1150 x 80 px

 

ஜனாதிபதி பதவியை நீடித்துக் கொள்ள மைத்திரிபால முயற்சி?

குறித்த பதவிக் காலத்தின் பின்னர் மேலும் ஒருவருடம், அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வரை பதவி நீடிக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார். இதனை நாளை மறுதினம் அதாவது ஜனவரி 11ஆம் திகதி காலை 11 மணிக்கு உயர் நீதிமன்றம் ஆராயவுள்ளது.

ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமது பதவிக் காலத்திற்கு மேலதிகமாக மேலும் ஒரு வருடம் அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வரை தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து கூறுமாறு கோரப்பட்டுள்ளது.

அதன் மொழியாக்கம் இவ்வாறு வருகிறது.
''அரசியலமைப்பு சரத்துக்களுக்கமைய, தெரிவுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் என்ற ரீதியில், அரசியலமைப்பின் 32(1) சரத்தின் படி 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஜனாதிபதி பதவி வகித்து வரும் எனக்கு, 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலம் குறித்த பதவியில் நீடிக்க ஏதேனும் தடை இருக்கிறதா?'' என உயர் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 129 (1) உப சரத்தின் படி, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டக் கோரியுள்ளதுடன், இந்த நிலைப்பாட்டை ஜனவரி 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்திற்கு அமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக வரையறுக்கப்பட்டமைக்கான காரணம், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிஉச்ச அதிகாரங்களைக் குறைப்பதற்கே ஆகும். இது நல்லாட்சியின் வெற்றியாக இதுவரை கருதப்பட்டது. 2015 ஜனவரி மாதத்தில் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கூறிக்கொண்டு சத்தியப் பிரமாணம் செய்து, ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார். எனினும், தற்போது ஜனாதிபதி முறையை ஒழிப்பதை விட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்தை, மழுங்கடிக்கவே ஜனாதிபதி முயற்சிப்பதாகவே தெரிகிறது.

ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கமைய, சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இதற்காக நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அதாவது ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் பூரத்தியாகியிருந்தது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்றுடன் (9) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்ட்டுள்ள கடிதத்தில், குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் திகதியை 2018ஆம் ஆண்டு எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக தவறுதலாக 2016ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நிறைவேற்று அதிகார முறைக்குச் செல்வதற்கான தேவை ஜனாதிபதி ஏற்பட்டுள்ளதா என்பதே தற்போது கேள்வியாக இருக்கிறது.

ஜனாதிபதி என்ன செய்ய தற்போது முயற்சிக்கிறார்?

My3Letter

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top