திக்வெல்லவிற்கு போட்டி தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி விதிமுறைகளை மீறியதன் மூலம், கடந்த 24 மாதங்களில் 5 எதிர் புள்ளிகளை (Demerit) பெற்றமையினால் குறித்த போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (19) அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற ரி20 போட்டியில் நடுவரின் தீர்ப்பை மதிக்காத வகையில் நடந்து கொண்டதன் மூலம் (ICC யின் ஒழுக்க விதி 2.1.5 இற்கு அமைய), இரு எதிர் புள்ளிகளை பெற்றிருந்தார்.

இதன் மூலம் 30 வீத போட்டிக் கட்டணத்தை தண்டப்பணமாகவும் செலுத்த நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில், துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர், தனது தோள்பட்டையில் பட்ட பந்தை விக்கட் காப்பாளர் பிடியெடுத்த நிலையில், ஆட்டமிழந்ததாக நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன் அடிப்படையில் 5 எதிர் புள்ளிகளைப் பெறும் வீரர் ஒருவருக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட இரு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.

அந்த வகையில் நாளை (22) இடம்பெறவுள்ள ரி20 போட்டி மற்றும் அதனை அடுத்து வரும் பங்களாதேஷுடனான ஒரு நாள் சர்வதேச போட்டியிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top