முல்லைதீவில் சுவீகரித்த காணிகளுக்கு பதில் மாற்றுக்காணி

முல்லைதீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டம் முல்லைதீவு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தமர்வில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் வருவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் வராததன் காரணத்தால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 225 தமிழ்மக்களின் 835 ஏக்கர் நீர்ப்பாசன காணிகள் மீள மக்களுக்கு வழங்கப்பட முடியாத நிலையில், அதற்கு பதிலாக வேறு நீர்ப்பாசன குளங்களுக்கு கீழ் மாற்று காணிகள் கொடுப்பதற்குரிய இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், இதனை மக்களுக்கு பகிந்தளிப்பது தொடர்பில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட இருந்ததாகவும், இருப்பினும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் வருகை தராத காரணத்தால் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்

எனினும் மானாவாரி காணிகளை அந்தந்த உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பாக ஒரு நபர் இரண்டு ஏக்கர் மாத்திரமே வைத்திருக்க முடியும் எனவும், அதற்கு மேலதிகமாக வைத்திருந்தால் அவற்றை அவர்களின் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியும் எனவும் இதற்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top