1150 x 80 px

 

உதயங்கவை கைதுசெய்ய செல்லத் தயாரான இலங்கை அதிகாரிகளுக்கு வீசா கிடைக்கவில்லை

டுபாயில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க ரணதுங்கவை இலங்கைக்குக் கொண்டுவர டுபாய் நோக்கிப் பயணமாகத் தயாராகிய பொலிஸ் குழு டுபாய் பயணத்தை மேற்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 6.45இற்கு டுபாய் நோக்கிப் புறப்பட்ட விமானத்திலேயே இந்தக் குழுவினர் பயணிக்கத் தயாராகி இருந்தனர். எனினும், இந்த விமானத்தில் குறித்த குழுவினர் பயணிக்க வில்லையென பொலிஸ் உட்தரப்புத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த குழுவில் இருந்த 7 பேரில் 6 பேருக்கு வீசா கிடைக்காமையே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

இந்தக் குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வித்தியாலங்கார, ஜனாதிபதி சட்டத்தரணியும், பிரதி சொலிசிட்டர் ஜெனரலுமான யசந்த கோதாகொட, சட்டமா அதிபர் திணைக்களத்தின் எம்.எல்.ஏ. விசேட சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது கடந்த 4ஆம் திகதி வீசா பெறுவதற்கு தமது ஆவணங்களை வெளிவிவகார அமைச்சில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தக் குழுவினர் பல மணி நேரமாக தமது பயணத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர். நேற்று நாள் முழுவதும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்தை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். எனினும், இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக பிரசாத் காரியவசம் தனது தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.

இந்தக் குழுவினர் பயணமாகவிருந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வித்தியாலங்காரவிற்கு மட்டும் வீசா கிடைத்ததாக எமக்குத் தகவல் கிட்டியது. எனினும், இவருக்கும் 6.45இற்குப் புறப்பட்ட விமானத்தில் டுபாய் செல்ல முடியாது போனது. இதனால் மாற்றுவழி குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலைமையில், உதயங்கவை இலங்கைக்குக் கொண்டுவர பிரதி பொலிஸ்மா அதிபர் மட்டும் தனித்து பயணிக்கப் போகிறரா? அவருடைய குழுவினருக்கு வீசா கிடைக்கும் வரை உதயங்கவை என்ன செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top