திங்களன்று விஜயகலாவை அழைத்துள்ள இரகசிய பொலிஸ்!

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமாரை புங்குடுதீவு சென்று காப்பாற்றுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்கவிற்கு பணித்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இரகசிய பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை 28ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விஜயகலா அதனை மாற்றி 31ம் திகதி வருவதாக அறிவித்துள்ளார். தான் கைதாகலாம் என அச்சத்தில் விஜயகலா திகதியை மாற்றியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுமாறு ஊர்காவற்துறை நீதவான் மொஹமட் மிஹால் இரகசிய பொலிஸாருக்கு கடந்த 25ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, இன்று 27ம் திகதி பேராசிரியர் தமிழ்மாறம் வாக்குமூலம் அளித்துள்ளார். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் தமிழ்மாறனிடம் சுவிஸ் குமாரை காப்பாற்றுமாறு பணித்தது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி லலித் ஜயசிங்க, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தமிழ்மாறனிடம் மனிதாபிமான சட்டம் (Humantarian Law) கற்றவர் என்பவதை நன்கு அறிந்த விஜயகலா தனது நண்பர் சுவிஸ் குமாரை காப்பாற்ற இவ்விருவரையும் பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து முன்னரும் இரகசிய பொலிஸார் விஜயகலாவிடம் வாக்குமூலம் பெற்றபோதும் தனது அரசியல் செல்வாக்கினால் அவர் தப்பித்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இயங்கி வரும் பாதாள குழு கலாசாரத்தை (Gangster Culture) விஜயகலா மகேஸ்வரனும் அவரது மைத்துனன் துவாரகேஸ்வரனும் ஊக்குவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தமக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களை முகநூல் ஊடாக தாக்குவது துவாரகேஸ்வரனின் பிழைப்பு. பிரதமர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருடன் அமர்ந்து தேநீர் அருந்தி புகைப்படம் எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டு அப்பாவி யாழ் மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை இவர்கள் நன்கு செய்துவருகின்றனர். இதுகுறித்து சைபர் குற்ற பிரிவுக்கு முறையிட்ட போதும் அரசியல் பலத்தை பயன்படுத்தி இவர்கள் அவற்றை மூடிமறைத்து விடுகின்றனர்.

சந்திரிக்கா மற்றும் மஹிந்த ஆட்சி காலத்தில் ஈபிடிபி மற்றும் எல்ரிரிஈ அமைப்புகளால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கப்பட்ட யாழ் மக்கள் தற்போது விஜயகலா, துவாரகேஸ்வரன் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top