குப்பைமேட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு !

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

போலீஸ், முப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த சுமார் 1000 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் சிக்கிய பெண்கள், சிறுவர்கள் உட்பட 20 பேரின் மரணங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் நேற்று இரவு பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்த குப்பைமேடு தொடர்பாக பிரதேச மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். சாலையில் இறங்கி போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் பின்புலமே பிரதான தடையாக இருப்பதாக சமூக ஆர்வலர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் ரீதியான பேதங்களை மறந்து இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர்களால் வலியுறுத்தப்படுகின்றது இந்த அனர்த்தம் பற்றியும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான எதிர்கால செயல்பாடுகள் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவிருக்கின்றார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரண சடங்குகளுக்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் எடுக்கப்பட்டுள்ளது.

தாமதமின்றி இழப்பீடுகளை வழங்குதல், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறும் இதற்கான மாற்று கொழும்பு மாநகர சபைக்கு கட்டளை பிறப்பித்தல் மற்றும் தற்காலிகமாக இரு வாரங்களுக்கு குப்பைகளை தொம்பே மற்றும் கரலியான ஆகிய இடங்களிலுள்ள திம்ம கழிவுகள் மையத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top