இரகசியமாக சுயேட்சைக் குழுக்களைக் களமிறக்கும் முயற்சியில் மலையக மக்கள் முன்னணி

மலையகத்தில் உள்ளுராட்சித் தேர்தலில் இளைஞர்கள் சிலரை சுயேட்சையாக களமிறக்கும் இரகசிய முயற்சியொன்றை மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தவர் ஒருவர் முன்னெடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு போதுமான ஆசனங்களைப் பெறுவதில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இழுபறி நிலை இருக்கிறது. இதனால் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுவதில் சந்தேகமும், இழுபறியும் தொடர்கிறது. கூட்டணித் தலைவர் மனோ கணேசன், ஆசன பங்கீட்டில் விட்டுக்கொடுக்காது உறுதியாக இருக்கிறார். ஆனாலும், அமைச்சர் திகாம்பரம் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவே விரும்புகிறார். அமைச்சர் திகாம்பரத்தின் அழுத்தங்களினால் அமைச்சர் மனோ உறுதியான நிலைப்பாடொன்றை எடுப்பதிலும், அறிவிப்பதிலும் காலம் தாழ்த்திவருவதாக தெரியவருகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணியில் மூன்றாவது கட்சியாக பார்க்கப்படும் மலையக மக்கள் முன்னணிக்கு போதுமான ஆசனங்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும் பட்சத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஓரிரண்டு ஆசனங்கள் கிடைப்பதே சந்தேகமாக இருக்கிறது.

அமைச்சர் திகாம்பரத்தின் கட்சிக்கு இந்த உள்ளுராட்சித் தேர்தல் கௌரவ பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த கால பொதுத் தேர்தலுடன் ஒப்பீடும் போது அதைவிட குறைவான வாக்குகளைப் பெற்றுவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் திகாம்பரம் இருந்துவருகிறார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதே ஆரோக்கியமானது என்று அமைச்சர் திகாம்பரம் கணக்கிட்டு வருவதாக கூட்டணியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியான நிலையில், மலையக மக்கள் முன்னணிக்கு அதிக ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியாகி இருப்பதை அந்தக் கட்சியில் முக்கியஸ்தர் ஒருவர் கணக்கிட்டுள்ளார்.

இதனால் பல்கலைக்கழக இளைஞர் உள்ளிட்ட சில இளைஞர்களை அழைத்து, இதுகுறித்து தனித்தனியாக பேசிவருவதாக அவருடன் நெருக்கமாக இருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது. இந்த இளைஞர்களை சுயேட்சைக் குழுக்களாக களமிறக்கவும், இவர்களை இரகசியமாக இயக்கவும் இந்த முக்கியஸ்தர் திட்டமிட்டு வருவதாக மேலும் தெரியவருகிறது.

மலையகத்தின் தேர்தல் களத்தில் இளைஞர்கள் அதிகமான கவனம் செலுத்தியிருப்பதால், இவ்வாறு சுயேட்சைக் குழுவொன்றை இரகசியமாக களமிறமிக்கி கைவிட்டுச் செல்லும் ஓரிரண்டு ஆசனங்களைக் கைப்பற்றலாம் என அந்த முக்கியஸ்தர் கணக்குப் போட்டுள்ளதாக தெரியவருகிறது.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Top