முடிந்தால் என்னை சிறையில் அடைக்கவும் - சஜின் சவால்!

சட்டமா அதிபர் திணைக்களத்தை தனக்கு தேவையான வகையில் இயக்கி வருவதால், தன்னை எவராலும் சிறையில் அடைக்க முடியாது என மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கியமான நபராக திகழ்ந்து வந்த சஜின் வாஸ் குணவர்தன அண்மையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியதாக தெரியவருகிறது.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான சஜின் வாஸ் குணவர்தன கடந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.

இவருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்தியது மற்றும் பணச் சலவை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் சில காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சஜின் வாஸ் குணவர்தன சட்டமா அதிபர் திணைக்களத்தை தனக்கு தேவையான வகையில் இயக்கி வருவதாக ஆங்காங்கே தனது நண்பர்களிடம் கூறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள தனக்கு எதிரான வழக்கு அறிக்கையை கடந்த ஒரு வருடமாக மறைத்து வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். கவனிக்க வேண்டிய இடங்களில் தனக்கு கவனிப்புகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டையும் சாராதவன் போல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி மூலமாக தனக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு அதிகாரிகளை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பத்திரிகையாளர்கள், இணையத்தளங்கள் ஆகியவற்றால் தனக்கு எதனையும் செய்து விட முடியாது என்றும் தனது பயணம் தொடரும் எனவும் சஜின் வாஸ் குணவர்தன கூறியுள்ளார். முடிந்தால் தன்னை சிறைக்கு அனுப்பி பார்க்குமாறும் குணவர்தன சவால் விட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top