1150 x 80 px

 

வேட்பு மனு வழங்க பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது : துசித பாலசூரிய

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனு வழங்க பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஊழலுக்கு எதிரான முன்னணி என்ற அமைப்பின் இணைப்பாளர் துசித பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்கில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளில் மிக மோசமான ஊழல், மோசடி சம்பவம் மஹரகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும், மஹரகம பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு, பொதுஜன முன்னணியினால் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹரகம நகர சபைக்குச் சொந்தமான 25 வட்டாரங்களில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் போட்டியிட வில்லை என்பதுடன், மஹரகமவில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த குறித்த சுயேட்சைக் குழுவை விலை கொடுத்து வாங்கியதன் மூலம் மிக மோசமாக தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் ஒருவர், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மொட்டுக் கட்சியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்காக பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாகவும், இதற்கு எதிராக குறித்த பெண்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஊழல், மோசடிகள் நிறைந்த இந்த தேர்தல் களத்தில், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பொதுமக்கள் ஆழ்ந்து சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும், இதன்மூலம் உள்ளுராட்சி மன்றங்களில் இடம்பெறவுள்ள ஊழல், மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் துசித பாலசூரிய தெரிவித்தார்.

Top