ராஜபக்ஷ ஒருவர் விரைவில் கைது?

இதுவரை கைதுசெய்யப்படாத பிரபல ராஜபக்‌ஷ ஒருவர் எதிர்வரும் நாட்களில் கைதுசெய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட காலமாக இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகமைய அவர் கைதுசெய்யப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக கையாண்டமை தொடர்பில் அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள அந்தப் பிரபலம் எதிர்வரும் வாரம் மீண்டும் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இந்த நாட்களில் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை இந்த சந்தர்ப்பத்தில் செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் அவருக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்து உள்ளது.

அதற்கமைய கைதுசெய்யப்படவுள்ள பிரபலம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச என அந்த ஊடகம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ அல்லது பசில் ராஜபக்ச கைதுசெய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக இன்னுமொரு தரப்புத் தகவல் கூறுகிறது.

Top