புதிய யாப்புக்கு இதுவே சிறந்த தருணம்

நாட்டில் வாழும் எந்த இனமும் நாடு ஒன்றை கோராத இந்த காலமானது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான சிறந்த காலம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிய அரசிலமைப்புச் சட்டத்திற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள இனத்தவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்தன.

தமிழ் வேட்பாளர்கள் அல்ல எனக் கூறி அந்த மக்கள் வாக்களிப்பதை நிராகரிக்காது வாக்களித்தன் மூலம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பதை காணமுடிகிறது.

தற்போது மதங்களுக்கு இடையிலான சகவாழ்வு ஏற்பட்டு வருகிறது. இனங்களுக்கு இடையிலும் சகவாழ்வு ஏற்பட்டு வருகிறது. நாம் அணியும் ஆடைகளில் பன்முகத்தன்மை இருப்பது சிறந்தது என அடிக்கடி கூறுகிறோம். இதேபோலதான் இனங்களுக்கு இடையிலும் பன்முகத்தன்மை மிகவும் சிறந்தது.

தமிழ் மக்கள் தற்போது தனிநாட்டை கோரவில்லை. முஸ்லிம் மக்களும் தனிநாடு கோரவில்லை. வெளிநாடுகள் தற்போது எமக்கு குறுக்கீடுகளை செய்வதில்லை.

இது தான் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காக சிறந்த காலம் என தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த கருத்தரங்கில் உரையாற்றிய சட்டத்தரணி பிறிடோ பெர்னாண்டோ,

எதிர்காலம் இல்லாத அரசியல்வாதிகளே புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. இதன் காரணமாகவே அவர் இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்.

மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னர் அவர் எங்களுடன் இணைந்து பணியாற்றவில்லை. எனினும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேற முதுகெலும்பு இருந்ததால் நாங்கள் அவரை மதிக்கின்றோம். வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறே நாங்கள் ஜனாதிபதியிடம் கோருகிறோம்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என சட்டத்தரணி பறிடோ பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top