சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இந்திய வம்சாவளியினருக்கு துரோகம் இழைத்திருக்கின்றது

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான ஒரு சிறந்த ஒப்பந்தமாக இருந்தது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட டிக்கோயா பொதுக் கூட்டத்தில் எமது ஜனாதிபதி தெரிவித்திருப்பது வேதனையளிக்கின்றது. இவ் ஒப்பந்தம் இந்திய வம்சாவளி மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றது. இதுவே எமது தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனினதும் மன வேதனையாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் காலத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழ்நாட்டு வாழ் இந்திய தமிழர்கள் எமது நாட்டில் கடினமாக உழைத்து தேயிலை, இறப்பரின் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். இவர்களது கடின உழைப்பின் ஊடாகவே ஆங்கிலேயர் காலத்தில் மலைநாட்டுக்கான பாதைகள் செப்பனிடப்பட்டன. இருப்பினும் எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பு சிங்கள பேரினவாத தலைவர்கள் சில தமிழ் தலைவர்களுடன் இணைந்து இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதை தடுத்து நிறுத்தினர். அது மட்டுமின்றி இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் ஊடாக அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தவும் முயற்சித்தனர்.


ஆட்சியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவிடம் ஒப்பந்தம் செய்ய முனைந்த பொழுது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக இலங்கையிலேயே வாழ்ந்து விட்டதினால் இவ் ஒப்பந்தத்திற்கு இந்திய பிரதமர் உடன்படவில்லை. ஜவகர்லால் நேருவின் மறைவிற்குப் பின்பு பிரதமராக பதவியேற்ற லால் பகதுர் சாஸ்திரியிடம் சிறிமாவோ பண்டாரநாயக்க இந்திய வம்சாவளி தமிழர்களை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.


இதனால் இந்திய வம்சாவளி தமிழர்கள் ஏழு நபர்களில் நான்கு நபர்களை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன் ஊடாக பல குடும்பங்கள் சிதறிப் போனது. சகோதரர்கள் இந்தியாவிலும் சகோதரிகள் இலங்கையிலும் இருக்கக்கூடிய அவல நிலைமை இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு ஏற்பட்டதை விடயம் அறிந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பலவந்தமாக இரயில்களில் ஏற்றி தலைமன்னாருக்கு கொண்டு சென்று இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டதனால் பாரிய சோகத்திலும் சொல்லனா துயரத்திலும் மலையக தமிழர்கள் வேதனைப்பட்டார்கள். இவ்வாறான இந்த ஒப்பந்தம் மலையக மக்களுக்கு கிடைத்த நல்ல ஒப்பந்தம் என எமது ஜனாதிபதி மேடையிலே தெரிவித்தமை வேதனைக்குரிய விடயமாகும். சில நேரம் இவ்விடயத்தை எந்தவொரு இந்திய வம்சாவளி தலைவர்களும் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கவில்லை என எண்ணுகின்றோம். இருப்பினும் மேடையில் இருந்து வாய்மூடி மௌனம் காத்த இந்திய வம்சாவளி மக்கள் தலைவர்களை நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

இவ் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் இன்று இலங்கையில் இருக்கும்,  இந்திய வம்சாவளி தமிழர்களின் ஜனத்தொகை ஐம்பது விகிதம் அதிகமாக இருந்திருக்கும். ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் ஜனத்தொகை விகிதம் நாட்டின் ஜனத்தொகையில் 25 வீதத்திற்கும் அதிகமாக இருந்திருக்கும். இதனை முறியடிக்க அன்று சிங்கள பேரினவாதம் சில தமிழ் தலைவர்களின் உதவியுடன் இத்துரோக ஒப்பந்தத்தை உருவாக்கியதை வரலாறு தெரிந்த தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top