தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஊழலில்? பகிரங்கப்படுத்தும் நாமல்

பிவிதுரு (தூய்மையான) ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊழலில் ஈடுபட்டுள்ளதாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி நாமல் ராஜபக்சவின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உதய கம்மன்பில, அவரது மனைவி, பிள்ளைகளுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், மோசடியான முறையில் பணம் சேர்த்தே இவற்றை அவர் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு (SIU) தகவல்களுடன், முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுத் தகவல்களின்படி,
03 Austral Court Wheelers Hill Vic 3150 என்ற இலக்கத்தில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும், அபேகோன் குணரத்ன என்பவருடன் இணைந்து, அவுஸ்திரேலியாவில் தனியார் நிறுவனமொன்றையும் (13/2/14ABN 168039147 பதிவு இலக்கம்) ஆரம்பித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் பெயரில் பாரியவிலான சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சொத்துக்களின் தற்போதைய பெறுமதி 781,538,385.97 இலங்கை ரூபா எனவும் தனது சாட்சியத்தில் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பொய்யான தகவல்களின் அடிப்படையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில மறுத்திருந்தார். அத்துடன், இதற்காக நட்டஈடு கோரி சட்டத்தரணி நாமல் ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இவற்றை வெளிப்படுத்திய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக நேற்று (12) ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார்.

இதன்போது கருத்துரைத்த சட்டத்தரணி,
அவுஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் இணைந்து உதய கம்மன்பில நிறுவமொன்றை ஆரம்பித்து, சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் இதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இந்த சொத்துக் கொள்வனவின்போது அவுஸ்திரேலியாவில் காணி பதிவு அலுவலகத்தில் பதியப்பட்ட குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், உதய கம்மன்பிலவின் மனைவி அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும், அவர் உதய கம்மன்பிலவுடன் நிறுவனம் ஆரம்பித்த அவரது நண்பரின் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியிட்டார். உதய கம்மன்பிலவின் மனைவியும், அவரது பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top