அரசியல் பயணத்தில் கோதாபய எப்போதும் இருப்பார்! பசில்

நாட்டைப் பாதுகாக்கும் அரசியல் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கோதாபய ராஜபக்‌ஷ எப்போதும் இணைந்திருப்பார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பசில் ராஜபக்ச,
தேசிய அரசியல் நிலமைகளைக் கருத்தில்கொண்டு எதிர்வரும் காலங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளை நெறிப்படுத்துவார். ஏனெனில் நாடு பிளவுபடக்கூடாதென்பதற்காக அவர் கடுமையாக உழைத்தவர்.
எனவே நாட்டைப் பிரிக்கும் வேலைத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டால் அதனைத் தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு தலைமை வகிப்பார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இதுவரை காலமும் தேர்தல் வேலைத்திட்டங்களில் தொடர்புபடவில்லை. எனினும் தேசிய பிரச்சினைகள் எழுகின்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அவர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். மேலும் நாடு பிழவுபடுவதனைத் தடுப்பதற்காக அவர் தனது உயிரையும் துச்சமெனக் கருதி செயற்பட்டவர். ஆகவே நாட்டைப் பிரிக்கும் வேலைத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டால் கோத்தபாய ராஜபக்ஷ அதற்கெதிரான வேலைத்திட்டங்களுக்கு தலைமை வகிப்பதற்கு முன்வருவார். அத்துடன் “எலிய” அமைப்பினூடாக அவர் தற்போது நாட்டைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நாம் முன்னெடுக்கவுள்ள அரசியல் நடவடிக்கையும் நாட்டைப் பாதுகாக்கும் வேலைத்திட்டமாகவே அமையவுள்ளது. ஆகவே அவர் “எலிய” அமைப்பின் மூலமும் பங்களிப்பை வழங்கலாம். அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ இதுவரை காலமும் தேர்தல் மேடைகளில் ஏறாவிடத்தும் 2005 மற்றும் 2010 ஆண்டு காலப்பகுதியில் எமது
வேலைத்திட்டங்களில் இணைந்திருந்தார். அது மாத்திரமல்லாது 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட நாம் அரசியல் நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கியுள்ளோம்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top