1150 x 80 px

 

கடத்திய இளைஞனின் வாகனம் மனைவியின் பிறந்தநாள் பரிசானது?

11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் போகச் செய்த சம்பவத்தின் வழக்கு இறுதியாக கடந்த 2ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரி தசநாயக்க உள்ளிட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை இந்தச் சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. பல சந்தர்ப்பங்களில், பலரால் மறைக்கப்பட்ட இந்தச் சம்பவங்களின் தகவல்கள் 2015 ஆம் ஆண்டின் பின்னர் வெளிவர ஆரம்பித்தன. அதுவரை மெளனம் காத்துவந்த சில ஊடகங்கள்கூட தற்போது இதுகுறித்து வாய்த்திறக்க ஆரம்பித்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே இந்த தகவல்களை மறைக்க முடியாது போகும்.

இந்த கடத்தல் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 2009 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி தமது விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.நிஷாந்த சில்வாவினால் இந்த அறிக்கை அப்போது சமர்ப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு இலக்கம் பீ 732/2009 என்ற அறிக்கையில், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், கஸ்துரி ஆராச்சிகே ஜோன்ரீவ், ஜமால்டீன் டிலான், மொஹமட் சாபீத், திலகேஸ்வரன் ராமலிங்கம், அன்டன் கஸ்துரி ஆராச்சி, அமலன் லியோன், ரொஷான் லியோன், கனகராஜா ஜேகன், மொஹமட் அலி அன்வர் ஆகியோர் காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை அதிகாரி வசந்த கரன்ணாகொடவின் முறைப்பாட்டிற்கு அமையவே இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கரன்ணாகொடவின் முறைப்பாட்டிற்கமைய, விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுடன் கடற்படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய பிரதான சந்தேக நபர் முன்னாள் கடற்படைத் தளபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய லெப்டின் கமாண்டர் சம்பத் முனசிங்க ஆவார்.

இதன்படி முனசிங்கவின் லொக்கர் சோதனையிடப்பட்டபோது, காணாமல் போகச் செய்யப்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவங்கள் சில ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன. இந்தச் சம்பவத்தின் ஊடாக உத்தியோகபூர்வ இராணுவுத்தின், நிழற் படையணி குறித்து பல தகவல்கள் வெளிவந்திருந்தன. இன்று இராணுவத்தினருக்காக என்று குரல் கொடுக்கும், சில நபர்களின் விபரங்களும் இதன்மூலம் வெளிவந்திருந்தன.

கடற்படைத் தளபதி கரன்ணாகொட, சம்பத் முனசிங்கவுடன் தனிப்பட்ட தொடர்புகளை வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. சம்பத் முனசிங்கவிற்கு எதிராக கரன்ணாகொட செயல்படுவதற்கு இந்த தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக இருந்திருக்கின்றன. ஏதோவொரு காரணத்திற்காக சம்பத் முனசிங்க மாட்டிக்கொண்டதில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவமும் வெளியில் வர ஆரம்பித்தது.

அக்காலத்தில் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இதன்போது 7 கடற்படை அதிகாரிகளிடம் இதுகுறித்து வாக்குமூலம் பெற்றப்பட்டது. இந்த வாக்குமூலத்திற்கமையவும் பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைகளுக்கமைய கடற்படைத் தளபதி வசந்த கரன்ணாகொடவின் பாதுகாப்பிற்காக இருந்த லெப்டினன் கமாண்டர் சம்பத் முனசிங்கவின் கண்காணிப்பில் செயல்பட்ட பிரிவினரால் குறித்த 11 இளைஞர்களும் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவின் கண்காணிப்பில், லெப்டினன் கொமண்டர் ஹெட்டியாராச்சி முதியான்சலாகே பிசாத் சந்தன வழிநடத்திய, விசேட புலனாய்வுப் பிரிவினரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கொழும்பு சைத்திய வீதியிலுள்ள பிட்டு பம்புவ என்ற இடத்திலும், பின்னர் திருகோணமலையிலுள்ள Gunsite என்ற நிலக்கீழ் முகாமிலும் கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட ரஜீவ் நாகநாதன் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம், இதற்குப் பொறுப்பாக செயற்பட்ட கடற்படை அதிகாரி குறித்த தகவல்களை அவரது தாய்க்கு அறிவித்துள்ளார். ரஜீவ் அறியத்தந்த அனைத்துத் தகவல்களையும் குறித்துக் கொண்ட தாய், அவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார்.

ரஜீவ் அவரது வாகனத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு காலம் இந்த வாகனம் திருகோணமலை முகாமில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் தசநாயக்க அவரது மனைவியின் பிறந்த நாள் பரிசாக ரஜீவ்வின் வாகனத்தை அன்பளிப்புச் செய்துள்ளார். இந்த அனைத்துத் தகவல்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், தன்னை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ராஜீவ் தனது தாயிடம் கோரியுள்ளார். தனது மகனின் விடுதலைக்காக அந்தத் தாய் இந்தியா வரை சென்று முயற்சிகளை முன்னெடுத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்களை விடுப்பதற்காக கப்பம் கோரிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கடற்படையின் முன்னாள் தளதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இன்னும் வரும்...

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top