1150 x 80 px

 

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்தும் அதியுச்ச முயற்சியில் ஐ.நா. அதிகாரி

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையிலோ அன்றேல் வெளிநாட்டிலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமை தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் எச்சரித்துள்ளார்.

கொழும்பு ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று (22) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பப்லோ டி கிரீஃப் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முதலாவது விஜயத்தை ஆரம்பித்த பப்லோ டி கீரிப் இம்முறை ஐந்தாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசியிருந்தார்.

14 நாட்கள் நீடித்த இந்த விஜயத்தின் போது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு பல்வேறு சமூகத்தையும் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரோடும் சந்திப்பு நடத்தினார்.

விசேடமாக இறுதிப்போரில் சொல்லோணா துயரைச் சந்தித்து இன்னமும் வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் தரப்பினரோடும் விரிவான சந்திப்புக்களை நடத்தி அவர்களது துயரங்களைக் கேட்டறிந்திருந்தார்.

இந்த சந்திப்புக்களில் இருந்து கசப்பான உண்மைகளை அறிந்தவராக பப்லோ அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் காணப்படும் தாமதங்கள் தொடர்பில் ஏமாற்றத்துடன் கூறினர்.

இந்த தாமதங்கள் விரிவான நிலைமாறு கால நீதி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது' என பப்லோ சுட்டிக்காட்டினார்.

இலங்கை நிலைமாறு கால நீதியை முன்னெடுப்பதில் காண்பிக்கும் தாமதம் காரணமாக தொடர்ச்சியாக அதன் நன்மைகளை அடைந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

உண்மை, நீதி, இழப்பீடு, மீள நிகழாமைக்கான உறுதிப்பாடு அடங்கலாக மாறுபட்ட நிலைமாறு கால நீதி பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான கால அட்டவணை அடங்கலான விரிவான நிலைமாறு கால நீதி மூலோபாய திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐநா விசேட அறிக்கையாளர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top