ரவி விரைவில் பதவி விலகுவார் - மஹிந்த அமரவீர

மத்திய வங்கி பிணைமுறி கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பிணைமுறி கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நல்லாட்சி அரசாங்கம் என்பவற்றை நெருக்கடிக்குள் தள்ளாத வகையில் மிகச் சிறப்பான முடிவொன்றை எதிர்வரும் தினங்களில் எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.

சுதந்திரக் கட்சி என்ற வகையில் எங்கள் தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளோம் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுதந்திரமாக விசாரிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அந்த வகையில் அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினங்களில் அது தொடர்பான சிறந்த முடிவொன்றை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையுள்ளது.
அத்துடன் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டு மட்டுமன்றி முன்னைய அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்கள் மீதான விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். அவை தற்போதைக்கு நீதிமன்ற விசாரணைகளில் இருக்கின்றன. இந்த அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.
எனினும் முன்னைய அரசாங்கத்தின் ஊழல் குற்றவாளிகள் தொடர்பான விசாரணைகளும் உரியமுறையில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top