யாழில் ஹர்த்தால்: கண்காணிப்பில் இராணுவம்

அநுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதிலும் முழு கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை மாற்றக் கூடாது எனக் கோரியும் வடமாகாணம் முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை, யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

இதனால் யாழ் நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அரச, தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. அரச, தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை. வீதிகள் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள கூறுகின்றன.

கிளிநொச்சியில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் அரச பேருந்துகள் இயங்குவதாகவும் 90 வீதமான வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகள், தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை.

வவுனியாவிலிருந்து வடக்கிற்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு முழுமையாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாகத் தெரிகிறது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது.

முல்லைதீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு ஸ்ரீலங்கா இராணுவத்தின் பவல் வாகனங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

யுத்தகாலத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த இராணுவத்தின் பவல் வாகனங்கள், தற்போது மக்கள் போராட்டங்களை கண்காணித்து வருகின்றன.

maja

maja1

maja3

maja5

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top