ஐ.நா. பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே ஐ.நா. பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கை வந்துள்ளார்.

நேற்று திருகோணமலைக்கு சென்றிருந்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள, போரில் படுகொலையானவர்களின் நினைவு தூபியை பார்வையிட்டதோடு போரின் எச்சங்களாக மிஞ்சியுள்ள அடையாளங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் தமது முறைப்பாடுகளை குறித்த குழுவினரிடம் முன்வைத்தனர்.

கடந்த மே 18 அன்று குறித்த சின்னப்பர் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நினைவு கற்கள் அமைக்கப்பட்டு நடைபெறவிருந்த நிகழ்வு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடை விதிக்கப்பட்டதோடு அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைக்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top