அமைச்சர் ரவி செல்ல வேண்டிய பாதை..

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் வாதப் பிரதிவாதங்களுக்கு குறைவில்லாமல் உள்ளது. 

பிணைமுறை மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அளித்த வாக்குமூலத்தின் பின் வௌியான சில குற்றச்சாட்டுக்களினால் ரவி கருணாநாயக்க பிரபல்யமடைந்துள்ளார். 

குறித்த விசாரணை இன்னும் நிறைவுறவில்லை என்பதுடன் விசாரணை அறிக்கையும் வௌியிடப்படாத நிலையில் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்துவது நியாயமானதல்ல. இது சட்டத்தின் முன் இருக்கிறது. ஆனால் ஆணைக்குழுவிற்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் முழு பொறுப்பையும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவே ஏற்க வேண்டும். சட்டத்திற்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவிற்கு உள்ளது. அதன்படி நாடே இன்று முணுமுணுத்துக் கொண்டிருக்கும் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனந்திறந்து மக்கள் மத்தியில் கருத்து வௌியிட ரவி கருணாநாயக்க முன்வர வேண்டும். 

கூட்டு எதிர்கட்சியின் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்காக ரவி கருணாநாயக்க மக்களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை. காரணம் அமைச்சர் ரவி பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை. அமைச்சர் ராஜித கூறியது முற்றிலும் உண்மை. முழுத் திருடர்களான ராஜபக்ஷவும் அவரது கூட்டு எதிர்கட்சி கூட்டமும் ரவி பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். ராஜபக்ஷக்கள் மீதான ஊழல் மோசடியுடன் ஒப்பிடும்போது ரவி மீதான குற்றச்சாட்டு துளி அளவே. 
ஜனவரி 8ம் திகதி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த உதவிய வாக்காளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடமை ரவி கருணாநாயக்கவிற்கு உள்ளது.

குற்றவாளிகளை காப்பாற்றவும் குற்றத்தை மூடி மறைக்கவுமே பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி, ஆணைக்குழு அமைத்துள்ளதாக அன்று விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் கூறினர். ஆனால் அமைச்சரவை அமைச்சர் ஒருவரை விசாரணை செய்து நாட்டு மக்கள் முன் அம்பலப்படுத்தும் நிலைக்கு குறித்த ஆணைக்குழு சுயாதீனமாக இயங்குகிறது. ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இவ்வாறு நடந்ததா என கேள்வி கேட்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 

எனவே இந்த ஆரோக்கியமான ஜனநாயக நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஜனவரி 8ம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய அதே நாட்டு மக்கள் கரங்களிலும் சிவில் அமைப்புகளிடத்திலும் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறோம்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top