பசில் - ரிஷாட் சூழ்ச்சி தோல்வி!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை சூட்சுமமாக அதிகரித்து,

அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் சூழ்ச்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் இந்த சூழ்ச்சி குறித்து தகவல் வெளியானவுடன் நுகர்வோர் அதிகார சபையை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.

தேங்காய், சீனி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க இந்த சூழ்ச்சியே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டமொன்றின்போது ரிஷாட் பதியூதீன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நுகர்வோர் அதிகார சபையிலிருந்து இந்தத் தகவல்கள் கசிந்ததால் குறித்த கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை, ஜனாதிபதி மைத்திரிபால  கடிந்துகொண்டதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் சந்தையிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறு யோசனை வழங்கியுள்ளனர்.

இந்த யோசனைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்த அமைச்சர் பதியூதீன் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த யோசனைகளை ஏற்றுக்கொண்டால், அவற்றை நடைமுறைப்படுத்தாது தனது காலத்தை ஏன் விரயம் செய்கிறீர்கள் என ஜனாதிபதி  அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்சவுடன், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருவதாக அரசாங்கத்தலைவர்களுக்கு தகவல்கள் கிட்டியுள்ளன.

இந்த தொடர்புகளின் அடிப்படையில் இடைத்தரகர்கள் அதிக இலாபம் ஈட்டும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யலாம் என்பதும் இவர்களின் திட்டமாக இருந்துள்ளதாக தகவல் கிட்டியுள்ளதென ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன. 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புக்களை வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க முயற்சிக்கும் சிலரது பெயர்கள் பட்டியல் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக இதற்கு முன்னர் வாராந்த சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top