ஊழல் மோசடியில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி!

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின் ஏராளமான அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டன.

இதன்வரிசையில் கல்வி அமைச்சுக்கும் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட முன்னர், இந்த அமைச்சின் மேற்பார்வை அதிகாரியாக அந்த அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இதன்பின்னர், செயலாளராக இவர் நியமனம் பெற்ற பின், கல்வி அமைச்சின் உயர் பதவிகளில் இருந்த பலர் மாற்றப்பட்டனர். இவை அனைத்தும் புதிய செயலாளரின் விருப்பத்திற்கேற்ப நடந்தன. 

மிக நீண்டகாலமாக இலங்கை நிர்வாக சேவையில் திறம்பட செயல்பட்ட, கல்வி அமைச்சின் கொள்முதல், கட்டுமானப் பிரிவின் மேலதிக செயலாளராக பணியாற்றிய S.P.ஜயதுங்கவும் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். 

இதன்பின்னர் குறித்த வெற்றிடத்திற்கு மோட்டார், போக்குவரத்துத் திணைக்களத்தில் பணியாற்றியவரும், அவரது நெருங்கிய நண்பருமான அனுருத்த விஜயகோன் நியமிக்கப்பட்டார். 

எனினும், மோட்டார், போக்குவரத்து திணைக்களத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் இவர், ஊழல், மோசடியில் நேரடியாக ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

புதிய நியமனத்தின் பின்னர், அவரது பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை அழைத்த இவர், தான் ஒரு நேர்மையான அரச அதிகாரி எனவும், தனது செயல்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

எனினும், சில நாட்களுக்குள், கொள்முதல் பிரிவில் பணியாற்றிய அனுபமிக்க, திறமையான அதிகாரிகளை சிலரை அவர் வேறு பிரிவிற்கு இடமாற்றம் செய்தார். அதன்விளைவாக, மிகத் திறமையாக செயல்பட்டுவந்த அந்தப் பிரிவு செயலிழந்தது. இதனால் விநியோகித்தர்கள் பலர், செயலாளரிடம் நேரடியாக முறையிட ஆரம்பித்துள்ளனர்.

அந்தப் பிரிவு செயலிழந்ததால் அதன் உதவிச் செயலாளர் நாளுக்கு நாள் நெருக்கடிகளையும், பழிசொற்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. இந்தப் பிரிவு செயலிழந்ததையும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் கண்டுகொள்ளாத மேலதிக செயலாளர், தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்துள்ளார்.

அத்துடன், போக்குவரத்துத் திணைக்களத்தில் தனக்கு ஒத்துஊதிய ஒருவரையும் கல்வி அமைச்சிற்கு அவர் அழைத்துக்கொண்டார்.

இந்த புதிய அதிகாரியுடன் இணைந்து, குறுக்கு வழியில், மோசடியாக பணம் ஈட்டும் நடவடிக்கையை இவர் முன்னெடுத்துள்ளார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது விலைமனுக் கோரல் செய்யும் நிறுவனங்களிடமிருந்து தரகுப் பணத்தைப் பெற ஆரம்பித்துள்ளார். 

இவ்வாறு தனக்குத் தேவையான நிறுவனத்திற்கு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளதன் மூலம் அரசாங்கத்திற்கு மூன்று பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி, ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊழல்கள் மோசடிகள் தொடர்வதையே இது எடுத்துக்காட்டுகிறது.

அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சு ஒன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரி, அமைச்சரை பிழையாக வழிநடத்தி, இளம் சமூகத்திற்கு வழங்க வேண்டிய கல்வியில் மோசடி செய்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது?

இவ்வாறு மோசடி நடப்பதைத் தெரிந்தும் மௌனமாக இருக்கும் கல்வி அமைச்சின் செயலாளரும் இதற்கு உடந்தையா என்ற கேள்வி எழுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top