அரசியல் கைதிகளையும், தமிழரையும் தண்டிக்கவே முயற்சிக்கப்படுகிறது: அருட்தந்தை சக்திவேல்

தமிழ் அரசியல் கைதிகளையும், தமிழர்களையும் தண்டிக்கவே சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டு செயல்படுவதாக அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்ளும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் இன்று தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே போதகர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அருட்தந்தை எம்.சக்திவேல்,
உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் இந்த அரசாங்கமும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து அனைவருக்கும் முறையிடப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். ஆகவே, தமிழ் மக்களின் எழுச்சி வேறொரு வடிவில் தற்போது நிகழக்கூடும். இது தான் அரசாங்கம் தேவையாகியிருக்கிறதா? அரசியல் கைதிகள் உயிரிழப்பது தான் இந்த அரசாங்கத்திற்கு தேவையாகி இருக்கிறதா? இந்த மூன்று அரசியல் கைதிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு நடந்துகொண்டது என்பது குறித்து கடந்த காலங்களைப் பார்த்தால் எங்களுக்கு நன்கு தெரியும். சிங்களவர் குறித்து ஒருவிதமாகவும், தமிழர் குறித்து வேறுவிதமாகவும் நடந்துகொள்வதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்களம் பேசும் பிரதேசத்திற்கு இந்த வழக்கை மாற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசியல் கைதிகள் சார்பாக முன்னிலையாவதற்கு சட்டத்தரணியொருவர் இருக்கவில்லை. இதன்போது அரசாங்கம் அவர்களுக்கு சட்டத்தரணியொருவரை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அன்று கூறியது. இதுதான் பிரச்சினை. அநுராதபுரத்தில் இவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாவதில்லை. சட்டத்தரணியொருவரைப் பெற்றுக்கொள்வதாயின் அவருக்கு பெருந்தொகை பணத்தை செலுத்தவேண்டியிருக்கிறது. யார் இதனை செலுத்துவது? அவர்களின் பெற்றோர் வறியவர்கள். ஏழைமையில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள முடியவில்லை. இவ்வாறிருக்க அரச சட்டத்தரணியொருவர் முன்னிலையானால் என்ன நடக்கும்? அவர்கள் சார்பாக அந்த சட்டத்தரணி பேச மாட்டார். தண்டனை தான் அந்த அரசியல் கைதிகளுக்கு கிடைக்கும். அப்படியாயின் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியுள்ளது. இந்த மூவரை மாத்திரமன்றி, அனைத்து அரசியல் கைதிகளையும் தண்டிக்க சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கிறது. இதன் ஊடாக தமிழர்களையும் தண்டிக்கவே முயற்சிக்கின்றனர். அதனால், இந்தத் தண்டனையை ஏற்க தமிழர்கள் தயார் இல்லை. அதனால் தான் அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். என்ன நடக்கப் போகிறது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். அதனால் தான் இந்த போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.'' என்று தெரிவித்தார்.

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top