1150 x 80 px

 

பணக்காரர் ஆக ஆசையா ? : இவரின் கதையை படியுங்கள்

ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த கார்ல் ரோட்ரிக்ஸ், பாகிஸ்தானில் பிறந்தவர். 1970-ம் ஆண்டின் முற்பகுதியில் பாகிஸ்தானில் அரசியல் மற்றும் சமூக உறுதியற்றத்தன்மை நிலவியதால், இவருடைய அம்மா பாகிஸ்தானைவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், இவரின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. இவருடைய அம்மாவைப் பொறுத்தவரை குழந்தைகள் நன்றாக வளர பாதுகாப்பான ஓர் இடம் வேண்டும்; சிறந்த கல்வியைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால், கார்ல் ரோட்ரிக்ஸின் 11-வது வயதில் பெற்றோர் மற்றும் நான்கு உடன்பிறப்புகளுடன் கனடாவில் குடியேறினர்.

கனடாவில் படித்து முடித்த கார்ல் ரோட்ரிக்ஸ், ஒரு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியில் சேர்ந்து, தன் வேலையைச் சிறப்பாகக் கவனித்து வந்தார். ஒருநாள் திடீரென தன் வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டார். இது இவரின் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `இந்தப் பையனுக்கு என்னாச்சு..? இப்ப இவன் சந்தோஷமா இல்லையா..? ஏன் திடீர்னு வேலையை விட்டுட்டான்?’ என எல்லோரும் விமர்சித்தனர். ஆனால், இன்று அவர் 6,500 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு நிறுவன அதிபர்!

வெற்றிகரமான தகவல் தொழில்நுட்ப ஊழியராகப் பணிபுரிந்து வந்த கார்ல் ரோட்ரிக்ஸ், தன் வேலையை விட்டுவிட்டு ஒரு கணினி அமைப்பு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார். கார்ல் ரோட்ரிக்ஸ் தவறான முடிவை எடுத்துவிட்டார் என அவரது குடும்பம் வருத்தமடைந்தது. கார்ல் ரோட்ரிக்ஸைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு லாபகரமான வேலையைச் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய வீட்டிலேயே ஒரு சிறந்த கணினி தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதில் விருப்பம். ஆரம்பத்தில் அவருக்கு என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பது தெரியவில்லை. கடைசியில் ஒரு யோசனையை கண்டுபிடித்தார். மடிக்கணனி மூலம் கைப்பேசிகளை கட்டுப்படுத்த அனுமதிக்கும் மென்பொருள் அமைப்புதான் அந்த யோசனை.

இதன் மூலம் இவரின் வணிகம் மெதுவாக வளரத் தொடங்கியது. தன் நிறுவனத்துக்கு 2001-ம் ஆண்டில் `சோட்டி’ (Soti) என்றும் பெயரிட்டார். 12 மாதங்களுக்குப் பிறகு, பிரிட்டனின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் குழுமத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதன் பிறகு இந்த நிறுவனம் இவருக்கு 20,000 அலகுகளுக்கு ஒரு `பெரிய ஓடரை’ வழங்கியது. சோட்டி நிறுவனம் படிப்படியாக வளர்ந்து, இப்போது பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது. சோட்டி (Soti) நிறுவனம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இந்த நிறுவனம் நுகர்வோர்களுக்குப் பதிலாக நிறுவனங்களுக்குத்தான் தன் மொபைல் தொழில்நுட்பம் மென்பொருள் அமைப்பை விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனத்தை 2006-ம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் உள்பட பல நிறுவனங்கள் வியாபாரம் பேசின. ஆனால், இவர் அனைத்து ஒப்பந்தங்களையும் நிராகரித்தார். இன்று, சோட்டி நிறுவனம் ஒரு மாபெரும் நிறுவனமாக உருவாகி இருக்கிறது.

கார்ல் ரோட்ரிக்ஸ், சோட்டி நிறுவனத்தை வளர்த்தெடுக்க எந்த ஒரு முதலீடும் யாரிடமும் பெற்றதில்லை. முழுக்க முழுக்க 100 சதவிகிதம் இவர் மற்றும் இவருடைய மனைவியின் முதலீட்டின் மூலம் நிறுவனம் உருவானது. இப்போது சோட்டி நிறுவனத்தை வளர்த்தெடுத்த கார்ல் ரோட்ரிக்ஸின் ஆண்டு வருவாய், 80 மில்லியன் டொலர்கள். 16 வருடங்கள் கழித்து, இவர் உருவாக்கிய சோட்டி (Soti) நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு, இந்திய மதிப்பில் 6,500 கோடி ரூபாய்க்கும்மேல் என மதிப்பிடப்படுகிறது. உலகம் முழுவதும் 17,000 வணிக வாடிக்கையாளர்களும், 22 நாடுகளில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top