற்கு நேரம் இருந்தது.அதை பார்த்த ஏ.மகேந்திரன் என்னிடம் வந்து பாடல் ஒன்றை பாடுமாறு கேட்டார். நானும் சினிமாப் பாடல் அல்லாத என்னுடைய சொந்தப்பாடல் ஒன்றை பாடினேன். கடவுளின் ஆசீர்வாதமோ தெரியவில்லை. அந்தப் பாடல் தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. அந்த நிகழ்வு தான் என்னை பொப்பிசைப் பாடகனாக அடையாளம் காட்டிக்கொண்ட முதல் நிகழ்வு

கேள்வி : தலைநகரில் கலை வளர்த்த கதையை கொஞ்சம் கூறுங்களேன்...

பதில் : இந்தப்பொப்பிசை நிகழ்ச்சிக்கு பிறகு நான் பலராலும் கவனிக்கப்பட்டவனாக மாற்றம் பெற்றேன். பைனான்ஸ் மொஹமட் என்று ஒருவர் இருந்தார். அவரிடம் என்னிடம் வந்து, ஜி.ஜே.ராஜ் உங்களுக்கு நாடகங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கின்றதா என்று கேட்டார். நானும் நடிப்பதற்குத் தானே காத்திருக்கின்றேன். உடனே, நான்ஆமாம் நடிக்க எனக்கு விருப்பம். என்ன நடிக்கவேண்டும்? என்று கேட்டேன்.அந்த நேரத்தில் அவர் சொன்னார், ஸ்ரீசங்கர் என்றொரு நடிகர் இருக்கிறார், அவரை என்னுடைய நாடகத்தில் நடிக்க வைக்க முயற்சித்தபோது அவர் மறுத்துவிட்டார், நான் அவரிடம் சொன்னேன். ஒரு சவாலான நடிகரை என்னுடைய நாடகத்தில் நடிக்க வைத்துக் காட்டுகின்றேன் என்று சபதம் செய்திருக்கின்றேன் என்றார். நான் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அவர் இயக்க, லா என்பவர் தயாரிக்க, நான் நடித்த அந்த நாடகத்தின் பெயர் "எங்கே நிம்மதி' அந்த மக்களை சென்றடைந்தது. ஒரு நல்ல நடிகன் என்ற பெயரை எனக்கு பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து செல்வராஜனுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவருடைய பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எத்தனை நாடகம் என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அவருடைய பல நாடகங்களில் நான் நடித்தேன். என்னை அதிகமாக இயக்கியவர் செல்வராஜன். எனக்காகவே அருமையான பாத்திரங்களை உருவாக்கித்தந்தவர் செல்வராஜன் தான். குறிப்பாக, "அவள் ஒரு மெழுகுவர்த்தி' நாடகம் இந்தியாவில் சிவாஜிகணேசன் நடித்த "தங்கப்பதக்கம்' படத்தை போன்று இலங்கையில் எடுக்கப்பட்ட ஒரு நாடகமாகும். இந்த நாடகம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகும். தலைநகரில் தலை நிமிரவைத்த நாடகம் அது. அதே போன்று "மோகம் முப்பது நாள்' என்ற நாடகமும் அருமையிலும் அருமையான நாடகம். அந்த மாதிரியான கதையம்சங்களை கொண்ட நாடகங்களை இயக்கிய செல்வராஜன் உண்மையில் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவராக திகழ்கின்றார். அதே போன்று ஆர்.திவ்யராஜன் என்ற என்னுடைய நண்பரையும் வாழ்வில் மறக்கமுடியாது. இப்படியே தொடர்ந்து இதுவரை 200 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கின்றேன். இரண்டு சிங்கள படங்களிலும் நடித்திருக்கின்றேன்.

கேள்வி : மலையகத்திலிருந்து தலைநகரை நோக்கி நடிகனாக வந்து சேர்ந்தவேளை, எவ்வாறான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

பதில் : நான் இங்கு வந்து நடிக்கத்தொடங்கிய காலப்பகுதியில் நான் மலையகத்தவன் என்று தாழ்வாக பார்த்த நிலை இருந்தது. மலையகத்தவன் என்ற புறக்கணிப்பும் தொடர்ந்தது. ஆனால், நான் என்னை நிலை நிறுத்திக்கொள்ள கடினமாக உழைத்தேன். எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடியவனாக என்னை மாற்றிக்கொண்டேன். "திறமை மட்டுமே தப்பி பிழைக்கும், மற்றதெல்லாம் ஓடி மறையும்' என்பது நான் கண்ட உண்மை. ஆனால், ஒன்று என்னதான் மலையகத்தைப் பற்றி பேசினாலும். அங்கிருக்கும் கலைஞர்களுக்கு கைகொடுப்பதற்கு யாரும் இல்லை என்பதேயுண்மை. ஆனால், நான் 1987 ஆம் ஆண்டில் மலையகத்திலுள்ள இளம் திறமையாளர்கள் எல்லோரையும் அழைத்து "மௌனராகங்கள்' என்றொரு மேடை நிகழ்ச்சியை நடத்தியிருந்தேன். ஒரே நாளில் மூன்று முறை அந்த நிகழ்ச்சியை அரங்கேற்றினேன். இதில் ஒரு சாதனையையும் செய்தவன் நான். இந்த நிகழ்ச்சியில் தனி ஒருவனாக இருந்து "இசைக்க மறந்த கீதங்கள்' என்ற ஒன்றை அரங்கேற்றியிருந்தேன். இது 17 முறை மேடையேற்றப்பட்டது. அதை பார்த்த பலரும் எனக்கு 70 இற்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியிருந்தார்கள். நான் கொழும்பில் இருந்தாலும், மலையகத்தை மறக்கவில்லை. என்னை சமூக சேவைக்காக ஈடுபடுத்திக்கொண்டேன். இன்றும் செய்துகொண்டே இருக்கின்றேன்.

கேள்வி : இப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

பதில் : தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றுகின்றேன். வடகொழும்பு தமிழ் மன்றத்தின் 7 வருடங்கள் செயலாளராக இருந்து, இப்போது உப தலைவராக இருக்கின்றேன். என்னுடைய பார்வையில் கல்வி, கலை, கலாசாரம் போன்ற துறைகள் இருக்கின்றன. இதன் மூலமாக ஒவ்வொரு போயா விடுமுறை தினத்திலும் ''இலக்கியத்தென்றல் ''என்ற கலைநிகழ்ச்சியை செய்து வருகின்றேன். இந்த தமிழ் மன்றத்தினுடைய செயற்பாடுகளைப் பார்த்தீர்களானால் எல்லா இடங்களிலுமுள்ள கல்வி, கலை, கலாசாரசெயற்பாடுகளை முன்னேற்றுவதற்காக செயற்படுத்தி வருகின்றது. அதைத்தவிர, நிறைய குறுந்திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அதிலும் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கின்றேன்.

கேள்வி : நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரம் எது?

பதில் : குணச்சித்திர கதாபாத்திரம்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது.

கேள்வி : "பைலட் பிரேம்நாத்' திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பதில் : 1980ஆம் ஆண்டை பொறுத்தவரையில் இலங்கை கலைத்துறை மிகுந்த சவாலான ஒரு இடமாக அமைந்திருந்தது. காரணம், அத்தனை திறமை வாய்ந்த கலைஞர்கள் எல்லோரும், அக்காலப்பகுதியில் தான் இருந்தார்கள். குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் நான் 50நாடகங்களை நடித்து முடித்திருந்தேன். அது அனைவரையும் என் பால் கவனம் செலுத்த காரணமாய் இருந்தது. அந்தத்தருணத்தில் "கோமாளிகள்' படத்தை தயாரித்திருந்த மொஹமட் என்பவர் "பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார். சிறிய கதாபாத்திரம் ஒன்றில் ஜெயச்சித்திராவுடன் வந்துவிட்டு செல்லும் காட்சி தான். ஆனால், அந்தக்காட்சி அப்போது பெரிய ஒரு விடயமாக பேசப்பட்டது. அதேபோன்று நடிப்புத்துறையில் என்னை அறிமுகப்படுத்திய பைனான்ஸ் மொஹமட் இந்தியாவிலிருந்து சிவாஜிகணேசனின் "பைலட் பிரேம்நாத்' கதையை வாங்கி இலங்கையில் நாடகமாக தயாரிக்க முற்பட்டார். ஆனால், அது கைகூடவில்லை. அதேபோன்று என்னுடைய ஐம்பதாவது நாடகமான "மனிதன் நினைப்பதுண்டு' திவ்யராஜனின் கதை, இயக்கத்தில் வெளிவந்தது. அதனுடைய புரோமோஷனுக்காக என்னுடைய தலையையும், சிவாஜிகணேசனின் உடம்பையும் சேர்த்துவைத்து ஒரு போஸ்டரை செய்தார்கள். இந்த மாதிரியான காலகட்டங்களும் என் வாழ்வில் வந்து சென்றிருக்கின்றன என்பதற்காகத்தான் இதையும் கூறுகின்றேன்.

கேள்வி : நீங்கள் பெற்றுக்கொண்ட முதல் விருதைப் பற்றி...

பதில் : பட்டங்கள்,விருதுகள் என நிறைய பெற்றிருக்கின்றேன். அதில் முதலாவது விருதை மாத்தளை தமிழ் மன்றம் வழங்கியிருந்தது. அதன் பெயர் "மலையக நடிகர் மாமணி' அதே போன்று, நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 52ஆவது பிறந்த தினத்தில் நான் 50 நாடகங்களில் நடித்தமைக்காக என்னை பாராட்டி கௌரவித்தனர்."கலைமாமணி, கலாபூஷணம்' முதலாக வாழ்நாள் சாதனையாளர் வரையாக பல விருதுகளுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.

கேள்வி : மலையக மண்ணில் பிறந்து, வளர்ந்து இன்று பல சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரராக இருப்பதோடு, ஈழத்துக் கலைத்துறையில் ஒரு பெரிய இடத்தில் வைத்து பார்க்கப்படும் கலைஞனாக உருவெடுத்துள்ளீர்கள்.இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கு நன்றிசொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் : (கண் கலங்கிய படி)மலையக மண்ணில் பிறந்து வந்து இன்று தலைநகரில் தலைநிமிர்ந்து நின்றுகொண்டிருக்கின்றேன் என்றால், நான் எத்தனை சவால்களை சந்தித்திருப்பேன் என்று பாருங்கள். இந்தத்தருணத்தில் என்னுடைய அம்மா, அப்பாவுக்குத்தான் நான் நன்றி கூறவேண்டும். நீங்கள் இந்தக்கேள்வியை கேட்கும்போதே என்னுடைய கண்கள் கலங்குகின்றன. உண்மையில் என்னுடைய முதல் மரியாதை என்னுடைய பெற்றோருக்குத் தான். முதலில் நான் நடிப்பதை என்னுடைய அப்பா விரும்பவில்லை. ஆனால், இன்று நான் இப்படியான ஒரு உயர் நிலையில் இருக்கும்போது அதைப்பார்க்க அப்பா, அம்மா என்னுடன் இல்லை. அடுத்ததாக நான் வளர்ந்த ஊரான பொகவந்தலாவ மக்கள், ஹொலிரோசரி பாடசாலை ஆசிரியர்கள், சேர்ச்சில் இருக்கும் எல்லோருக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

அடுத்தாக என்னுடைய மனைவி, என்னுடைய எல்லாத் தருணங்களிலும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். அவருக்கும் நன்றி கூறவேண்டும்.என்னை கலைத்துறையில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், வடகொழும்பு தமிழ்மன்றம் உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் உரித்தாகட்டும்.

எங்கு பிறக்கின்றோம், எப்படி வளர்கின்றோம் என்பது முக்கியமல்ல, ஆனால் என்ன செய்திருக்கின்றோம் என்பது தான் முக்கியம். அந்த வகையில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ஜி.ஜே.ராஜ் உண்மையிலேயே மலையக வரலாற்றில் மாத்திரமல்லாது, இலங்கைக் கலைத்துறையிலும் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க வேண்டியவர்.

மண்வாசம் வீசும் ஒரு அழகான கிராமப்புறத்தில் இருந்து வந்தாலும்,திறமையால் மாத்திரமே வானம் வசப்படும் என்கின்றார்.கலைத்துறையில் மாத்திரமல்லாது, "ரெய்கி' எனப்படும் தொடுகை சிகிச்சையில் பாண்டித்தியம் பெற்றவராகவும் விளங்குகின்றார் இவர். தான் பெற்ற இந்த அறிவைக்கொண்டு நோயாளிகள் பலருக்கும் மருத்துவமும் பார்க்கின்றார்.ஒரு பொப்பிசைக் கலைஞனாக இருந்து, நடிகனாக மாறி, "ரெய்கி' தொடுகை சிகிச்சையிலும் தன்னை நிலைநிறுத்த முயன்றிருக்கும் இவருக்கு ஒரு சபாஷ் போடலாமே.

சமீபத்தில் தனது 50 ஆவது பொன்விழா நிகழ்வைக் கொண்டாடியிருந்த இவர், பொன்விழா நாயகனாகவும் திகழ்கின்றார்.தான் பிறந்த சமூகத்தின் மீது அதிகமான பற்றுக்கொண்டுள்ள இவர், வந்த பாதையை மறக்காமல் உரையாடியிருந்தார்.

உண்மையில் ஒவ்வொரு சாதனைகளுக்கும் பின்புறமாக பல சோதனைகள் இருப்பது உண்மையே. அந்த சோதனைகளை தமக்கு வரும் வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்வதில் தான் வாழ்வின் தாற்பரியமே தங்கியிருக்கின்றது. "வளையாமல் நதிகள் இல்லை, வலிக்காமல் வாழ்க்கை இல்லை' என்ற பாடல் வரிகளுக்கேற்ப வாழ்க்கையில் வரும் வலிகளை நேசிக்கப்பழகுங்கள் அந்த வாழ்க்கையும் உங்கள் வசப்படும்.

இந்தவாரம் என்னுடன் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், கலைத்துறைப் பிரவேசக் கதைகளையும் மிகவும் அழகாக பகிர்ந்துகொண்ட ஜி.ஜே.ராஜ் மற்றும் அவரது துணைவியாரின் உபசரிப்பு என்னை மிகவும் ஈர்த்தது. எந்த சுயநலமுமற்ற மனிதர்களை நம்முடைய வாழ்வில் காண்பது அரிது. அவ்வாறான கலைஞர்கள் உண்மையில் நினைத்துப்பார்த்து மகிழவேண்டியவர்கள் என்ற நினைப்போடு அவரிடமிருந்து விடைபெற்றேன்.

சிவசங்கரி சுப்ரமணியம்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top