‘நாங்கள் பாவிகளாக இருக்கின்றோம் அல்லது 1983’

1800 களில் இந்தியாவில் நிலவிய கடுமையான பஞ்சநிலை காரணமாக வருமான உபாயத்திற்காக அயல்நாடுகளுக்கு வருகைதரு தொழிலாளிகளாக (வருவரும் போவதுமாக) தமிழகத்தில் வாழ்ந்த ஒரு வகுதியினர் தொழில் புரிந்து வந்தனர். 1834 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் தொகுதியினராக இந்தியாவிலிருந்து மொரிசியஸ் நாட்டுக்கு 75 பேர் கொண்ட தொழிலாளர்கள் நிரந்தரமாக அழைத்து செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இலங்கை, தென் ஆபிரிக்கா, டான்சானியா, உகண்டா, பர்மா, வியட்நாம், மலேசிய போன்ற நாடுகளுக்கு நிரந்தர தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.

அவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் இந்தியவம்சாவளியினர் என்ற அடையாளத்தையும் மேவிக் கொண்டு மலையகம் என்ற தனித்துவ தேசிய அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவர்கள் என்றவகையில் பெரும்பான்மையினத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறைகளும், முடுக்கிவிடப்பட்ட இனக்கலவரங்களும் பெரும் பாதிப்பெயேற்படுத்தியிருந்தமை மறுக்கமுடியாது.

இனத்துவேசத்தின் உச்சகட்டமாக 1983 ஜுலை கலவரம் அமைந்திருந்தது. இக்கலவரம் தொடர்பான கவிதை> சிறுகதை போன்ற இலக்கிய பதிவுகள் இரா.சடகோபன், ஜின்னா ஷரிப்புத்தீன் போன்ற எழுத்தாளர்களால் பதிப்பட்டிருந்தாலும் ஆழமான பதிவுகள் இருப்பதாக அறியக்கிடைக்கவில்லை. 1983 ஜுலை கலவரம் மலையகம், வடகிழக்கு என்றல்லாது ஒட்டுமொத்த சிறுபான்மையினத்திற்கெதிராக கோலோச்சப்பட்ட ஒடுக்குமுறையின் உச்சகட்டமது.

அதனை தனது அனுபவப்பகிர்வாக மலையக இலக்கிய தளத்தில் மட்டுமல்லாது ஈழத்து இலக்கிய தளத்திலும் அவசியமான ஒரு வரலாற்று பதிவினை மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நாவலாக்கியிருக்கின்றார். 1996ம் ஆண்டு தினகரனில் தொடர்கதையாக வெளிவந்து 30 வருடங்கள் கடந்த நிலையில் பாக்யா பதிப்பிகத்தினால் நூலுருவாக்கப்பட்ட ‘நாங்கள் பாவிகளாக இருக்கின்றோம் அல்லது 1983’ என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 05.11.2016 காலை 9.30 மணிக்கு ஹட்டனில் இடம்பெற்றது.

இந்தியவம்சாவளியினர் தமிழகத்திலிருந்து பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளுக்கு நிரந்தரமாக தொழிலாளிகளாக அழைத்து செல்லத்தொடங்கிய அதே மாதத்தில் அதே வாரத்தில் அதே சமூகம் சார்ந்த ஒரு வரலாற்று நூலினை அறிமுகம் செய்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதே.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top