1150 x 80 px

 

அமைச்சர் மனோ, ரவி இடையே இரகசிய மோதல்!

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும்,

முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில் அமைச்சர் மனோவிற்கும், ரவி கருணாநாயக்கவிற்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது.ஜனநாயக மக்கள் முன்னணி வரும் உள்ளுராட்சித் தேர்தலில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் பட்டியலையும் தயாரித்துள்ளது. ஆனாலும், அரசாங்கத்திலிருந்து (அமைச்சுப் பதவிலியிருந்து) தூக்கி எறியப்பட்ட ரவி கருணாநாயக்க தனது பலத்தைக் கொழும்பில் காண்பித்து சரிந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்கிறார். இதற்காக வரும் தேர்தலில் தமக்கு நெருக்கமான இளைஞர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஹரின் பெர்னாண்டோவின் பூரண ஒத்துழைப்பு இருகிறது. இந்த முயற்சிக்கு அமைச்சர் மனோ கணேசனும், மத்திய கொழும்பில் முஜிபூர் ரஹ்மானும் பெரும் முட்டுக்கட்டையாக ரவி கருணாநாயக்கவிற்கு இருக்கின்றனர். இதனால், ரவி கருணாநாயக்க, அமைச்சர் மனோ கணேசனின் வேட்பாளர் பட்டியலை வெட்டி, தனக்குத் தேவையான வேட்பாளர்களைக் களமிறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் அமைச்சர் மனோ கணேசனுக்கும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையே இரகசிய போர் ஏற்பட்டுள்ளது என்று அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையிலேயே அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ''ஐதேகவுடன் உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்'' என்று தெரிவித்திருந்தார் என்பதும் நினைவூட்டத்தக்கது.

Top