LED மின்குமிழ்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்குமிழ்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

LED மின்குழிழ்களை வழங்குவதன் மூலம் மேலதிகச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். குறைந்தளவிலான மின்சாரத்தை நுகரும் நுகர்வோருக்கிடையில் பயன்படுத்தப்படும் அதிக மின் விரயமாகும் மின்குமிழ்களுக்குப் பதிலாக மிகவும் வினைத்திறன் மிக்க LED மின்குமிழ்களை பாவிக்கும் வகையில், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இவை வழங்கப்படவுள்ளன.

குறித்த மின்குமிழ்களை, சலுகை விலைத்திட்டத்தின் கீழ், மின்சார நுகர்வோருக்கு இடையில் பகிர்ந்தளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வட்டியில்லா 24 தவணைகளில், மாதாந்த மின்கட்டணத்துடன் அறவிடுவதற்கு முடியுமான முறையில் குறித்த மின்குழிழ்களை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் 1-30 வரையான மின் அலகுகளைப் பாவிக்கும் வீடுகளுக்கு 2 மின்குமிழ்களும், 30-60 வரையிலான மின் அலகுகளைப் பாவிக்கும் வீடுகளுக்கு 3 மின்குமிழ்களும், 60-90 வரையிலான மின் அலகுகளைப் பாவிக்கும் வீடுகளுக்கு 4 மின்குமிழ்களும் வீதம் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான 10 இலட்சம் LED மின்குமிழ்களை, விலை மனுக்கோரலின் மூலம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top