மஹிந்த காலத்து பிணைமுறி மோசடி குறித்து விசாரணை!

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பிணை முறிப்பத்தர விற்பனைகள் குறித்து விசாரணை நடத்த மற்றுமொரு ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது.

பிணை முறிப்பத்திர விற்பனை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஊடாக நடந்துள்ளதாக கூறப்படும் கடும் சந்தேகத்திற்குரிய கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே இந்த புதிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தேவையான அடிப்படையான ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதனை மிக விரைவில் அமுலுக்கு கொண்டு வந்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை துரிதமாக சட்டத்திற்கு முன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி, கிறீஸ் நாட்டின் பிணை முறிப்பத்திரங்களில் இலங்கையில் பணத்தை முதலீடு செய்திருந்தது.

33 மில்லியன் யூரோ பெறுமதியான கிறீஸ் நாட்டின் பிணை முறிப்பத்திரங்களை இலங்கை மத்திய வங்கி 22.16 மில்லியன் யூரோக்களுக்கு கொள்வனவு செய்திருந்தது.

இந்த கொடுக்கல் வாங்கல் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மூலம் பல நிதி மோசடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் மூலம் இலங்கைக்கு 2 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நாட்டில் கையிருப்பில் இருந்த பணம் கடனாக பெற்ற பணமே இவ்வாறு கிறீஸ் பிணை முறிப்பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக நாட்டின் நிதி கையிருப்பை நிலையாக வைத்திருக்க அடிக்கடி கடனை பெற்றமை மற்றும் அவசிய தேவைகளுக்கு கடனைப் பெற்றமை மூலமாக நாட்டுக்கு பெரும் நிதி நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top