பசில் ராஜபக்சவின் இனவாதமே உள்ளூராட்சி தேர்தலின் இழுபறிக்கு காரணம் - வேலு குமார் எம்.பி

கடந்த அரசாங்கத்தில் பசில் ராஜபக்சவின் தலைமையிலே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை திருத்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டாரங்களுக்குரிய எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இரண்டுமே இன வாத அடிப்படையில் சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமையை முற்றாக அழித்தொழிப்பதாகவே அமைந்திருந்தது.

இவர்களால் முன்வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் முறை வட்டாரத்தில் இருந்து 70% உம் வீதாசார அடிப்படையில் 30% உம் என உறுப்பினர் தெரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. எனினும் இதன் உண்மை நிலை வட்டார ரீதியாக 78% உம் வீதாசார அடிப்படையில் 22% உம் எனவே காணப்பட்டது. ஆனால் இன்று இதனை நாம் வட்டார ரீதியாக 60% எனவும் வீதாசார அடிப்படையில் 40% எனவும் மாற்றி அமைத்து இருக்கின்றோம். அத்தோடு வாட்டாரங்களின் எல்லை மீள் நிர்ணயத்தில் மிகுந்த பாகுபாடு காட்டப்பட்டு இருந்தது.

தமிழ் முஸ்லீம் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இருந்த பிரதேசங்கள் திட்டமிட்டு அந்த வாய்ப்பை இல்லாதொழிக்கும் வகையில் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பெரிதும் பாதிப்படைவதற்குரிய நிலைமை உருவாக்கப்பட்டு இருந்தது. இன்று இந்த எல்லை மீள் நிர்ணயத்திலும் திருத்தங்கள் கொண்டுவந்து ஓரளவேனும் சிறுபான்மை மக்கள் திருப்த்தியடையக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப் பின்னணியே இன்றைய உள்ளூராட்சிமன்ற தேர்தலின் இழுபறிக்கு காரணமாகும். இன்று இதனை மறந்துவிட்டு நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகரிப்பதே உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலதாமதம் ஆவதற்கான காரணம் என பசில் ராஜபக்ச குறிப்பிடுவது பொருத்தமற்றது.

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மலையக மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையாகும். அதனை இருந்த அரசாங்கங்கள் இயலுமான அளவு காலம் தாழ்த்திவிட்டது. இதற்கு மேலும் இதனை காலம் தாழ்த்த இடமளிக்க முடியாது. முன் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முதல் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதுவே த.மு.கூ இன் நிலைப்பாடாகும். அன்று உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறை திருத்தம் மற்றும் எல்லை மீள் நிர்ணயம் என்பவற்றை பரந்த நோக்கோடு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நோக்கி இருந்தால் இன்று இன் நிலைமை தோன்றி இருக்காது.

எனவே சற்று பொறுங்கள். நாம் தேர்தலை வைக்க வேண்டாம் என கூறவில்லை. தேர்தலை இழுத்தடிக்க முயற்சிக்கவும் இல்லை. தேர்தலை நடத்துமாறே கூறுகின்றோம். ஆனால் அதற்கு முன்னர் எமது சமூகத்தின் நீண்டநாள் அபிலாஷை நிறைவேற்றப்பட வேண்டும்.

இல்லையேல் அன்று இருந்த அமைச்சர்கள் போல் நாமும் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். எமது மக்களின் அபிலாஷைகளை உரக்க சொல்வோம். எமது நிலைப்பாட்டை தளராது முன் வைப்போம். எனவே உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை விரைவு படுத்த வேண்டுமெனில் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூர் ஆட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வேலையை பாருங்கள்

- ஊடகப் பிரிவு அசோக் குமார்

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top