1150 x 80 px

 

மனித உணவுத் தேவையை ஈடுசெய்ய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அவசியமா?

மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சிகள் மனித குலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவன பிரம்மாக்களின் பணப்பசியை நிச்சயம் ஆற்றும்.

விவசாயமே மனித இனத்தின் முதல் அறிவியல் தொழில்நுட்பம், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொன்ன அந்தத் தொழில்நுட்பம், மெய்யறிவுடன் அறிவியலை அணுகியது தான் அதன் தனித்துவம்.

அந்த அறிவியல், ‘அணி நிழற்காடுகளால் மணி நீர் அவசியம்’ என்றது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கச் சொன்னது. ‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்’ என்று விவசாய விதி கண்டது.

இந்தப் பண்டைய அறிவியல் புரிதலின் நீட்சியாக வரும் தொழில்நுட்பத்தை எந்த விவசாயியம் சூழலியலாளரும் எதிர்ப்பதில்லை. பஞ்சகவ்யமும் ஒற்றை நாற்றுப் பயிரிடலும் அசோஸ்பைரில்லமும் இப்படியான அறம் சார்ந்த அறிவியலில் பிறந்த தொழில்நுட்பங்கள் தான்.

இதையெல்லாம் நுட்பமாய்ப் பார்க்க மறுக்கும் வணிகம்சார் அறிவியலின் தொழில்நுட்பத்தை ஆபத்தானவை எனப்பல அறிஞர்களும் நாடுகளும் எச்சரித்த பின்பும், தவறான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார் ‘விவசாயத்துக்கு எதிரானதா அறிவியல்?’ என்ற கட்டுரையை எழுதிய பி. ஏ. கிருஷ்ணன்.

‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றாலும், புவிவெப்பமாதலின் முழுமுதற் காரணம் விவசாயம் என்பதை மறந்துவிடக் கூடாது என்ற அபாண்டமான பழியை விவசாயத்தின் மீது சாமர்த்தியமாகச் சுமத்தியிருக்கிறார்.

அது எப்போதிலிருந்து? எந்த விவசாயத்தில்? உணவென்பது நிலமொடு நீரே என்று சொன்னவர்களிடமிருந்த விவசாயத்திலா? எல்லோருக்கும் பசியாற்றும் நவீன விவசாயம்’ என்று சொல்லிப் படைக்கப்பட்ட வீரிய ஒட்டு ரகங்களுக்காக மண்ணில் கோடிக் கணக்கில் கொட்டப்படும் உரமும், வீரிய உற்பத்தியில் வலுவிழந்த பயிர்களுக்குத் தேவைப்பட்ட பூச்சிக்கொல்லியும் தான் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தி புவிவெப்பமாதலுக்கு அழைத்துச் செல்கிறது என்பதை, காய்தல் உவத்தல் இல்லாமல் அறம் கொண்டு பணியாற்றும் அறிஞர் அனைவரும் அறிவார்கள். பிரச்சினை அனுபவ விவசாயத்திலா அல்லது வணிகப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் அறமற்ற அறிவியலிலா?

மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் எதற்கு என்று பலரும் இப்போது கேட்கிறார்கள்.

ஏராளமான நீரிழிவு நோயாளிகளை இயன்றளவில் காப்பற்றும் இன்ஸ¤லினை ஏற்றுக்கொள்பவர்கள், ஏன் மரபணு மாற்றிய உணவுக்கு மட்டும் புரட்சி வெடிக்கும் எனக் கொதிக்கிறார்கள்? என்ற ரீதியில் நீயுயோர்க்கர் இதழ் விமர்சித்திருப்பதாக எழுதியிருக்கிறார்.

உணவு மருந்து என்று வாழ்ந்து வந்த இன்னும் வாழ விரும்பும் கூட்டம் நாம். மரபணு மாற்றப் பயிர்கள், நம் பூவுலகு இத்தனை கோடி ஆண்டுகள் கண்டிராத ஒரு புது உயிரினம். இரு மரபணுக்கள் வெட்டி ஒட்டப்பட்டால் எத்தகைய விளைவு தோன்றும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது. உலகின் மூத்த மரபணு விஞ்ஞானி பேரா. மைக்கேல் ஆண்டனி, இந்தியாவில் இந்த மரபணுத் தொழில்நுட்பத்தை முதன் முதலில் சொல்லிக்கொடுத்த வல்லுநர் பேரா. புஷ்ப பார்கவா உள்ளிட்ட பல உலகறிந்த வல்லுநர்களின் கூற்று இது. இன்ஸ¤லினின் அவசியம் உலகறிந்தது. நூற்றுக்கணக்கான கத்தரி வகைகள் ஏற்கெனவே இருக்க, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயின் அவசியம் எதற்கு?

கதிரறுப்பில் ஆரம்பித்து உங்கள் தட்டுக்கு வருவதற்குள் ஆண்டு ஒன்றுக்கு 130 கோடி தொன் உணவை நாம் வீணாக்குகிறோம். கிருஷ்ணன் தரவாகக் காட்டிய ‘கால்நடைக்கெல்லாம் தானியம் போடாதே, அனிமல் ஃபீட் போட்டு வளர்த்துக்கொள்ளலாம்’ என்று அக்கறையாய்(?) சொன்ன நெஷனல் ஜோகிரபிக் அலை வரிசையைப் பின்னின்று நடத்தும் பெரிய அண்ணன்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான் உணவை வீணாக்குவதில் முதலிடம் வகிக்கின்றன. நபர் ஒருவர், ஆண்டுக்கு 95-115 கிலோ உணவை சுமாராக வீணாக்குகிறார்.

ஒரு நாளின் சராசரி தேவையான 2,400 கலோரிக்கு, இப்போது 4,600 கலோரி உற்பத்தி செய்யப்படுகிறது என்று சொல்கிறது. ஐ. ஏ. ஏ.எஸ். டி. டி 2012ல் உலகளவில் கடும் பஞ்சத்தில் 40% இழப்பிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது கூட 223.84 கோடி மெட்ரிக் தொன் கோதுமை உற்பத்தி இருந்தது என யு. எஸ். டி. ஏ. கணக்கிட்டது. அது உலகின் மக்கள் தொகையின் தேவைக்கு, இரண்டு மடங்கு அதிகமான உற்பத்தி விஷயம் இப்படி இருக்க...... ஒட்டுமொத்த விதிகளைக் கபZகரம் செய்ய முனைந்துள்ள நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகுக்கும் சோறூட்டத்தான் என்று பொய் பிரசாரம் செய்கின்றன.

இது மாதிரி போலித் தரவுகள் இன்றைக்கு நேற்றல்ல, “பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வங்காளப் பஞ்சம் முதலான பல பஞ்சங்கள் ஜோடிக்கப் பட்டவை” என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அமர்த்திய சென் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

அடிப்படையில், 1,000 கோடி மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்திக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களே தீர்வு என்ற கருத்தாக்கமே உண்மைக்குப் புறம்பானது. இங்கே எப்போதும் உற்பத்திக் குறைபாடு கிடையாது பகிர்தலில் தான் பிரச்சினை, பாதுகாத்து வைப்பதில் பிரச்சினை உற்பத்திக்குப் பிந்திய செம்மையாக்கலில் பிரச்சினை, எப்போதும் ஏற்றுமதிக்கும் பணக்காரருக்கும் முழு உணவும் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்க ஏழைகளும் கூலியாட்களும் தான் பஞ்சத்தில் இறந்திருக்கின்றனர்.

கட்டுரையில் ஆசிரியர் ஓரிடத்தில். ‘உலகம் முழுவதும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாபத்துக்காகவே இயங்குகின்றன என்பதிலும் ஐயம் இல்லை’ எனச் சொல்கிறார். நன்கைந்து வாக்கியங்களில் அதை எதனாலோ மறந்துவிட்டு, ‘பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சோதனைச் சாலைகளில் பிறந்தவை என்பதனாலேயே அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்களாகிவிடாது. என்று வாதிடுகிறார். அவர்களுக்கு இலாபம்தான் முக்கியம் என்பதை முதலில் சொல்லிவிட்டு அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள அதே அறிவியலை ஏற்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்.

பன்னாட்டு நிறுவனங்களின் விதைக் கதை இப்படி என்றால் இந்திய நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பத்தில் நடந்த கதை இன்னும் பரிதாபத்துக்குரியது. 2009ல் மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், மான் சான்டோவின் பி. டி பருத்திக்குப் பதிலாக பி. என். பருத்தி (பிக்கனேரி நெர்மா பி. டி பருத்தி) என ஒரு ரகத்தை இந்தியாவிலேயே உருவாக்கியது. சொப்போரி தலைமையிலான உயர்நிலைக் குழு அதனை ஆய்ந்ததில், அந்த இந்திய பிக்கனேரி நெர்மா பருத்தியிலும் மான்சான்டோ மரபணு இருப்பது உறுதியானது. இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த மரபணுக் கலப்பும் கூடத் தற்செயலாக நடந்த விபத்தல்ல. திட்டமிட்டே செய்யப்பட்டது என்று ஊகிக்கிறது சொப்போரி குழு.

மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்தியதாகச் சொல்லப்பட்ட பல்கலைக்கழக ஆய்வு வளாகத்திலேயே இந்த மரபணுக் கலப்பு சாத்தியமென்றால், கள ஆய்வுக்கென்று சொல்லி ஊர்நிலத்தில் இது பயிரிடும்போது நிலைமையைக் கொஞ்சம் யோசியுங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சிகள் மனிதகுலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவனப் பிரம்மாக்களின் பணப் பசியை நிச்சயம் ஆற்றும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top