1150 x 80 px

 

ETI கட்டியெழுப்ப 12 பில்லியன் முதலீடு : வைப்பாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்

இலங்கையில் வங்கி அல்லாத முன்னணி நிதி நிறுவனங்களான ETI Finance மற்றும் Swarnamahal Financial ஆகியன நேற்று முதல் மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனால் வைப்பீட்டாளர்கள் யாரும் குழப்பமடையத் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.

இவ்வாறான நிதி நிறுவனம் ஒன்றில் (வங்கி அல்லது வங்கி அல்லாத) நெருக்கடி நிலை ஏற்படும்போது, அதில் இலங்கை மத்திய வங்கி தலையீடு செய்து, பரிந்துரை வழங்குவது, அந்த நிறுவனத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காகவே என்பது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், வைப்பாளர்கள், கணக்காளர் ஆகியோர் சட்டரீதியாக பாதுகாக்கப்படுவர்.

இதற்கு முன்னர் மத்திய வங்கி தலையீடு செய்யாததால் வைப்பீட்டாளர்கள் பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம். வைப்பீட்டாளர்கள் தமது பணத்தை மீளப் பெறவும், வட்டி வீதத்தைப் பெறவும், அலைந்து திரிந்த சம்பவங்களையும் நாம் அறிவோம்.

எனினும், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட, அதன் பரிந்துரைகளின்படி இயங்கும் நிதி நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்திக்கும் போது, வாடிக்கையாளர்களும், வைப்பீட்டாளர்களும் குழப்பமடையத் தேவையில்லை.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களையும் மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துள்ள நிலையில், குறித்த நிறுவனங்களின் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள 6 மாத காலம் வழங்கப்படும்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தேடி அறிந்து, இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

முதலீட்டாளர்களைத் தேடுவதற்கும் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். இதற்குத் தேவையான சட்ட ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படும். இதன்படி அவர்களின் செயல்பாடுகளை வழமைக்குக் கொண்டுவந்து 6 மாத காலத்திற்குள் இந்த நடவடிக்கையை வழமைக்குக் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.

எமக்குக் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, இந்த இரண்டு நிதி நிறுவனங்களும், பழமையான நிதி நிறுவனங்கள் ஆகும். குறித்த நிறுவனங்களின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கமைய ஈ.ரி.ஐ. நிறுவனத்தின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு 75 மில்லியன் டொலர் அதாவது 12 பில்லியன் முதலீடு தேவையாக உள்ளது. இந்த நிறுவனத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர 12 பில்லியன் ரூபா தேவையென மத்திய வங்கியின் ஆளுநரும் உறுதி செய்துள்ளார்.

இதற்காக சரியான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளனர். இந்த முதலீட்டாளர்கள் பொருத்தமானவர்களா என்பதை மத்திய வங்கியே உறுதிசெய்யும். இதன்படி முதலீட்டாளர்களின் இருப்பும், பாதுகாப்பும் மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும்.

கடந்த சில மாதாங்களாக நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த முதலீட்டாளரினாலேயே இந்த நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஈ.ரி.ஐ. நிறுவனம், தொலைக்காட்சி, சினிமா துறைகளிலும் தனது செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. எனினும், புதிய முதலீட்டாளர்கள் இந்தத் துறையில் தலையீடு செய்யக் கூடாது என மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. நிதி சட்டம், ஒழுங்குகளுக்கு அமைய முதலீட்டாளர்கள் குறித்த நிறுவனத்தில் நேரடியாக மட்டுமே முதலீட்டாளர்களாக வருவர்.

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியினால் மத்திய வங்கி வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதன்போது கருத்துரைத்த அவர், குறித்த நிறுவனத்தில் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும், அதன் வீழ்ச்சி தற்போது தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அடுத்த 6 மாதங்களுக்குள் நிதி நிலைமையை சீர்செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு நிதி நிறுவனங்களில் ETI Finance நிறுவனத்தின் சொத்து மதிப்பு 33 பில்லியன் ரூபாவாகும். சுவர்ணமஹால் நிறுவனத்தின் (SFS) சொத்து மதிப்பு 2.5 பில்லியன் ரூபாவாகும். ETI Finance நிறுவத்தில் 33,000 பேர் வைப்பாளர்களாக உள்ளனர். இவர்கள் வைப்பீடு செய்துள்ள தொகை 33.5 பில்லியன் ரூபாவாகும். SFS நிறுவனத்தில் 2,300 வைப்பீட்டாளர்கள் உள்ளனர். இதன் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் ரூபாவாகும்.

இதனால் குறித்த வைப்பாளர்கள் பீதி (Panic) கொள்ளத் தேவையில்லையென மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாத காலத்திற்குள் வைப்பீட்டாளர்களின் பணத்தை மீள எடுப்பதற்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் குறித்து ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top