எல்லாவற்றையும் விற்று பிரச்சினையை தீர்க்க முயற்சி - சுசில்

நல்லாட்சி என்று கூறிக்கொண்டாலும் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் நல்லாட்சியை காணமுடியாதிருப்பதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சுசில் பிறேமஜயந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகிய தமது கட்சி முக்கிய தீர்மானமொன்றை விரைவில் எடுக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் சுசில் பிறேமஜயந்த், தற்போதைய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளில் எந்தவொரு நல்லாட்சிக்கான அறிகுறிகளையும் காணக் கிடைப்பதில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

இதன்போது நல்லாட்சி இல்லாத அரசாங்கத்தில் எவ்வாறு தொடர்ந்து அங்கம் வகிக்கின்றீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிணை முறி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரான எமது நிலைப்பாட்டை நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மிகத் தெளிவாக கூறியிருந்தோம்என்று குறிப்பிட்ட அமைச்சர் சுசில் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கூடிய விரைவில் அம்பலத்திற்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top