இலங்கையில் ஒழுக்கத்தை கட்டியெழுப்பும் பணி சரத் பொன்சேகாவிடம்!

முப்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் செயலாற்ற கூடிய விதத்தில் புதிய பதவியொன்றை உருவாக்கி, அதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளதுடன், இரண்டு வருட காலத்திற்காக இந்த புதிய பதவியை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விருப்பம் தெரிவித்ததாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்புகள் , ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு இந்த புதிய பதவியை உருவாக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒருசில தரப்பினர் நாட்டை குழப்பி வருவதாகவும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சரத் பொன்சேகாவிற்கு அதிகாரம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ராஜித தெரிவித்துள்ளார். இல்லாவிடின் நாட்டில் ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை அனுமதி அளித்துள்ள இந்த யோசனைக்கு சரத் பொன்சேகாவும் இணங்கியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சரத் பொன்சேகா இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top