1150 x 80 px

 

ஐ.தே.க. - சு.க இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ராஜித்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்திற்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லையென சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறித்து லங்கா நியூஸ் வெப் இணையம் அவரிடம் கேட்டபோதே, அவ்வாறு எந்தப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர்,
''2015ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். அப்போது 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதன்படி தற்போதைய ஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல் காலத்தில் நாம் வாக்குறுதி வழங்கியதற்கு அமைவாக நாம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாக வரையறுத்துள்ளோம். அதனை தற்போதைய ஜனாதிபதியின் முழுமையான இணக்கத்துடன் செய்யப்பட்டது.

எனினும், தற்போதைய ஜனாதிபதி ஆறு வருடமா? அல்லது ஐந்து வருடமா? பதவி நீடிக்க வேண்டும் என்பதே தற்போதைய பிரச்சினையாகும். இதனை ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கோ தீர்மானிக்க முடியாது. ஜனாதிபதி இதுகுறித்து நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிய முற்பட்டுள்ளார். இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ எவ்வித பிரச்சினையும் இல்லை. உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டிற்கமைய அரசாங்கம் செயல்படும்.'' என்று தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே உள்ள நெருக்கடி குறித்து நாம் இதன்போது அமைச்சரிடம் கேள்வியெழுப்பினோம். இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
''நீங்கள் கேட்பதைப் போல, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அதிகார போதையில் இருக்கும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் கட்டுக்கதை இது. அதிகார போதையில் ஜனாதிபதி இந்தப் பதவிக்கு வரவில்லை. அத்துடன், ஜனாதிபதி இந்தப் பதவியில் இருக்க முக்கியக் காரணம் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகும்.

''தான் ஏறிவந்த ஏணியை ஜனாதிபதி ஒருநாளும் உதைக்கமாட்டார். இதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. எமக்கு மட்டுமல்ல பிரதமருக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமரையோ, ஐக்கிய தேசியக் கட்சியையோ ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டார்'' என்று தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top