சுவிஸ் பொலிஸ் சுட்டுக் கொல்லும் அளவிற்கு தந்தை தீவிரவாதி அல்ல: கதறும் பிள்ளைகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவர் கடந்த 6ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புதுக்குடியிருப்பு 6ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எவ்விதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் எனக் கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் எனத் தெரிவிக்கின்றனர்.

தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசும், சுவிஸ் அரசும் உதவி செய்ய வேண்டும் என கெஞ்சிக் கேட்கும் பிள்ளைகள், தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் குறித்து சுவிஸ் அரசால் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, உரிய பதில் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கரன் என்ற குறித்த நபர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அங்குள்ள சக அகதிகளால் பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது.

விசாரணைக்காக அங்கு வந்த பொலிசாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்படியாத நிலையில், இவர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியானார்.

2015ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டிற்குச் சென்ற சுப்ரமணியம் கரன், கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல், முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இயல்பாகவே சாதாரண சுபாத்தைக் கொண்ட இவர், போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தைப் பிற்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இறுதிப் போரில் அனைத்து உடமைகளையும் இழந்து, உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015ஆம் ஆண்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சுவிஸ் நாட்டிற்கு சென்று தஞ்சம்கோரியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 06ஆம் திகதி சக அகதிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், இதுகுறித்து பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க பொலிசார் வந்துள்ளனர். வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ஏனைய இருவரையும் பொலிசார் அழைத்துவந்துள்ளனர். இதன்போது குறித்த நபர் கத்தியுடன் அவர்களைத் தாக்க வந்ததாகவும், இதனைத் தடுப்பதற்கு பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சுவிஸ் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top