1150 x 80 px

 

சூழல் மாசு ஏற்படுத்திய இராணுவ கார் பந்தயம் குறித்து விசாரணை!

கடந்த ஓகஸ்ட் 3ம் திகதி தொடக்கம் 8ம் திகதிவரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை மத்தியமாகக் கொண்டு இராணுவ கமான்டோ படை நடத்திய கார் ஓட்ட பந்தயத்தின் மூலம் இடம்பெற்ற சூழல் மாசு தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (22) விசாரணைக்கு வந்தது. மனுவின் பிரதிவாதிகளாக இராணுவ தளபதி, கமான்டோ படை பிரதானி, மத்திய சுற்றாடல் அதிகாரி மற்றும் கரையோரி பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதார் சார்பில் சுத்தமான சூழல் ஆய்வு மத்திய நிலைய தேசிய இணைப்பாளர் ரவிந்ர காரியவசம் உள்ளிட்ட குழு கலந்து கொண்டதுடன் இராணுலத் தளபதி மற்றும் கமான்டோ படை பிரதானியை பிரதிநிதித்துவப்படுத்தி இருவர் கலந்து கொண்டதுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பில் இருவர் பங்கேற்றனர். ஆனால் கரையோர பாதுகாப்பு அதிகார சபை சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த கார் பந்தயத்திற்கு கமான்டோ படை மத்திய சுற்றாடல் அதிகார சபையில் அனுமதி பெற்றிருக்கவில்லை என ரவிந்ர காரியவசம் தெரிவித்தார். கார் பந்தயம் முடிந்து சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராயவில்லை. அப்படி இருக்கையில் சுற்றாடல் மாசு ஏற்படவில்லை என கமான்டோ படை சொல்வது எவ்வாறு என அவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது இராணுவ யுத்த கலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பணத்தில் பெற்ற ஆயுதங்களை இவ்வாறு தனிப்பட்ட ரீதியில் இராணுவம் பயன்படுத்துவது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊனமுற்ற இராணுவத்தினரின் நலன்புரிக்கு இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டதாக இராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதும் பந்தயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில், விளையாட்டு சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக கூறியுள்ளதாக ரவிந்ர சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படி இராணுவம் சார்பில் பங்குபற்றிய அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அறிவுறுத்தியது.

கார் பந்தயம் நடத்துவதற்கு முன் உரிய நபர்களுக்கு முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்த பந்தயத்தில் இராணுவ உயர் அதிகாரி அல்லது அவர்களது வாரிசுகளே பங்கெடுத்தன. இதில் வேறு எந்த நன்மையும் கிடையாது. சுற்றாடலுக்குத் தான் மாசு என்று சூழலியலாளர் ரவிந்ர காரியவசம் குறிப்பிட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top