பொலிஸ் மா அதிபருக்கு எதிராக அமைச்சர்கள் கொதிப்பு!

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் கிளர்ந்தெழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியமை மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் சரணடையும்வரை கைது செய்யாதிருந்தமை குறித்து அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பொலிஸ் மா அதிபரை அழைத்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபருடன் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் கொழும்பு மாவட்ட பொறுப்பு பொலிஸ் அதிகாரி பத்தினாயக்க ஆகியோர் அமைச்சர்களை சந்தித்துள்ளனர்.

இந்த சந்தர்பத்தில் கோபத்துடன் பேசிய அமைச்சர் ராஜித, 'உங்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்க நானே அழுத்தம் கொடுத்தேன். அதேபோல் உங்களை இப்பதவிகளில் இருந்து தூக்குவதும் நானே' என்று தெரிவித்துள்ளார். ஞானசாரவை கைது செய்ய முடியாவிடின் பொலிஸார் எதற்கு? அரச அமைச்சரவை பாதுகாக்க முடியாவிடின் பொலிஸ் மா அதிபர் எதற்கு? உங்களுக்கு பதிலாக கான்ஸ்டபிள் ஒருவரை ஆசனத்தில் அமர வைத்தால் அவர் சிறந்து செயற்படுவார் என்று ராஜித பேசியதும் பொலிஸ் அதிகாரிகள் மூவரும் அமைதி காத்துள்ளனர்.

இந்நிலையில் எமக்கு கிடைத்துள்ள தகவல்படி பொலிஸ் ஆணைக்குழுவினால் பதவி நீக்கம் செய்வதற்கு முன் பதவி விலகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top