1150 x 80 px

 

உதயங்கவை அழைத்து வரும் முயற்சி தோல்வி : இராஜதந்திர நெருக்கடி வலுத்தது

டுபாயில் கைதுசெய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, இலங்கைக்கு அழைத்து வருவதற்காக டுபாய் சென்ற இலங்கைக் குழுவினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த முயற்சி வெற்றியளிக்காததை அடுத்து அவர்கள் வெறும் கைகளுடன் நாடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர். இதன்போது உதயங்க விவாகரம் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நெருக்கடியாக மாறியுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய அரபு இராஜ்ஜித்தியத்திற்குத் தேவையான குற்றவாளிகள் சிலர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை தம்மிடம் கையளிக்குமாறு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் கோருவதாகவும் தெரியவருகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தின் போது பல பிரபல்யங்கள் டுபாயில் பில்லியன் கணக்கான முதலீடுகளை டுபாயில் முதலீடு செய்துள்ளனர். இதில் உதயங்க வீரதுங்கவும் அடங்குவதாக தெரியவருகிறது. இதனால் இவர்களைப் பாதுகாப்பதற்காக டுபாய் அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் தெரியவருகிறது.

டுபாயில் முதலீடு செய்பவர்களுக்கு தேவையான அனைத்துப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்பதை டுபாய் கொள்கையாக கடைபிடித்து வருகிறது. இதனாலேயே உதயங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதில் தற்போது இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top